டயர் உற்பத்தி மூலப்பொருட்களுக்கு சுங்க வரியை குறைக்க கோரிக்கை
டயர் உற்பத்தி மூலப்பொருட்களுக்கு சுங்க வரியை குறைக்க கோரிக்கை
ADDED : ஏப் 30, 2026 01:05 AM

புதுடில்லி : இறக்குமதியாகும் மூலப் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு கோரி, இந்திய வாகன டயர் உற்பத்தியாளர்கள் சங்கம் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. மேற்காசிய போர் பதற்றத்தால், வினியோக தொடர் பாதிக்கப்பட்டு, மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதே, இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் அருண் மாமென் கூறியதாவது:
கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீட்டு செலவுகள் அதிகரிப்பு, வினியோக தாமதம், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை முக்கிய பிரச்னைகளாக உள்ளன. இத்தகைய சிக்கலான சூழலில் கொள்கை ரீதியான ஆதரவு கிடைப்பது அவசியமாகும்.
தற்போது, செயற்கை ரப்பர் மற்றும் குறிப்பிட்ட மூலப்பொருட்களுக்கு ஜூன் 30 வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் போதாது, டயர் உற்பத்திக்கு தேவையான கார்பன் பிளாக், இதர ரசாயன மற்றும் மூலப்பொருட்களுக்கும் சேர்த்து விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல், எல்.பி.ஜி., தட்டுப்பாட்டின் காரணமாக, டயர்களில் பயன்படுத்தப்படும் பீட் ஒயர் உற்பத்தி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மூலப்பொருட்களின் விலை உயர்வால், சியட் நிறுவன டயர்களின் விலை, மே மாதம் முதல் ஐந்து சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட, இரு மடங்கு அதிகம்.
