/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள்: 'கிரிசில் ரேட்டிங்' என்பது அவ்வளவு முக்கியமானதா?
/
ஆயிரம் சந்தேகங்கள்: 'கிரிசில் ரேட்டிங்' என்பது அவ்வளவு முக்கியமானதா?
ஆயிரம் சந்தேகங்கள்: 'கிரிசில் ரேட்டிங்' என்பது அவ்வளவு முக்கியமானதா?
ஆயிரம் சந்தேகங்கள்: 'கிரிசில் ரேட்டிங்' என்பது அவ்வளவு முக்கியமானதா?
ADDED : டிச 02, 2024 01:15 AM

நண்பர் ஒருவர், என்னிடம் வாங்கிய 3 லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்தார். பணத்தை என் கணக்கில் வரவு வைக்க காசோலையை வங்கியில் கொடுத்தேன். ஆனால், அவர் 'ஸ்டாப் பேமென்ட்' கொடுத்துள்ளார் என்று வங்கியில் கூறினர். இதற்குத் தீர்வு தர இயலுமா?
வெ.முத்து, மதுரை.
என்னிடம் கடன் வாங்கியவர் வழங்கியுள்ள காசோலைக்கு, 'ஸ்டாப் பேமென்ட்' கொடுத்திருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள முடியுமா? அவர் வங்கிக் கணக்கையே மூடிவிட்டுப் போயிருந்தால் என்ன செய்வது?
பெயர் சொல்ல விரும்பாத வாசகர், கோவை.
இது சிக்கலான சட்டப் பிரச்னை. ஸ்டாப் பேமென்ட் கொடுத்தாலும், அதுவும் காசோலை அவமதிப்பு என்றே கருதப்படும் என்று சொல்கின்றனர், சில வழக்கறிஞர் நண்பர்கள். நான் வழக்கறிஞன் இல்லை என்பதால், இதைப் பற்றி எனக்கு விபரம் தெரியாது.
ஒருவேளை, இந்த விஷயத்தைச் சட்ட ரீதியாக அணுகினால், எப்போது வழக்கு நடந்து முடிந்து, எப்போது பணம் திரும்பக் கிடைக்கும் என்பதைச் சொல்வதற்கில்லை. உங்கள் நண்பரிடமே நிதானமாக பேசி, கொடுத்த பணத்தை முடிந்தவரை திரும்பப் பெற்றுக்கொள்வது தான் நடைமுறைக்கு உகந்த வழி.
வங்கியில் காசோலையைச் செலுத்தும்போது தான், அதற்கு ஸ்டாப் பேமென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவரும். வங்கிக் கணக்கை மூடிக்கொண்டு போக வாய்ப்பில்லை.
அப்படிச் செய்யவேண்டும் என்றால், காசோலையின் மீதத் தாள்கள் அனைத்தையும், வங்கி ஒப்படைக்கச் சொல்லும். அப்போது, ஸ்டாப் பேமென்ட் கொடுத்த காசோலைகளை பற்றிய கேள்வி எழும் என்பதால், அவ்வளவு சுலபமாக வங்கிக் கணக்கை மூட முடியாது.
'கிரிசில் ரேட்டிங்' என்பது என்ன? அது அவ்வளவு முக்கியமானதா?
கே.முத்தையா, மதுரை.
உங்கள் வருமானத்தை எப்படி நீங்கள் நிர்வாகம் செய்கிறீர்கள் என்பதைக் கணிப்பது தான், 'கிரிசில்' என்ற ரேட்டிங் நிறுவனத்தின் வேலை. இதுபோல் இன்னும் மூன்று ரேட்டிங் ஏஜென்சிகள் உள்ளன.
அவை, நீங்கள் வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்துகிறீர்களா; கிரெடிட் கார்டை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கணக்கில் கொண்டு, உங்களுக்கு ஒரு மதிப்பெண் கொடுப்பர்.
இந்த மதிப்பெண் அதிகமாக இருந்தால், அடுத்த முறை நீங்கள் வீட்டுக்கடன், வாகனக் கடன், கல்விக் கடன் கேட்கப் போகும்போது, வட்டி குறைவாக கிடைக்கும். நீங்கள் அப்பழுக்கற்ற, 'அக்மார்க்' கடன்காரராக இருப்பீர்களா என்பதை முடிவுசெய்ய, கிரிசில் ரேட்டிங் உதவும்.
ஓய்வு பணம் மற்றும் கையில் உள்ள பணத்தை, தபால் அலுவலகம், வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனத்தில் எனது மற்றும் என் மனைவியின் பெயரில் டிபாசிட் செய்துள்ளேன். நாமினியாக எங்கள் இருவர் பெயரையும் மாற்றிப் போட்டுக் கொண்டோம். ஒருவேளை ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், எங்கள் பெயரில் உள்ள தொகை தன்னிச்சையாக என் மகளுக்கு சேருமா?
சுப்ரமணியன், விருதுநகர்.
சேராது. உங்கள் மகள் பெயர் நாமினியாக இருந்தால் மட்டுமே, அவருக்கு உங்கள் பணம் போய் சேரும். ஆனால், இந்த பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், வங்கி டிபாசிட் நாமினிதாரர் விஷயத்தில் ஒரு திருத்தம் கொண்டுவரப்படும் என்று சொல்லப்படுகிறது.
