தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/ஆயிரம் சந்தேகங்கள்/ஆயிரம் சந்தேகங்கள் : கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யலாமா?

ஆயிரம் சந்தேகங்கள் : கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யலாமா?

ஆயிரம் சந்தேகங்கள் : கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யலாமா?


ADDED : ஆக 31, 2026 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 03:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு பங்கு 50 சதவீதம் சரிந்துவிட்டால், அது 'மலிவான முதலீடு' என்று கருதலாமா?

முனைவர் பெ. வை. சே . கணேஷ் சுப்பிரமணி,

பெரியகுளம்

அப்படி கருதக்கூடாது. அந்த பங்கு ஏன் விழுந்தது, நிறுவனத்தின் நிதி நிலை அல்லது நிர்வாகத்தில் ஏதேனும் கோளாறா, அரசு கொள்கைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா, மேலும் விழுமா என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும். இப்படி எதுவும் இல்லை, பொதுவான சந்தை வீழ்ச்சியால் தற்காலிகமாக சரிந்துள்ளது என்றால் அது ஒரு வாய்ப்பாக இருக்கலாம்.

அப்போதும், அந்த நிறுவனத்தின் தற்போதைய வருவாய், எதிர்கால வளர்ச்சி வாய்ப்பு, கடன் நிலை போன்றவற்றை பார்த்து, அதன் 'பிரைஸ் டு எர்னிங்ஸ்' மற்றும் 'பிரைஸ் டு புக்' ஆகிய விகிதங்கள் நியாயமான அளவில் இருக்கின்றனவா என்பதை பார்த்துதான் வாங்க வேண்டும்.

என் மாத சம்பளம் 60 ஆயிரம் ரூபாய். சமீபத்தில் புதிய 2 பி.ஹெச்.கே., வீடு வாங்குவதற்கு 60 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் பெற்றுள்ளேன். என் தற்போதைய வருமானத்தை கொண்டு, இந்த கடனை எவ்வளவு விரைவாக முன்கூட்டியே அடைக்க முடியும்?

ஹரிதா, வாட்ஸாப்

ஆச்சரியமாக உள்ளது. 60,000 ரூபாய் மாத வருவாயில் எப்படி 60 லட்ச ரூபாய் வீட்டுக்கடன் கிடைத்தது? 60 லட்சம் கடனுக்கு, 20 ஆண்டுகள், 8.50 சதவீத வட்டி என்று கணக்கிட்டால் கூட, மாத தவணையே கிட்டத்தட்ட 52 ஆயிரம் ரூபாய் வரை வருமே? பொதுவாக, மாத வருவாயில் இ.எம்.ஐ.யானது 50 சதவீதத்துக்கு மேல் போகாதவாறு அல்லவா வங்கிகள் கடன் கொடுக்கும்? உங்கள் கணவர் அல்லது உறவினரை இணை கடனாளியாக சேர்த்து அவரது வருவாயையும் காண்பித்து கடன் வாங்கினீர்களோ?

உங்களது தற்போதைய வருமானத்தை மட்டும் வைத்து இந்த கடனை உடனே அடைக்க முடியாது. ஒரு சில வழிமுறைகள் சொல்கிறேன். உபயோகமாக இருக்குமா என்று பாருங்கள்.

இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு கிடைக்கும் சம்பள உயர்வு, தீபாவளி போனஸ், இன்சென்டிவ் ஆகிய ஒட்டுமொத்த பணத்தையும் செலவு செய்யாமல், நேரடியாக வீட்டுக்கடனுடைய அசலில் வரவு வையுங்கள்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் உங்கள் சம்பளம் உயரும்போது, தற்போதைய இ.எம்.ஐ. தொகையை வருடத்திற்கு 5 முதல் 10 சதவீதம் வரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்த சொல்லி வங்கியில் கேளுங்கள்.

ஆண்டுக்கு ஒரு முறை ஒரு தவணை தொகையை மட்டும் கூடுதலாக செலுத்த முயலுங்கள். இந்த சின்ன சின்ன வழிமுறைகளை பின்பற்றினாலே, 20 ஆண்டு கடனை பல ஆண்டுகளுக்கு முன்பே முடித்துவிட முடியும்.

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது நல்ல முயற்சியா? பெல்டக்ஸ், செயின் லிங்க் சரியான வழியா?

