/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள்: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை இப்போதும் மாற்றி கொள்ள முடியுமா?
/
ஆயிரம் சந்தேகங்கள்: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை இப்போதும் மாற்றி கொள்ள முடியுமா?
ஆயிரம் சந்தேகங்கள்: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை இப்போதும் மாற்றி கொள்ள முடியுமா?
ஆயிரம் சந்தேகங்கள்: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை இப்போதும் மாற்றி கொள்ள முடியுமா?
ADDED : செப் 28, 2025 11:33 PM

நான் பல ஆண்டுகளுக்கு முன், 'கலைமகள் சபா' என்ற நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தேன். என்னிடம் அந்த நிறுவனம் வழங்கிய உறுப்பினர் எண் மட்டுமே உள்ளது. நான் இழந்த பணமாவது கிடைக்குமா? அதற்கு நான் எப்படி, யாரை அணுகுவது?
ஆர்.கமலக்கண்ணன், காராமணிக்குப்பம்
நீதிமன்றம் தன் பணியை செய்து வருகிறது. கலைமகள் சபாவுக்கு உள்ள சொத்துக்களில் எத்தனை ஆக்கிரமிப்பில் உள்ளன என்று ஆராய்ந்து, அறிக்கை தாக்கல் செய்யச் சொல்லி, நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இந்த வழக்கு அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வரும் என்று தோன்றவில்லை. பொறுமையாக காத்திருப்பதைத் தவிர, முதலீட்டாளர்களுக்கும் வேறு வழியில்லை.
நான் ஒரு நிறுவனத்தில் 100 பங்குகளை அந்நிறுவனம் வெளியிட்ட போது வாங்கி, 'ஷேர் சர்டிபிகேட்' வைத்திருந்தேன். வர்த்தகத்தில் ஈடுபடவில்லை. இடையில் நண்பர் ஒருவர், 'டீமெட்டீரியலைஸ்' செய்ய வேண்டுமென கூறி வாங்கி சென்றவர், திரும்ப தராமல் தட்டிக் கழிக்கிறார். நான் விசாரித்தபோது, கம்பெனிக்கு கடிதம் எழுதி வாங்கச் சொன்னார்கள். இ - மெயில் மூலமாக விண்ணப்பித்தும் இதுவரை பதில் இல்லை. என்ன செய்ய வேண்டும்?
ஆர்.ஜெயசந்திரன், புதுச்சேரி
நீங்கள் குறிப்பிடும் நிறுவனம் இன்னும் ஆக்டிவாகத் தான் இருக்கிறது. அவர்களுடைய வலைதளத்தில், 'ரிஜிஸ்ட்ரார் அண்டு ஷேர் டிரான்ஸ்பர் ஏஜென்ட்' விபரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து முயலுங்கள். அவர்களிடம் இருந்து பதிலே வரவில்லை என்றால், பின்னர் செபியின் குறைதீர் வலைதளமான https://scores.sebi.gov.in/ உங்கள் புகாரை பதிவு செய்யுங்கள்.
என்னிடம் இரண்டு நிறுவனங்களின் பங்குகள், காகித சர்டிபிகேட்களாக உள்ளன. என் முகவரி மாற்றத்தை, அந்நிறுவனங்கள் பதிவு செய்யாததால், ஷேர்களும் ஈவுத்தொகையும், 'இன்வெஸ்டர் எஜுகேஷன் பண்டு'க்கு போய்விட்டன. உரிய தகவல்கள் கொடுத்து, அவற்றை மீட்கும் முயற்சியில் இறங்கினேன். கடைசியில், 'நிராகரிக்கப்பட்டது' என்ற தகவல் மட்டுமே வந்தது? என்ன செய்வது?
