/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்: மழை வெள்ள மீட்பு கடனுக்கு வருமான வரி உண்டா?
/
ஆயிரம் சந்தேகங்கள்: மழை வெள்ள மீட்பு கடனுக்கு வருமான வரி உண்டா?
ஆயிரம் சந்தேகங்கள்: மழை வெள்ள மீட்பு கடனுக்கு வருமான வரி உண்டா?
ஆயிரம் சந்தேகங்கள்: மழை வெள்ள மீட்பு கடனுக்கு வருமான வரி உண்டா?
ADDED : ஜன 01, 2024 01:02 AM

நான் தனியார் வங்கியில் வீட்டுக்கடன் 32 லட்சம் வாங்கியுள்ளேன். மாதம் 32,000 வீதம், நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. மாறுதலுக்குட்ட வட்டி விகிதம் என்பதால், வட்டி விகிதம் உயர்ந்து கொண்டே செல்கிறது. மீண்டும் மீண்டும் வட்டி விகிதத்தை குறைக்க, 'பிராசசிங்' கட்டணம் ஒவ்வொரு முறையும் கட்ட வேண்டி உள்ளது. இதற்கு தீர்வு என்ன?
ஈ.தளவாய் குமார், திருப்பூர்.
இந்த ஆண்டில் இரண்டு, மூன்று முறையேனும் 'ரெப்போ' வட்டி விகிதம் குறைவதற்கு வாய்ப்புண்டு. அதையொட்டி, வீட்டுக் கடனுக்கான வட்டியும் கணிசமாக குறையும். அதாவது, வட்டி விகிதம் ஓர் உச்சத்தை தொட்டு விட்டது. இனிமேல் அது சரிந்து தான் ஆக வேண்டும். குறைவான வட்டி வசூலிக்கும் வங்கிகளை நோக்கி மக்கள் படையெடுப்பர்.
பிராசசிங் கட்டணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், உடனடியாக போய் வட்டி விகிதத்தை மாற்றிக்கொள்ள எழுதிக் கொடுக்காதீர்கள்.
முக்கால் முதல் 1 சதவீதம் வரை வட்டி விகிதம் குறைவதற்கு காத்திருந்து, பின்னர் மாற்றிக்கொள்ளுங்கள். இப்படி செய்வதன் வாயிலாக, ஒன்று இ.எம்.ஐ., தொகை குறையும் அல்லது காலம் குறையும்.
நான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்று, கடன் முழுதும் செலுத்திவிட்டேன். ஆனால், கடன் தொகையை விட 20,000 ரூபாய் அதிகம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை, என் கடன் தொகையில் வரவு வைக்காமல், வட்டி மூலதனம் என்ற பெயரில் பிடித்தம் செய்துள்ளனர். இது பற்றி கேட்டதற்கு சரியான பதிலில்லை. ஆகவே, பணத்தை திரும்ப பெற யாரிடம் புகார் அளிப்பது?
டி.வி.ஜெயபாலன்
கே.கே.நகர், சென்னை.
நீங்கள் மாறுதலுக்குட்பட்ட வட்டி விகிதத்தில் கடன் வாங்கியிருப்பீர்கள். கடனை செலுத்தும் காலத்துக்குள் பல சமயங்களில், வட்டி விகிதம் உயர்ந்திருக்கும்.
அதனால், இ.எம்.ஐ., தொகையை உயர்த்தாமல், கூடுதல் வட்டிக்கான தொகை அப்படியே கூடிக்கொண்டே போயிருக்கும். அதைத் தான் இறுதியில் பிடித்தம் செய்திருப்பர். மாதாந்திர இ.எம்.ஐ., கட்டியதற்கான ஸ்டேட்மென்டை வாங்கிப் பாருங்கள்.
அதில், இந்த மீத வட்டி அப்படியே குட்டி போட்டு வளர்ந்திருப்பதை காண முடியும். இந்தப் பணத்தைத் திரும்ப வாங்க முடியாது.
நான் தனியார் வங்கி சாரா நிதி நிறுவனத்தில், 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக கடன் பெற்றேன். அதை 50 சதவீதம் கட்டி விட்டேன். ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தால், திருப்பிச் செலுத்த முடியவில்லை. தற்போது நான் செட்டில்மென்ட் போனால், வேறு கடன் வாங்கலாமா ?
எம்.லிங்கம், விருதுநகர்.
மேலும் கடன் வாங்க திட்டமிருந்தால், செட்டில்மென்ட் போகாதீர்கள். மீதிக் கடனையும் கட்டி முடியுங்கள். செட்டில்மென்ட் போனால், உங்கள் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விடும்.
