/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள் : கிரெடிட் ஆன் யு.பி.ஐ., என்றால் என்ன?
/
ஆயிரம் சந்தேகங்கள் : கிரெடிட் ஆன் யு.பி.ஐ., என்றால் என்ன?
ஆயிரம் சந்தேகங்கள் : கிரெடிட் ஆன் யு.பி.ஐ., என்றால் என்ன?
ஆயிரம் சந்தேகங்கள் : கிரெடிட் ஆன் யு.பி.ஐ., என்றால் என்ன?
ADDED : மார் 23, 2025 10:23 PM

எனது வயது 78. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று, மாதம் 40,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறேன். இப்போது இந்த வருமானத்துக்கு வருமான வரி இல்லை என்பது உண்மையா?
எஸ்.அனந்தராமன், சென்னை.
இந்த ஓய்வூதியமும், வங்கிச் சேமிப்புகளில் இருந்து வட்டியும் மட்டும் தான் பெற்று வாழ்கிறீர்கள் என்றால், புதிய வரித் திட்டத்தின் படி, நீங்கள் வரி ஏதும் செலுத்த வேண்டாம்.
தினம் தினம் உச்சம் தொடும் தங்கம் விலை, சில ஆண்டுகளுக்குப் பின்பு பல ஆயிரங்கள் குறைய வாய்ப்பு உண்டா?
-சோ.ராமு, திண்டுக்கல்.
வங்கி பெட்டகத்தில் கொஞ்சம் தங்க ஆபரணங்கள் வைத்துள்ளேன். அவற்றை அணிந்துகொள்வதில் விருப்பமில்லை. அதில் இருந்து கொஞ்சம் தங்கத்தை விற்றுவிட்டு, அடுத்த 10 ஆண்டுகளுக்கு நல்ல மியூச்சுவல் பண்டு திட்டம் ஒன்றில் முதலீடு செய்யலாமா?
எஸ்.சிவகுமார், மின்னஞ்சல்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அதிரடிகளைப் பார்த்தால், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை குறையவே வாய்ப்பில்லை. பல பெரிய நாடுகளின் மத்திய வங்கிகளே, டாலருக்கு இணையான தங்கள் நாணய மதிப்பின் ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்க, தங்கத்தை வாங்கி கருவூலத்தில் சேமித்து வருகின்றன.
இதனால், சில ஆண்டுகளுக்குப் பின்பு தங்கத்தின் விலை சில ஆயிரங்களுக்கு குறைய வாய்ப்பே இல்லை. மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வது சரி தான். அதற்காக, ஆபரணத்தை விற்றுவிட்டு முதலீடு செய்ய வேண்டியதில்லை. தங்கம் ஆண் டொன்றுக்கு 9 சதவீத ரிட்டர்னைத் தருகிறது என்றால், டொனால்டு டிரம்பின் கைங்கரியத்தால், அடுத்த சில ஆண்டுகளுக்கு பங்குச் சந்தையும் அதே அளவுக்குத் தான் வளர்ச்சி தருமோ என்னவோ!
எனவே, மிகத் திறமையாக நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் பண்டு திட்டம் கூட 12 முதல் 14 சதவீத ரிட்டர்ன் தான் தரக்கூடும். அதனால், இப்போதைக்கு, ஆபரணத்தை விற்று, மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும் யோசனை பெரிய லாபத்தை ஈட்டித் தராது.
சமீபகாலமாக கிரெடிட் ஆன் யு.பி.ஐ. என்றொரு விஷயம் பேசப்படுகிறது. அப்படி என்றால் என்ன?
அசோக், செங்கல்பட்டு.
இதற்கு 'கிரெடிட் லைன்' என்று பெயர். அட்டை இல்லாமல் கிரெடிட் கார்டு இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும். வங்கிகள் வாடிக்கையாளருடைய திருப்பிச் செலுத்தும் பழக்கம், வருவாய் ஆகியவற்றைப் பொறுத்து, ஒரு குறிப்பிட்ட தொகையை 'கிரெடிட் லைனாக' வழங்கும். அது உங்களுடைய மொபைல் போன் யு.பி.ஐ.யுடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
கடையிலோ, இணையத்திலோ பொருட்களையோ, சேவைகளையோ வாங்கும்போது, உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைச் செலுத்துவீர்கள். இந்த 'கிரெடிட் லைன்' வசதியைப் பெற்ற பின்னர், செல்போனில் உள்ள யு.பி.ஐ., பேமென்ட் வழிமுறையில் இதுவும் சேர்ந்துகொள்ளும். இதன் வாயிலாகவும் பணத்தைச் செலுத்தலாம்.
