sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

ஆயிரம் சந்தேகங்கள்

/

ஆயிரம் சந்தேகங்கள்: எஸ்.ஐ.பி.,யில் எப்படி முதலீடு செய்வது?

/

ஆயிரம் சந்தேகங்கள்: எஸ்.ஐ.பி.,யில் எப்படி முதலீடு செய்வது?

ஆயிரம் சந்தேகங்கள்: எஸ்.ஐ.பி.,யில் எப்படி முதலீடு செய்வது?

ஆயிரம் சந்தேகங்கள்: எஸ்.ஐ.பி.,யில் எப்படி முதலீடு செய்வது?


ADDED : ஏப் 21, 2025 01:08 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதிய வருமான வரி அறிவிப்பிற்கு பின், முதியோர் திட்டத்தில் முதலீடு செய்துள்ள அனைவரும் கண்டிப்பாக '15 எச்' படிவம் தர வேண்டுமா? ஆண்டு வட்டி எவ்வளவு ரூபாய்க்கு மேல் இருந்தால் வருமான வரி கட்ட வேண்டும்?

என்.எஸ்.சண்முகம், கோவை

கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டுக்கு பின், மூத்த குடிமக்களுக்கான டி.டி.எஸ்., வரையறை 50,000 ரூபாயில் இருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, உங்களுடைய அத்தனை சேமிப்புகளில் இருந்தும் வரும் ஒட்டுமொத்த வட்டித் தொகை 1 லட்சம் ரூபாய்க்கு கீழே இருக்குமானால், நீங்கள் படிவம் 15 எச் கொடுத்தால் போதும். வங்கிகள் டி.டி.எஸ். பிடித்தம் செய்யாது.

வட்டி 50,000 ரூபாய்க்குள் வந்தாலும் படிவம் 15 எச் சமர்ப்பிக்க வேண்டும். வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்துள்ள அனைவரும் இந்த படிவத்தை வழங்க வேண்டும்.

உங்களுடைய மொத்த வட்டி வருமானம் எவ்வளவு என்பது எப்படி வங்கிகளுக்கு தெரியும்? நீங்கள் அதை சொன்னால் தான், அதற்கேற்ப விலக்கு வழங்க முடியும்.

ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வட்டி வருமானம் உள்ளது என்றால், டி.டி.எஸ்., பிடித்தம் உண்டு. அதிலும் ஒரு விஷயம், ஆண்டின் ஒட்டுமொத்த வருவாய் 12 லட்சம் ரூபாய்க்குள் இருக்குமானால், புதிய வரி திட்டத்தின்படி, ஐ.டி.ஆர்., தாக்கல் செய்யும் போது, இந்த பிடிக்கப்பட்ட டி.டி.எஸ்., தொகை 'ரீபண்டு' ஆகிவிடும்.

எஸ்.ஐ.பி.,யில் எப்படி முதலீடு செய்வது? யாரை அணுகுவது? மாதம் 10,000 ரூபாய் நீண்டகால முதலீடு செய்தால் கிடைக்கும் பலன் என்ன? என் வயது 47.

ஜி.ஆர்.பாபு, மின்னஞ்சல்

இன்று இணையம் எனும் பெருங்கடல் இருக்கிறதே? எல்லா மியூச்சுவல் பண்டு நிறுவனங்களும் இணையத்தில் தங்கள் கடைகளை திறந்து வைத்துள்ளன. கொஞ்சம் விரிவாக ஆய்வு செய்து, எந்த மியூச்சுவல் பண்டு திட்டங்கள் உங்களுடைய நீண்ட கால இலக்குகளுக்கு பொருத்தமானவை என்பதை முதலில் கண்டுபிடியுங்கள்.

ஆங்கில வணிக நாளிதழ்களில் இதற்கான பரிந்துரைகள் வெளிவருகின்றன. ஓரிரு நாளிதழ்களை தொடர்ந்து வாங்கி, வாசித்து, உங்களுக்கான திட்டங்கள் எவை என்பதை தேர்வு செய்யுங்கள்.

அதன் பின்னர் அந்த மியூச்சுவல் பண்டு வலைதளங்களுக்குப் போய் புதிய பயனராக பதிவு செய்து, நேரடியாகவே எஸ்.ஐ.பி., முறையில் முதலீட்டை ஆரம்பிக்கலாம். நேரடியாக செய்யும்போது, முகவர் கமிஷன் உட்பட எதுவும் இராது.

உங்களுக்கு இவையெல்லாம் சாத்தியமில்லை, தெரியாது என்றால், நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியிலேயே கேளுங்கள். பெரும்பாலான வங்கிகள், மியூச்சுவல் பண்டு வினியோகஸ்தர்களாகவும் இருக்கின்றனர். மேலும், வெளியே பல பங்குச்சந்தை புரோக்கிங் நிறுவனங்கள் உள்ளன. அவர்கள் ஆலோசனை வழங்கி, முதலீடு செய்யவும் உதவுவர்.

