தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/ஆயிரம் சந்தேகங்கள்/ஆயிரம் சந்தேகங்கள்: சர்க்கரை நோயாளிகள் 'டேர்ம் இன்ஷூரன்ஸ்' எடுக்கலாமா?

ஆயிரம் சந்தேகங்கள்: சர்க்கரை நோயாளிகள் 'டேர்ம் இன்ஷூரன்ஸ்' எடுக்கலாமா?

ஆயிரம் சந்தேகங்கள்: சர்க்கரை நோயாளிகள் 'டேர்ம் இன்ஷூரன்ஸ்' எடுக்கலாமா?


ADDED : ஜூன் 16, 2025 12:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2025 12:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெறும் வீட்டுமனை வாங்குவது, வீட்டுடன் கூடிய மனை வாங்குவது - எது மூத்த குடிமக்களுக்கு சிறந்த முதலீடாக இருக்கும்?

ஆர்.துரைசாமி, கோவை.

வீடோ, மனையோ முதலீடு தான். ஆனால், அது சிறந்ததா என்பது, ஒவ்வொரு தனிநபரைப் பொறுத்தும், அவரது வசதியைப் பொறுத்தும் மாறுபடும். வீட்டை முதலீடாக மட்டும் பார்ப்பீர்கள் என்றால், அதைவிட கூடுதல் லாபம் தரக்கூடிய முதலீட்டு இனங்கள் உள்ளன.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், எல்லா வீட்டு மனையும் அல்லது கட்டின வீடுகளும் விற்பனை செய்யப் போகும்போது, பெரிய லாபத்தை வழங்குவதில்லை.

அதீத எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம் என்பதற்காகவே சொல்கிறேன். நீங்கள் வாழ்வதற்கு மனையோடு ஒரு வீடு வாங்க வேண்டுமென்றால், வாங்கிக்கொண்டு நிம்மதியாக வாழுங்கள்.

அது, எதிர்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்குமானால், உங்களது நல்லுாழ் என்று கருதிக்கொள்ளுங்கள். லாபம் ஈட்டுவதற்காக என்பதற்காக மட்டுமே மனையோ, வீடோ வாங்காதீர்கள்.

பத்து ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, நாம் ஓய்வூதியம் பெறும் தகுதி பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவது?

சந்திரா, ராஜபாளையம்

பி.எப். வலைதளத்துக்குச் சென்று, உங்கள் யு.ஏ.என்., எண்ணைக் கொண்டு உள்ளே நுழையுங்கள். அதில், நீங்கள் இதுநாள் வரை பணியாற்றிய நிறுவனங்கள், செய்த பங்களிப்புத் தொகை, எத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக பங்களிப்பு செய்துள்ளீர்கள் என்பன போன்ற விபரங்கள் இருக்கும்.

10 ஆண்டுகளாக பி.எப்., தொகை செலுத்தியதோடு, உங்களுக்கு 58 வயதும் ஆகியிருந்தால், பி.எப்., பென்ஷன் பெறுவதற்கு நீங்கள் தகுதியுடையவர் என்று அர்த்தம்.

ரிசர்வ் வங்கி மூன்று முறை வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. இதை வைத்து, வீட்டுக் கடனுக்காக வட்டியை எப்படி சேமிப்பது?



செ.செல்வக்கோ பெருமாள்,

காஞ்சிபுரம்

முதல் இரண்டு கால் சதவீத வட்டி குறைப்பின் பலனை, ஒரு சில வங்கிகள் ஏற்கனவே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளன. கடைசியாக குறைக்கப்பட்ட அரை சதவீதம், இனிமேல் தான் நடைமுறைக்கு வர வேண்டும்; விரைவில் வந்துவிடும்.

ஏற்கனவே வீட்டுக் கடன் வைத்துள்ளவர்கள், வங்கியே வட்டி குறைப்பைச் செய்கிறதா என்று பாருங்கள். செய்யவில்லை எனில், அதற்கு மாறுவதற்கு 'கன்வர்ஷன்' கட்டணம் கோரினால், அதைச் செலுத்திவிட்டு மாறிக்கொள்ளுங்கள்.

புதிதாக வீட்டுக்கடன் வாங்க விரும்புவோர், சற்று பொறுங்கள். எந்தெந்த வங்கிகள் அதிக அளவில் வட்டி விகிதத்தை குறைக்கின்றன என்று பாருங்கள். அதன் பின்னர், ஒப்பிட்டு பார்த்து, ஓரளவுக்குச் சகாயமான வட்டி விகிதம் தரும் வங்கியில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த ஆண்டு இதற்கு மேல் வட்டி குறைப்பு இருக்க வாய்ப்பில்லை. அதனால், கடன் வாங்குவோர் இந்த வாய்ப்பை இப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

வழக்கமான மியூச்சுவல் பண்டு திட்டங்களை விட, இ.டி.எப்., நீண்டகால முதலீட்டுக்கு சிறந்த முதலீடா என்பதை விளக்கவும்.

