/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள் : வீடு, மனை வர்த்தகத்துக்கு டீமேட் வசதி வருமா?
/
ஆயிரம் சந்தேகங்கள் : வீடு, மனை வர்த்தகத்துக்கு டீமேட் வசதி வருமா?
ஆயிரம் சந்தேகங்கள் : வீடு, மனை வர்த்தகத்துக்கு டீமேட் வசதி வருமா?
ஆயிரம் சந்தேகங்கள் : வீடு, மனை வர்த்தகத்துக்கு டீமேட் வசதி வருமா?
ADDED : டிச 08, 2025 01:54 AM

வங்கிகளில் வைப்பு நிதிக்கு, 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே காப்பீடு வழங்கப்படுகிறது. எங்களை போன்ற மூத்த குடிமக்கள் தங்கள் சேமிப்பு முழுதையும் வங்கிகளில் பாதுகாப்பு மற்றும் அவசர தேவைக்கு வைத்திருக்கிறார்கள். ஆகவே, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வாயிலாக காப்பீடு வசதியை ஏற்படுத்தி கொடுத்தால், தேவைப்படுகிற மக்கள், பிரீமியம் செலுத்தி காப்பீடு வசதியை பெற முடியும். பயமின்றியும் வாழ முடியுமே?
ஆர். நந்தகுமார்,
கோடம்பாக்கம், சென்னை-
உங்கள் ஆலோசனையும் கருத்தும் படிக்க நன்றாக இருக்கிறது. ஆனால், வங்கி சேமிப்பில் பணம் போட்டிருக்கும் அனைவருக்கும் இத்தகைய கூடுதல் பிரீமியம் செலுத்துவது சாத்தியமா என்று யோசிக்க வேண்டும். தனியே பிரீமியம் செலுத்தி, கூடுதல் பாதுகாப்பு பெற்றுக் கொள்ளலாம் என்ற வசதி வருமானால், வங்கிகள் அதனையே ஒரு தனி சேவையாக அறிமுகம் செய்து, லாபம் சம்பாதிக்க துவங்கிவிடும். அது கூடுதல் செலவும், சுமையும் இல்லையா?
அடிப்படையாக சில அம்சங்கள் உள்ளன. வாடிக்கையாளரது வைப்பு நிதியை பாதுகாத்து பெருக்குவது தான் வங்கிகளின் தலையாய பொறுப்பு மற்றும் கடமை. ஒருவேளை வங்கிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் (அப்படி நடக்கவே கூடாது), வாடிக்கையாளர் நடுத்தெருவில் நிற்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்த '5 லட்சம் ரூபாய் காப்பீடு' என்ற பாதுகாப்பு அரண் உருவாக்கப்பட்டுள்ளது.
வரலாற்றை பார்த்தால், வங்கிகள் நஷ்டத்தையோ, நிர்வாக சிக்கலையோ சந்திக்கும்போது, அவை மூடப்படுவதில்லை. மாறாக, மற்றொரு பெரிய வங்கியோடு இணைக்கப்படுகின்றன. இப்போது சிறிய வங்கிகள் பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டு வரும் காலம்.
வருங்காலத்தில் மிகச் சில, ஆனால், மிகவும் வலுவான பொதுத் துறை வங்கிகள் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது. எனவே, வைப்பு நிதியின் பாதுகாப்பு பற்றி நீங்கள் அச்சப்பட தேவையில்லை.
வருங்காலத்தில் அசையா சொத்துக்களையும் டீ -மேட் செய்து, பங்குச் சந்தையில் இருப்பதுபோல, சொத்துக்களை வாங்கி விற்கும் வசதி வருமா?
ஜி.ராஜேந்திரன்,
வாட்ஸாப்.
இன்னும் 50 ஆண்டுகளில் இம்முறை நிச்சயம் வரக்கூடும். இப்போது தான் நம் நாட்டில் நில ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் நடைமுறை துவங்கியுள்ளது. இதிலேயே இன்னும் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஒவ்வொரு மனை, வீடு, தோட்டம் மற்றும் வயலின் உரிமையாளர் யார் என்பதை துல்லியமாக உறுதிசெய்து, அதை இணையத்தில் ஏற்றுவதுதான் முதல் கட்டம்.
அதன் பிறகு, 'பிளாக்செயின்' தொழில்நுட்ப உதவியுடன், ஒவ்வொரு சொத்தின் உரிமையும் 'ரியல் எஸ்டேட் டோக்கன்களாக' மாற்றப்பட வேண்டும். இந்த டோக்கன்கள் உருவானால் தான் 'பகுதியளவு உரிமை' எனப்படும் 'பிராக் ஷனல் ஓனர்ஷிப்' சாத்தியமாகும். அதாவது, ஒரு வீட்டின் மதிப்பை, வர்த்தகத்திற்கு ஏற்ற வகையில் சிறு சிறு அலகுகளாக பிரிப்பது இது.