'ரூல் ஆப் 72' என்றொரு எளிய கணக்கு இருக்கிறது. அதாவது, எத்தனை ஆண்டுகளில் முதலீடு இரட்டிப்பாகும் என்பதற்கான கணக்கு இது.

மியூச்சுவல் பண்டுகள் தோராயமாக ஆண்டு ஒன்றுக்கு 15 சதவீதம் வருவாய் தருமானால், 4.8 ஆண்டுகளில் பணம் இரட்டிப்பாகும். நீங்கள் 60 வயதுக்குள் உங்கள் முதலீட்டை இரண்டு முறை இரட்டித்துக் கொள்ளலாம்.

வயது 51, தனியார் வேலை, ரிடையர்மென்ட் வயது 60. ஒப்புதல் தரப்பட்ட 73 லட்சம் ரூபாய் வீட்டுக்கடனில் 66 லட்சம் ரூபாய் பெற்றாகிவிட்டது. மீதி 7 லட்சத்தை பெறுவதா, வேண்டாமா என்று குழப்பமாக உள்ளது. பெறாவிட்டால், மியூசுவல் பண்டிலிருந்து எடுத்து உபயோகிக்க வேண்டும். ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்து வருவதால் இந்தக் குழப்பம்.



எஸ்.சுதர்ஸன், கோவை.

மீதமுள்ள 7 லட்சம் ரூபாயை வாங்கி, வீடு கட்டும் வேலையை முடியுங்கள். மியூச்சுவல் பண்டு முதலீட்டை தொட வேண்டாம். எப்படி இருந்தாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் இரண்டு முறையேனும் வட்டி குறைப்பு இருக்கும். 6.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி இப்போது 6 சதவீதமாக குறைந்துள்ளது.

அடுத்து 5.50 அல்லது 5.25 சதவீதமாக குறையும்போது, கடன் கொடுத்துள்ள வங்கியே வட்டியை குறைக்கும் அல்லது நீங்கள் அதற்கு சிறு கன்வர்ஷன் கட்டணம் செலுத்தி, குறைந்த வட்டிக்கு உங்கள் கடனை மாற்றிக் கொள்ளலாம்.

குறைந்த வட்டியுள்ள வேறொரு வங்கிக்கும் கடனை மாற்றிக் கொள்ளலாம் அல்லது திருப்பிச் செலுத்த வேண்டிய கால அளவையும் குறைத்துக் கொள்ளலாம்.

ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு என்பது, உங்களை போன்ற வீடு கட்டும் மத்தியமர்களுக்கு அடித்துள்ள ஜாக்பாட்; பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நான் வங்கியில் விருப்ப ஓய்வு பெற்று விட்டேன். வயது 50க்கும் குறைவே. என் செட்டில்மென்ட் பணத்தை எஸ்.டபிள்யு.பி., பிளானில் முதலீடு செய்து பயன் பெறலாமா? அல்லது வங்கி வைப்பு நிதியில் போடலாமா? இது, என் அத்தியாவசிய மாதா மாதம் செலவழிக்க தேவையானது. ரிஸ்க் எடுக்கலாமா?

வித்யா, மதுரை

வயது 50க்கும் குறைவு என்கிறீர்கள். 60 - 70 வயதினரே ரிஸ்க் எடுக்கின்றனரே! உங்கள் மாதாந்திர செலவுகளுக்கு தேவையான தொகை எவ்வளவு என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு வரக்கூடிய பென்ஷன் தொகை போக, மீதம் எவ்வளவு தொகை தேவை என்பதையும் கணக்கிட்டு கொள்ளுங்கள்.

ரெப்போ விகிதம் குறைவதால், வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களும் குறைகின்றன. அடுத்த சில மாதங்களில் அவை மேலும் குறையக்கூடும்.

அதனால், இப்போதே உங்கள் மாதாந்திர தேவைக்கேற்ற தொகையை பெறுவதற்கு, ஐந்து ஆண்டுகள் வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். உபரி தொகையை, எஸ்.டபிள்யு.பி., முறையில் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யுங்கள். அது, உங்கள் வருங்காலத் தேவைகளுக்கான முதலீடாக அமையும்.

முடிந்தால், கொஞ்சம் தொகையை தங்க இ.டி.எப்., களிலும் போட்டு வையுங்கள். மியூச்சுவல் பண்டுகள் போதிய வருவாய் ஈட்டவில்லை என்றால், தங்க இ.டி.எப்., அதை சமன் செய்யும்.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்






      Dinamalar
      Follow us