சி.வேல்முருகன், சூரம்பட்டிவலசு, ஈரோடு

இல்லை. அபாயம் அதிகம். அது பாதுகாப்பான 'முதலீடு' கிடையாது. அது 'ஊக வணிகம்'. இதில் பங்குகள், தங்கம், மனை போல எந்த அடிப்படை சொத்தும் கிடையாது. நம் நாட்டில் கிரிப்டோகரன்சி, ரூபாய் போல சட்டப்பூர்வமான நாணயமாக அங்கீகரிக்கப்படவில்லை. இதனால், முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பும் மிகவும் குறைவு. இதில் லாபம் வந்தால் 30 சதவீத வரியும், கிரிப்டோ பரிவர்த்தனைகளுக்கு டி.டி.எஸ்., விதிகளும் உள்ளன.

செயின் லிங்க் : ஆரக்கிள் நெட்வொர்க்கில் இருப்பதால் கிரிப்டோ சந்தையை பொறுத்தவரை இதற்கு உண்மையான தொழில்நுட்ப பயன்பாடு உள்ளது. பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்காக இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கிரிப்டோ சந்தை வீழ்ச்சியடையும்போது இதுவும் கடுமையான சரிவை சந்திக்கும்.

பெல்டக்ஸ் : இந்த காயினில் பணம் போடுவதை கண்டிப்பாகத் தவிருங்கள். சமீபகாலமாக தமிழகத்தில் பல இடங்களில் இது எம்.எல்.எம்., முறையில், 'நிச்சயம் லாபம் வரும்' என ஆசை காட்டி விற்கப்படுகிறது. நிதிச்சந்தையில் இப்படி நெட்வொர்க் மார்க்கெட்டிங் முறையில் விற்கப்படும் எந்தவொரு திட்டமும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை.

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக வளர்க்க விரும்பினால், பங்குச்சந்தை அல்லது மியூச்சுவல் பண்டு பக்கம் செல்லுங்கள். போட்ட பணம் முழுவதும் அழிந்தாலும் பரவாயில்லை என அதிக ரிஸ்க் எடுக்க தயாராக இருந்தால் மட்டுமே, இந்த பக்கம் தலைவைத்து படுங்கள்.

என் பங்குகளையும் அதற்கான டிவிடெண்டுகளையும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்துக்கு அனுப்பி விட்டதாக ஒரு நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படி அனுப்புவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், பங்குதாரருக்கு நோட்டீஸ் அனுப்பி விபரம் தெரிவிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இந்த குறிப்பிட்ட நிறுவனம் அதை செய்யவில்லை. இதை எதிர்த்து எங்கே நான் புகார் செய்ய வேண்டும்?

ஆர். என். ராஜன், பெங்களூரு

நீங்கள் சுட்டிக்காட்டிய சட்டம் மற்றும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்துக்கான விதிகள் முற்றிலும் சரியானவை. சட்டப்படி நீங்கள் அந்த நிறுவனத்துக்கு எதிராக போராட முடியும்.

ஆனால், கொஞ்சம் நடைமுறை சிக்கல்களையும் கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் பழைய முகவரிக்கு சாதாரண தபாலில் நோட்டீஸ் அனுப்பினோம் என்றோ, அல்லது விதிகளின்படி நாளிதழ்களில் பொது அறிவிப்பு கொடுத்து விட்டோம் என்றோ நிறுவனம் எளிதாக சட்டத்திலிருந்து தப்பித்துவிடும். இதனால், உங்கள் நேரமும் பணமும்தான் வீணாகும்.

அதனால் 'நோட்டீஸ் தரவில்லை' என்று நிறுவனத்துடன் சட்ட போராட்டம் நடத்துவதை விட, உங்கள் பங்குகளை மீட்பதே இப்போதைய முதல் வேலை.

பங்குகள் ஏற்கனவே அரசு நிதியத்துக்கு போய்விட்டதால், அந்த நிறுவனமே நினைத்தாலும் அதை உங்கள் கணக்கிற்கு நேரடியாக திருப்பி தர முடியாது. எனவே, உடனடியாக 'ஐ.இ.பி.எப்.,5' படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து, அதில் குறிப்பிடப்படும் ஆவணங்களை தயார் செய்து, அந்த நிறுவனத்தின் ஐ.இ.பி.எப்., அதிகாரியிடம் சமர்ப்பிக்கும் நடைமுறையை தொடங்குங்கள். அதுவே உங்களுக்கு மன அமைதி தரும்.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us