நீங்கள் எவ்வளவு தான் 'தவிர்க்க முடியாத காரணம்' என்று விளக்கம் சொன்னாலும், வங்கி துறையும், கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்களும் உங்களை நம்பாது.
'வேண்டுமென்றே கடனைச் செலுத்தாதவர்' என்றுகூட உங்களை வகைப்படுத்தி விடலாம். இன்னொரு அம்சமும் கவனிக்கத்தக்கது. செட்டில்மென்ட் போனால், அடுத்த கடன் வாங்குவது சிரமமாக இருக்கும் என்பது மட்டுமல்ல; வட்டி விகிதம் கூடுதலாக இருக்கவும் வாய்ப்புள்ளது.
ஒரு சில நிறுவனங்கள் வட்டியில்லா, மழை வெள்ள மீட்புக்கடன் கொடுக்கின்றன. அந்தத் தொகைக்கு வருமான வரி உண்டா? அப்படியானால், அதற்கு எந்தப் பிரிவின் கீழ் விலக்கு கோர முடியும்?
ஜெ.துரைபாண்டியன்,
மதுரை.
நிறுவனங்கள் கொடுக்கும் வட்டியில்லா கடன்களில் இரண்டு அம்சங்கள் சொல்லப்படுகின்றன. 20,000 ரூபாய் வரை கொடுக்கப்படும் இத்தகைய வட்டியில்லா கடன்களுக்கு, வருமான வரி கிடையாது. ஆனால், 20,000 ரூபாய்க்கு மேல் கொடுக்கப்படும் கடனுக்கு வரி உண்டு.
அதேபோல், 'வருமான வரி விதி 3ஏ' என்ற பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள நோய்களுக்கான மருத்துவத்துக்கு நிறுவனங்கள் கொடுக்கும் வட்டியில்லா கடன்களுக்கு, வருமான வரி கிடையாது. இதே நடைமுறை தான், மழை வெள்ள மீட்புக்கடனுக்கும் பொருந்தும் என்கின்றனர், நான் அறிந்த ஆடிட்டர்கள்.
புத்தாண்டில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுமா? எங்கே முதலீடு செய்வது சரியாக இருக்கும்?
சி.ரம்யா துரைசாமி,
வில்லிவாக்கம், சென்னை.
முதல் காலாண்டில், மூன்று ஆண்டுகள் சேமிப்பு திட்டம் மற்றும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதர சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் அப்படியே தொடர்கின்றன.
இந்த ஆண்டில், இனிமேல் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட வாய்ப்பில்லை. மார்ச் மாதம் முதல் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் குறையத் துவங்கும்போது, படிப்படியாக நம் நாட்டிலும் 'ரெப்போ' விகிதம் குறையக்கூடும்.
வங்கி சேமிப்புகள், சிறுசேமிப்பு திட்டங்கள் உள்ளிட்டவை, அதன் அதிகபட்ச வட்டியை எட்டிவிட்டதாகவே தெரிகிறது. பாதுகாப்பான முதலீடுகளை விரும்புவோர் இத்தகைய திட்டங்களை இப்போது பயன்படுத்திக்கொள்வது உத்தமம். ரிஸ்க் எடுக்க துணிச்சல் இருப்போருக்கு, பங்கு சந்தை நல்ல முதலீட்டுக் களம்.
கடந்த ஆண்டு, மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண், 'சென்செக்ஸ்' 18.80 சதவீத வளர்ச்சியையும்; தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் 'நிப்டி' 20.10 சதவீத வளர்ச்சியையும் கொடுத்துள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளாக பங்கு சந்தை வளர்ச்சி தொடர்கிறது.
கடந்த ஆண்டு அளவுக்கு இல்லையென்றாலும், கணிசமான வளர்ச்சி காணலாம். கொஞ்சம் ரிஸ்க் குறைவாக எடுக்கலாம் என்று நினைப்பவர்கள், மியூச்சுவல் பண்டுகளின் எஸ்.ஐ.பி.,யை நாடுங்கள்.
அமெரிக்காவில் வட்டி குறையும் போது, தங்கத்தின் விலை சுறுசுறுவென மேலே உயரும். அதிலும் முதலீடு செய்யலாம். மாதாமாதம் உங்கள் வருவாயில் 30 சதவீதத்தையேனும் எடுத்து முதலீடு செய்து வாருங்கள்.
ஹாப்பி இன்வெஸ்ட்டிங்!
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்,
pattamvenkatesh@gmail.com ph:98410 53881