விஜய்குமார், கரூர்.

மியூச்சுவல் பண்டு திட்டம் என்பது மண்வெட்டி எடுத்து கால்வாய் வெட்டி, நீர் பாய்ச்சுவது போன்றது. உழைப்பு கோருவது. இ.டி.எப்., என்பதோ காலால் வரப்புகளை ஒதுக்கினால், தண்ணீர் தன்னால் கழனியில் பாய்வதைப் போன்றது.

தங்கம், வெள்ளி, நிப்டி, சென்செக்ஸ் உள்ளிட்ட அடிப்படை சொத்து அல்லது குறியீட்டை ஒட்டி உருவாக்கப்படுபவை இ.டி.எப்.,கள். அடிப்படை சொத்துக்களில் என்ன வழக்கமான வளர்ச்சி ஏற்படுமோ, அது இ.டி.எப்.,பிலும் ஏற்படும்.

ஆனால், மியூச்சுவல் பண்டு திட்டம் அப்படிப்பட்டது அல்ல. பண்டு மேனேஜர் சரியான, லாபம் தரும் நிறுவனங்களை ஆய்வு செய்து கண்டுபிடித்து, மலிவான விலைக்கு வாங்கிப் போட்டு, கணிசமான லாபத்தை உருவாக்கித் தர வேண்டும்.

நீண்டகால முதலீட்டுக்கு இரண்டுமே வேண்டும். ஒரு பகுதியை மியூச்சுவல் பண்டு திட்டங்களிலும், இன்னொரு பகுதியை இ.டி.எப்.,களிலும் போட்டு வைக்கலாம். இரண்டும் சேர்ந்து ஓரளவுக்கு பாதுகாப்பும் தரும், லாபமும் தரும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள், டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கலாமா? அது எவ்வளவு துாரம் நம்பகமானது?

எஸ்.சிவகுமார், மின்னஞ்சல்

தாராளமாக எடுக்கலாம். இன்னும் சொல்லப் போனால் எடுத்தே ஆக வேண்டும். பல அகால மரணங்களுக்கு, கட்டுப்படுத்தப்படாத நீரிழிவே காரணமாக இருக்கிறது. பல நிறுவனங்கள் நீரிழிவு உள்ளவர்களுக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வழங்குகின்றன.

இதில், சில விஷயங்களை கவனிக்க வேண்டும். டைப் - 1 நீரிழிவு என்றால் பிரீமியம் சற்று அதிகம். டைப் - 2 நீரிழிவு என்றால் கொஞ்சம் குறைவு.

எத்தனை ஆண்டுகளாக நீரிழிவு குறைபாட்டினால் ஒருவர் அவதிப்படுகிறார் என்பதை பொருத்தும் பிரீமியம் உயரும்.

நம் நாட்டில் பெரும்பாலான இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், டேர்ம் பாலிசிகளை ஒழுங்காக கையாள்கின்றன. அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், துணைவருக்கு பணம் கிடைக்கிறது.

பிரீமியம் அதிகமாக இருக்கிறது என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரின் எதிர்காலம் முக்கியம்.

ஒரு பாலிசியில் இருந்து எனக்கு மாதா மாதம் 568 ரூபாய் ஆன்யூட்டி தொகை கிடைக்கிறது. இந்தத் தொகையைத் தவிர, வேறு எந்தப் பண வரவும் இந்த பாலிசியில் கிடையாது. இந்த ஆன்யூட்டி தொகைக்கு, வருமான வரியில் எப்படி கணக்கிட வேண்டும்?

என்.பிரபாகரன், சென்னை

வருமான வரி தாக்கல் செய்யும் போது, 'பிற ஆதாரங்களில் இருந்து பெற்ற வருவாய்' (இன்கம் பிரம் அதர் சோர்சஸ்) என்ற பகுதியில் ஆன்யூட்டி வருவாயை காண்பிக்க வேண்டும். உங்கள் வரி அடுக்குக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும்.

இதிலும் பல விதிவிலக்குகளும், சலுகைகளும் உள்ளன. இதுவும் நபருக்கு நபர் மாறுபடும். அதனால், உங்களுடைய ஆடிட்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us