ADDED : ஜூன் 15, 2026 01:09 AM
பெங்களூரு: நடப்பு நிதியாண்டுக்குள் ஏற்றுமதியை ஐந்து மடங்கு அதிகரிக்க இலக்கு வைத்துள்ளதாக மின்சார பைக்குகளை உற்பத்தி செய்யும் 'அல்ட்ரா ஒய்லெட்' நிறுவனத்தின் இணை நிறுவனர் நீரஜ் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
மொத்த விற்பனையில், இந்நிறுவனத்தின் ஏற்றுமதி 10 சதவீதம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஏற்றுமதியை துவங்கிய இந்நிறுவனம், தற்போது, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட 19 நாடுகளுக்கு மின்சார பைக்குகளை ஏற்றுமதி செய்கிறது. லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகளை குறி வைத்துள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நீரஜ் கூறுகையில், ''எரிபொருள் விலை உயர்வு, மின்சார வாகனங்கள் விற்பனையை அதிகரித்துள்ளது. வாகன செயல்பாட்டு செலவு குறித்த விழிப்புணர்வு, மின்சார வாகனங்களை வாங்க துாண்டுதலாக இருந்தது. வரும் 2029ம் நிதியாண்டுக்குள், ஆண்டு உற்பத்தியை 5 லட்சம் வாகனங்களாக அதிகரிக்க இலக்கு உள்ளது. இதற்காக மொத்தம் 200 கோடி ரூபாய் முதலீடு செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