இப்போது எப்படி ஒரு நிறுவனத்தின் பங்குகள், சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகின்றனவோ, அதேபோல் வருங்காலத்தில் ஒரே வீட்டின் சிறு சிறு பகுதிகள் ரியல் எஸ்டேட் சந்தையில் வாங்கவும் விற்கவும் செய்யலாம்.
ஆனால், இவை நடப்பதற்கு முதலில் மக்கள் மனங்களில் மாற்றம் வர வேண்டும்; அதற்கு ஏற்ப அரசும் பல்வேறு சட்டத் திருத்தங்களை செய்ய வேண்டும். 50 ஆண்டுகள் என்று காலக்கெடுவை குறைத்து சொல்லி விட்டேனோ?!
வயது 34. மாதம் 55,000 வருவாய். திருமணமாகி, 4 வயதில் குழந்தை உண்டு. மாதந்தோறும் 15 முதல் 20,000 ரூபாய் முதலீடு செய்ய திட்டம். உண்மையாக வருவாய் ஈட்ட சரியான வழிமுறைகளை தெரிவிக்கவும்.
சந்துரு, கோவை
உங்கள் இலக்குகள் என்னென்ன என்பது தான் முதலீட்டுக்கு அடிப்படை. வெறுமனே சேமிப்பதற்காக, சேமிக்கக் கூடாது. ஒருவேளை சொந்தமாக வீடு இல்லை என்றால், வீடு வாங்குவது ஓர் இலக்கு. குழந்தையின் படிப்பு, எதிர்கால வெளிநாட்டு மேற்படிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு சேமிப்பது இன்னொரு இலக்கு. எதிர்காலத்தில் சொந்தமாக சுயதொழில் துவங்க திட்டமிருந்தால், அது இன்னொரு இலக்கு. இவையெல்லாம் சின்ன வயதில் இருந்தே சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட அலுத்து போன மிடில்கிளாஸ் இலக்குகள். உங்களுக்கு முற்றிலும் வேறு கனவுகள் இருக்கலாம். அதனால், முதலில் இலக்குகளை வகுத்து கொள்ளுங்கள்.
வயது உங்கள் பக்கம் இருக்கிறது. மியூச்சுவல் பண்டுகள் தோராயமாக 12 சதவீத ரிட்டர்ன் தருமென்றால், போட்ட பணம், 6 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். அதனால், 10,000 ரூபாயை, ஐந்து மல்டி கேப், பிளெக்சி கேப், லார்ஜ் கேப் பண்டுகளில் பிரித்து போடுங்கள். இன்னொரு 5,000த்தை, தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.
உங்களுக்கு துணிவும் விபரமும் உண்டு என்றால், இன்னொரு 5,000 ரூபாயை பங்குச்சந்தையில் நேரடி முதலீடு செய்யுங்கள். தெரியவில்லை என்றால், தங்க இ.டி.எப் .,பில் போட்டு வாருங்கள். உங்கள் இலக்குகளை எத்தனை ஆண்டுகளில் அடைய வேண்டும் என்பதும் முக்கியம். அதற்கு ஏற்ப, இந்த முதலீட்டு இனங்களில் மாறுதல் செய்து கொள்ளுங்கள்.
தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு, கூடுதல் ஓய்வூதியம் எந்த வயதிலிருந்து வழங்கப்படுகிறது? 80 வயது ஆரம்பத்திலா; அல்லது, 80 வயது பூர்த்தி ஆன பிறகா? கூடுதலாக எத்தனை சதவீதம் ஓய்வூதியம் கிடைக்கும்?
எ. வெங்கடேசன், திருவண்ணாமலை
மூத்த குடிமக்களுக்கு 80 வயது நிறைவடைந்து, 81 துவங்குவதில் இருந்தே கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும். கூடுதல் ஓய்வூதியம் தொடர்பாக 2011ல் வெளியான தமிழக அரசின் ஜி.ஓ., 42 தரும் விளக்கத்தின் படி, 80 முதல் 84 வயது வரை உள்ள ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியருக்கு, அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும்.
அதாவது 85 முதல் 89 வயதுடையவர்களுக்கு 30 சதவீதமும், 90 முதல் 94 வயதுடையவர்களுக்கு 40 சதவீதமும், 95 முதல் 99 வயதுடையவர்களுக்கு 50 சதவீதமும், 100 வயது மற்றும் அதை கடந்தவர்களுக்கு 100 சதவீத கூடுதல் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் இந்த ஜி.ஓ., சொல்கிறது.
இதன் பிறகு இந்த விஷயத்தில் வேறு அரசாணைகள் ஏதும் வெளியானது போல் தெரியவில்லை. எதற்கும் உங்களுக்கான ஓய்வூதிய பிரிவில், விபரம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph:98410 53881