ஆர். குருசாமி, சென்னை
நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்று உங்களுக்கு வந்த ஏதேனும் ஒரு கடிதத்திலேனும் குறிப்பிடப்பட்டிருக்கும். பெரும்பாலும் நீங்கள் பங்கு வாங்கும்போது கொடுத்துள்ள விபரங்களுக்கும், பணத்தை க்ளெய்ம் செய்யும்போது கொடுக்கும் விபரத்துக்கும் இடையே மாறுபாடு இருக்குமானால், நிராகரிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
மேலும், நிராகரிக்கப்பட பல காரணங்கள் உள்ளன. அந்த குறைகளை தீர்ப்பதற்கான வழி என்னவென்று பாருங்கள். வேறு வழியில்லை, மீண்டும் மீண்டும் முயன்று பார்க்க வேண்டியது தான்.
வழக்கமாக ஐ.டி.ஆர்., சம்மிட் செய்யும் ஆடிட்டர், இந்த தடவை சில குளறுபடிகள் செய்து விட்டார். எனவே, நான் வேறு ஒரு ஆடிட்டர் வாயிலாக அடுத்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்ய முடியுமா?
மல்லிகை மன்னன்,
மதுரை. உங்கள் ஆடிட்டரை கேட்டுப் பாருங்கள். நீங்கள் தான் உரிய விபரங்களை உரிய நேரத்தில் கொடுக்கவில்லை என்று சொல்வார். ஆடிட்டரை மாற்றிக்கொள்வது உங்கள் சவுகரியத்தைப் பொறுத்தது. ஆனால், பலரும் கடைசி நாள் வரை இழுத்தடித்து தான் வருமான வரி தாக்கல் செய்கின்றனர் என்பது ஒரு பிரச்னை.
இன்னொன்று கட்ட வேண்டிய வரித் தொகையை குறைத்து கொடுக்கவில்லை; நான் சொல்வதை அவர் காது கொடுத்து கேட்கவில்லை என்றெல்லாம் ஆடிட்டர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளையும் கேட்கிறேன்.
இன்றைக்கு இதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. குளறுபடி என்ன என்பதை கவனித்து, அதை இப்போதே சீர்திருத்தி, மறுமுறை ஐ.டி.ஆர்., படிவத்தை தாக்கல் செய்ய முடியுமா என்று பாருங்கள். அடுத்த ஆண்டு இதே தவறுகள் நேராமல் தடுக்கலாம்.
'எச்1பி' விசா கட்டணத்தை, அமெரிக்கா திடீரென உயர்த்த வேண்டிய அவசியமென்ன? இதனால் கல்வி கற்கவோ, வேலை வாய்ப்பிற்கோ அமெரிக்கா செல்பவர்களுக்கு பாதிப்பு உண்டா?
அ.யாழினி பர்வதம், சென்னை.
தங்கள் நாட்டு பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, வெளிநாட்டினரை அமெரிக்காவுக்குள் வரக்கூடிய வழிகளை அடைக்கின்றனர். இப்போதும் கல்வி கற்க அங்கே செல்லலாம்.
ஆனால், அப்படியே அங்கேயே வேலைவாய்ப்பு பெற்று தங்கி விடலாம்; எதிர்காலத்தை உருவாக்கி கொள்ளலாம் என்ற கனவு மட்டும் வேண்டாம். 2029 வரை இது தான் சூழல். அதற்கு பிறகு என்ன ஆகிறது என்று பார்ப்போம்.
என் மாமியார் சமீபத்தில் மறைந்தார். அவரிடம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன. அதை என்ன செய்வது? வங்கியில் மாற்றலாமா?
எஸ்.ராஜதுரை, மின்னஞ்சல்.
ஒன்றும் செய்ய முடியாது. பழைய நோட்டுகளை திரும்ப வாங்கி கொள்வதற்கான காலகட்டம் முடிந்துவிட்டது. பெரிய அளவில் எங்கே பணம் கிடைத்து, சட்ட ரீதியாக நீதிமன்ற உத்தரவு கொடுத்தால் மட்டும், பழைய நோட்டுகளை ஆர்.பி.ஐ., திரும்ப வாங்கிக் கொள்கிறது. மற்றபடி அந்தப் பணத்துக்கு இனி மதிப்பில்லை. பழைய நோட்டுகளை சேகரிப்பவர்கள் யாரேனும் கேட்டால், அவர்களுக்கு அதை விற்பனை செய்யலாம்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881