தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் : பாலிசி மேனேஜ்மென்ட் இனி 'ஈஸி' 'இ--இன்சூரன்ஸ்' தரும் சூப்பர் வசதி

டெக்னிக்கல் அனாலிசிஸ் : பாலிசி மேனேஜ்மென்ட் இனி 'ஈஸி' 'இ--இன்சூரன்ஸ்' தரும் சூப்பர் வசதி

டெக்னிக்கல் அனாலிசிஸ் : பாலிசி மேனேஜ்மென்ட் இனி 'ஈஸி' 'இ--இன்சூரன்ஸ்' தரும் சூப்பர் வசதி


ADDED : மே 11, 2026 02:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 02:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதலீடு செய்வது, சேமிப்பது, அபாயங்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது இவை எல்லாமே இன்று மிகவும் நுணுக்கமான விஷயங்களாக மாறிவிட்டன. அவற்றை நிர்வகிப்பது, தொடர்ந்து அப்டேட் செய்து செயல்பாட்டில் வைத்திருப்பது கூட சுலபமான வேலை இல்லை. தினசரி வாழ்க்கை, வேலை பொறுப்புகள் ஆகியவற்றின் நடுவில் எதையும் தவறவிடாமல் ஒழுங்காக பராமரிப்பது சவாலாக இருந்தாலும், அதை சரியாக செய்வது மிகவும் முக்கியம்.

இந்த பின்னணியில்தான், உங்கள் முதலீடுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க உதவும் ஒரு 'டாஷ்போர்டு' அமைக்க வேண்டும் என்று முன்பே பார்த்தோம். அதில், நாமினி விபரங்கள், ஆவணங்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றன போன்ற தகவல்களும் இருக்க வேண்டும்.

மேலும், முதிர்வு தேதி, புதுப்பிப்பு தேதி, கூடுதல் முதலீடு செய்ய வேண்டிய நேரம், பிரீமியம் கட்ட வேண்டிய நாள் போன்றவற்றையும் கண்காணிக்க வேண்டும்.

இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு இதை செய்ய ஒரு ஆன்லைன் வசதி உள்ளது. ஆயுள் காப்பீடு முதல் பொது காப்பீடு வரை, உங்கள் அனைத்து பாலிசிகளையும் ஒரே இடத்தில் பதிவு செய்து கண்காணிக்க இந்த வசதி உதவுகிறது.

அதற்கு பெயர் 'இ - இன்சூரன்ஸ் அக்கவுண்ட்'. இது புதிய வசதி அல்ல; 12 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது. 'என்.எஸ்.டி.எல்., - சி.டி.எஸ்.எல்., கார்வி இன்சூரன்ஸ் ரிபாசிட்டரி, கேம்ஸ் ரிபாசிட்டரி சர்வீசஸ்' போன்ற அமைப்புகள் வாயிலாக இ - இன்சூரன்ஸ் அக்கவுண்டை திறக்கலாம். இவற்றின் இணையதளங்களில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையெனில் உங்கள் இன்சூரன்ஸ் இடைத்தரகர் உதவியுடன் செயல்முறையை முடிக்கலாம்.

இதை தொடங்கிய பின், சில கிளிக்குகளிலேயே உங்கள் அனைத்து பாலிசிகளின் விபரங்களையும் பார்க்க முடியும். முக்கியமான தேதிகள், கட்டண காலக்கெடுகள் போன்றவற்றை நினைவூட்டும் அலெர்ட்களும் கிடைக்கும்.

ஒரு பாலிசியின் நகல் தேவைப்பட்டாலும் அல்லது ஏதேனும் காரணத்திற்காக அதை சமர்ப்பிக்க வேண்டியிருந்தாலும், இந்த இ - அக்கவுன்ட் மிகவும் உதவியாக இருக்கும். உங்கள் முகவரி அல்லது மொபைல் எண்ணை மாற்ற வேண்டுமென்றால், ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கும் தனித்தனியாக கடிதம் எழுத வேண்டிய அவசியமில்லை. இ.ஐ.ஏ., வாயிலாக ஒரே முறையில் மாற்றிவிடலாம்.

அதேபோல், நாமினி விபரங்களை சரிபார்ப்பது, மாற்றுவது, மறுபடி 'கே.ஒய்.சி.,' செய்வது, வங்கி 'இ.சி.எஸ்.,' கட்டாயம் என்பதை மாற்றுவது போன்ற வேலைகளும் மிகவும் எளிதாகிவிடும்.

ஒருவருக்கு ஒரு இ.ஐ.ஏ., மட்டுமே இருக்க முடியும். ஆனால், அதில் இந்தியாவில் உள்ள எந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஆயுள், பொது காப்பீடு, மருத்துவ காப்பீடு, பென்ஷன்/அன்யூட்டி திட்டங்கள் என அனைத்து பாலிசிகளையும் சேர்த்து கொள்ளலாம். இதற்கான லாகின், பாஸ்வேர்டு வழங்கப்படும்.

அதோடு, உங்கள் இன்சூரன்ஸ் போர்ட்போலியோவின் ஆண்டு அறிக்கையும், தேவையான அலெர்ட்களும் கிடைக்கும்.

உங்கள் இன்சூரன்ஸ் பாலிசிகளை போலவே, இந்த அக்கவுண்டுக்கும் நாமினி நியமிக்கலாம். நீங்கள் உயிரிழந்தாலோ அல்லது உடல்நலக்குறைவால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டாலோ, உங்கள் கணக்கை நிர்வகிக்க ஒருவரை அங்கீகரிக்கலாம்.

ஆனால், அவர் பாலிசி தொகையை பெறும் உரிமையாளர் ஆக மாட்டார். அதற்காக தனியாக நாமினி அல்லது அசைனி ஆக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது உங்களிடம் உள்ள காகித பாலிசிகளையும் டிமேட் வடிவமாக மாற்றி இ.ஐ.ஏ.,வில் சேர்க்கலாம். இனி வாங்கும் பாலிசிகளை நேரடியாக மின்னணு வடிவிலேயே பெறலாம்.

ஒரு விஷயத்தை நினைத்து பாருங்கள். வீடு மாறலாம். வெள்ளம், தீ விபத்து போன்றவை ஏற்படலாம். சிலநேரம், பாலிசி ஆவணங்களை எங்கே வைத்தோம் என்பதையே மறந்து விடலாம். ஆனால், இ.ஐ.ஏ., இருந்தால் இத்தகைய சூழல்களிலும் உங்கள் இன்சூரன்ஸ் பதிவுகள் பாதுகாப்பாக இருக்கும்.

மேலும், சில பாலிசிகளில், குறிப்பாக மருத்துவ காப்பீட்டில், ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து மற்றொன்றுக்கு பாலிசியை 'போர்ட்' செய்யும் வசதியும் இதன் வாயிலாக கிடைக்கும்.

அதிலும் சுவாரஸ்யம் என்ன தெரியுமா? உங்கள் இ.ஐ.ஏ.,வையே ஒரு சேவை வழங்குநரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றிக்கொள்ளலாம்.

இன்னும் ஒரு நல்ல செய்தி, இ.ஐ.ஏ.,வை மாற்றுவதற்கும் கட்டணம் இல்லை. உண்மையில், இ.ஐ.ஏ., திறப்பதே முற்றிலும் இலவசம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us