நிலக்கரி எரிவாயு திட்டத்துக்கு ரூ.37,500 கோடி ஊக்கத்தொகை
நிலக்கரி எரிவாயு திட்டத்துக்கு ரூ.37,500 கோடி ஊக்கத்தொகை
ADDED : மே 04, 2026 05:27 AM

அரசு பரிசீலனை
புதுடில்லி: நாட்டில் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கவும், எரிபொருள் இறக்குமதியை குறைக்கவும், நிலக்கரியை எரிவாயுவாக்கும் திட்டங்களுக்கு 37,500 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்க மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளது.
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
'நிலக்கரி வாயுவாக்கம்' என்று அழைக்கப்படும், நிலக்கரியை வேதியியல் மாற்றத்திற்கு உட்படுத்தி, மாசு குறைவான எரிவாயுவாக மாற்றும் திட்டங்களுக்கு 37,500 கோடி ரூபாய் ஊக்கத்தொகை அளிக்க, மத்திய நிலக்கரி அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. இதற்கு விரைவில் அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளது.
எல்.என்.ஜி., யூரியா இறக்குமதியை குறைப்பதே இதன் முக்கிய நோக்கம். முன்பு இத்திட்டத்தில் தனியாருக்கு 1,000 கோடி ரூபாயும், அரசு நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 1,350 கோடி ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.
தற்போது இந்த பிரிவுகளை நீக்கிவிட்டு, அனைத்து திட்டங்களுக்கும் அதிகபட்சமாக 3,000 கோடி ரூபாய் வரை நிதியுதவி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், 2030-க்குள் 10 கோடி டன் உற்பத்தியை எட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.