அதாவது, தற்போது வங்கி டிபாசிட்களில் ஒருவரைத் தான் நாமினியாக போட முடியும். திருத்த மசோதாவின்படி, நான்கு பேர் வரை நாமினியாக போடவும், அவர்களுக்கு எவ்வளவு சதவீதம் பணம் போய்ச் சேர வேண்டும் என்று குறிப்பிடும் படியான வசதியும் வரும் என்கின்றனர். இதற்கு 'சைமன்டேனியஸ் நாமினேஷன்' என்று பெயர்.
இதேபோல், 'சக்சஸிவ் நாமினேஷன்' என்றொரு வசதியும் கொண்டுவரப்படும் என்று சொல்கின்றனர். அதன்படி, அடுத்தடுத்த நாமினிகளைப் போடமுடியும்.
முந்தைய நாமினி மறைந்துவிட்டால், அடுத்த நாமினிக்கு உரிய தொகை போய்ச் சேரும். இவை மசோதா அளவில் தான் இருக்கின்றன.
அதனால், இப்போதைக்கு நீங்கள் உங்கள் சேமிப்பு, மனைவி சேமிப்பு இரண்டிலும், உங்கள் மகளை நாமினியாக சேர்த்துவிடுங்கள். நீங்கள் விரும்பியபடி, உங்கள் தொகை உங்கள் மகளைப் போய்ச் சேரும்.
நானும் என் குடும்ப உறுப்பினர்களும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் சேமித்து வருகிறோம். ஒவ்வொரு உறுப்பினர் பெயரில் எவ்வளவு சேமிக்கலாம்? வட்டி அதிகம் தரும் வேறு நிறுவனங்களையும் குறிப்பிடவும்.
எஸ்.குருமூர்த்தி, ஆதம்பாக்கம்.
என் வயது 62. பென்ஷனர். ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் போடலாம் என நினைக்கிறேன்; 9.40 சதவீத வட்டி என்று சொல்கின்றனர். அது நல்ல நிறுவனமா? நம்பி போடலாமா?
எஸ். தினகரன், மின்னஞ்சல்.
என் வயது 81; மனைவிக்கு 70. இருவரின் பெயரிலும் தனித்தனியாக 10 லட்சம் ரூபாய் சேமித்து வைக்க முடிவெடுத்து உள்ளேன். வங்கி அல்லது அஞ்சலகம், எதில் வட்டி அதிகமாக வரும்?
துரைராஜ், விருதுநகர்.
மூவருமே மூத்த குடிமக்கள்; அனுபவசாலிகள். கூடுதல் வட்டி கிடைத்தால், சவுகரியமாக இருக்குமே என்று கருதுகிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் நிறுவனங்களும் நீண்டகாலம் இயங்கி வருபவை தான்.
அதனாலேயே அவற்றில் பல ரும் முதலீடு செய்கின்றனர். ஒரே ஒரு எச்சரிக்கை தான். இவை எதுவும் வங்கித் துறையின் டிபாசிட் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வருபவை அல்ல. அத்துடன், 9.40 சதவீத வட்டி என்பது ஐந்து ஆண்டு முதலீட்டுக்கானது.
குறைந்தவட்டி தரும் பொதுத் துறை வங்கிகள் முதல், அதிக வட்டி தரும் தனியார் நிறுவனங்கள் வரை, பணத்தைப் பரவலாக முதலீடு செய்யுங்கள். மொத்தத்தையும் ஒரே இடத்தில் வைக்க வேண்டாம். 'ரிஸ்க்'கைக் குறைத்து கொள்ளுங்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதில் எந்தவிதமான தடையும் இல்லை.
எனக்கு 48 வயது ஆகிறது. இன்னும் எத்தனை காலம் வேலையில் தொடர்வேன் என்று தெரியவில்லை. கையில் உள்ள தொகையை எஸ்.டபிள்யு.பி.,-இல் போட்டு, சம்பளம் போல, மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை வருவது போல் செய்வது பாதுகாப்பானதா?
எஸ்.சிவகுமார், மின்னஞ்சல்.
உடல்நிலை பாதிப்பு அல்லது குடும்ப பிரச்னை என்று ஏதேனும் அழுத்தம் இருந்தால் மட்டுமே வேலையை விடுவீர்கள். இவையெதுவும் இல்லையெனில், உங்களுக்கு வந்திருப்பது, இந்திய ஆண்களுக்கே உண்டான 'மிட்லைப் கிரைசிஸ்' எனும் அதீத சோர்வு. இப்படிப் பேசுவீர்களே தவிர, வேலையை விட மாட்டீர்கள்.
அதனால், பங்குச் சந்தை சார்ந்த நல்ல நான்கைந்து மியூச்சுவல் பண்டுகளில் கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்துவிட்டு, 'ஹாயாக' இருங்கள். நீங்கள் ஓய்வுபெறும் போது, அது குறைந்தபட்சம் மூன்று மடங்கேனும் வளர்ந்திருக்கும்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881