/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பங்கு சந்தை சரியும் போது நஷ்டத்தை தவிர்க்கும் வழிகள்!
/
பங்கு சந்தை சரியும் போது நஷ்டத்தை தவிர்க்கும் வழிகள்!
பங்கு சந்தை சரியும் போது நஷ்டத்தை தவிர்க்கும் வழிகள்!
பங்கு சந்தை சரியும் போது நஷ்டத்தை தவிர்க்கும் வழிகள்!
ADDED : டிச 23, 2024 12:09 AM

சந்தை சரிவுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், முதலீட்டின் பலனை பாதுகாப்பது எப்படி என்பதற்கான வழிகளை அறிந்திருக்க வேண்டும்.
பங்கு சந்தையின் போக்கில் ஏற்ற இறக்கம் தவிர்க்க இயலாது என்றாலும், சந்தை சரியும் காலத்தில் முதலீட்டாளர்கள் செயல்படும் விதம், முதலீட்டின் மீதான தாக்கத்தை தீர்மானிக்கும் வகையில் அமையும்.
சந்தையின் இயல்பை புரிந்து கொள்ளாமல், சரிவு உண்டாக்கும் அச்சத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுவது பாதகத்தையே ஏற்படுத்தும்.
சரிவு ஏற்படும் போது, முதலீட்டின் பலன் குறைந்தாலும் அல்லது முதலீட்டை தொடர்ந்தாலும், நஷ்டம் என்பது ஒரு தோற்றமாகவே இருக்கும் வாய்ப்பு உள்ளது. எனினும், அச்சத்தில் முதலீட்டை விலக்கினால், இந்த நஷ்டம் நிலையானதாகி விடும்.
நீண்ட கால முதலீடு
பங்கு சந்தையை பொருத்த வரை நீண்ட கால முதலீடே அதிக பலன் தரக்கூடியது என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. எனவே, சரியும் சந்தையில் நஷ்டத்தால் பீதியடைந்து, உடனடியாக முதலீட்டை விற்று வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என்பதை முதலில் நினைவில் கொள்ள வேண்டும்.
ஏற்ற இறக்கத்தை மீறி பொறுமை காக்கும் போது, சந்தை மீண்டு வந்து பலன் அளிப்பதை வரலாற்று தரவுகள் உணர்த்துகின்றன. அதே போல, மியூச்சுவல் பண்ட்களில் எஸ்.ஐ.பி., எனும் சீரான முறையில் முதலீடு செய்துள்ள பலரும், இறங்குமுகமான சூழலில் முதலீட்டை நிறுத்திக்கொள்ளும் நிலை உள்ளது.
மேலும் நஷ்டத்தை தவிர்க்க விரும்பி, எஸ்.ஐ.பி., முதலீட்டை பாதியில் நிறுத்துவது பாதகமானது. ஏனெனில், எஸ்.ஐ.பி., மிகப்பெரிய சாதகமே, இறங்கு முகமான காலத்தில் அதிக யூனிட்களை வாங்கி பலன் பெற முடியும்.
சந்தை மீட்சி அடையும் போது இது பலன் அளிக்கும். நிதி இலக்கை மனதில் கொண்டு, நீண்ட கால நோக்கில் முதலீட்டை தொடர்வதே ஏற்றது.
அதே போல, சரிவில் பல பங்குகளை குறைந்த விலையில் வாங்க முடியும் என்பதால், ஒரு சிலர் அதிகம் விலை குறைந்த பங்குகளை வாங்குவது உண்டு.
விலை ஏறும் போது பலன் பெறலாம் எனும் அடிப்படையில் இப்படி செயல்பட்டாலும், யாரோ சொல்வதை கேட்டு இவ்வாறு செய்வது பாதகமாகவே அமையும்.
விரிவாக்கம்
வாங்க இருக்கும் பங்குகளின் செயல்பாடு பற்றி முழுவதும் தெரிந்த நிலையில் மட்டுமே, மலிவு விலையை ஒரு வாய்ப்பாக கருதலாம். இதற்கு முறையான ஆய்வு தேவை. பொதுவாகவே, சந்தையின் ஏற்ற இறக்கத்தை அடிப்படையாக கொண்டு முதலீட்டை துவக்குவதோ, நிறுத்துவதோ ஏற்ற அணுகுமுறை அல்ல என உணர வேண்டும்.
சந்தையின் ஏற்றம் எப்போது உச்சம் தொடும் அல்லது இறங்குமுகம் எப்போது முடியும் என எவராலும் சரியாக கணிக்க முடியாது. சந்தையில் முதலீடு செய்திருக்கும் காலமே முக்கியம்.
முதலீட்டாளர்கள் பலரும் செய்யும் மற்றொரு தவறு, மற்றவர்கள் செய்வதை பின்பற்றுவதாகும். பலரும் விற்கின்றனர் என்பதற்காக அல்லது வாங்குகின்றனர் என்பதற்காக அவர்களும் அதே போல செய்யக்கூடாது. அடிப்படை அம்சங்களே முதலீடு முடிவை வழிநடத்த வேண்டும்.
இதற்கு வதந்திகளை நம்பாமல் இருக்க வேண்டும். விரிவாக்கம் மிக்க முதலீடு தொகுப்பு, நீண்ட கால நோக்கில் நல்ல பலனை அளிக்கும். இதுவே முதலீடு வளர்ச்சி அடையவும் உதவும்.