கிரெடிட் கார்டில் இருப்பது போல், இதிலும் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்கான 'இண்ட்ரஸ்ட் ப்ரீ பீரியட்' உண்டு. இந்த கிரெடிட் லைனை வைத்துக்கொண்டு, நண்பர்களுக்கோ தெரிந்தவர்களுக்கோ பணம் அனுப்ப முடியாது. தங்கம், பிட்காய்ன் வாங்க முடியாது. வணிகர்களின் மெர்ச்சன்ட் யு.பி.ஐ., ஐடிகளோடு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும்.
வருங்காலத்தில் இந்த கிரெடிட் லைன் மிகப் பெரிய அளவில் நிதித் துறை புரட்சியை ஏற்படுத்தப் போகிறது என்று வங்கித் துறையினர் நம்புகின்றனர்.
'தேசிய சேமிப்புத் திட்டம் 87'க்கு வழங்கப்பட்டு வந்த 7.50 சதவீதம் வட்டி பூஜ்ஜியமாக அக்டோபர் 1, 2024 முதல் ஆக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பெரிய விளம்பரமில்லாததால், எனக்கு விபரமே தெரியாது. அஞ்சல் துறை இந்த சேமிப்புக் கணக்கை முடித்துக்கொள்ள வற்புறுத்துகிறது. கணக்கை முடித்துக்கொண்டு, எடுக்கும் பணத்துக்கு டி.டி.எஸ்., உண்டா, வரி உண்டா என்பது தெரியவில்லை. மிகப் பெரிய அநியாயம் இல்லையா இது?
வி.சுவாமிநாதன், சென்னை.
உங்களுக்கு விபரம் தெரியவில்லை என்பது துரதிருஷ்டவசமானது தான். 2024 துவக்கத்திலேயே இந்தத் திட்டத்துக்கான வட்டி நிறுத்தப்படும் என்ற தகவலை மத்திய அரசு தெரிவித்துவிட்டது. இதற்கான அறிவிக்கை 2024 ஆகஸ்ட் 29 அன்று வெளியானது. பணத்தை எடுத்துக்கொண்டு, கணக்கை முடித்துக்கொள்ளவும் சொன்னது.
நீங்கள் சொல்வது போல், போதுமான அளவு இந்தத் தகவல் விளம்பரப்படுத்தப்படவில்லையோ, என்னவோ? எடுக்கப் படும் பணம் தொடர்பாக பலரும் வைத்த கோரிக்கையை அடுத்து, பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், வருமான வரிப் பிரிவு 80 சி.சி.ஏ-.,வில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட முதலீட்டுக்கும் அது ஈட்டிய வட்டிக்கும், வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனக்கு தெரிந்த ஒருவருக்கு, எந்தவொரு ஆதாரமும்; பிணையும் இன்றி, நட்பு ரீதியில் ஒரு பெருந்தொகையை கொடுத்திருந்தேன். ஆனால் ஐந்து ஆண்டுகளாகியும் அவர் திருப்பி தரவில்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு, மாதம் தோறும் ஒரு சிறு தொகை தருவதாக எழுதி கொடுத்தார். ஆனால் ஒரே ஒரு மாதம் மட்டும் பணம் கொடுத்தார்; பிறகு தரவில்லை. எனது பணம் கிடைக்க என்ன வழி?
எம்.மார்ட்டின் கோவை.
இதைச் சொல்வதற்கு சங்கடமாகத் தான் இருக்கிறது. ஏதேனும் தர்ம காரியத்துக்கு பணத்தைச் செலவிட்டதாக கருதிக்கொண்டு, விலகிவிடுங்கள். அவர் எழுதிக் கொடுத்ததை வைத்துக்கொண்டு மீண்டும், வழக்கு, நீதிமன்றம் என்று போகலாம். பல ஆண்டுகள் கரைந்து போய்விடும். மனநிம்மதியே இருக்காது.
என் நண்பரின் விதவை சகோதரிக்கு வாரிசு இல்லை. அவரின் வங்கி வைப்பு நிதிக்கு, தனது இளைய சகோதரனை அதாவது என் நண்பரை நாமினியாக நியமித்துள்ளார். அவருக்கு இன்னும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். சகோதரியின் வாழ்நாளுக்குப் பின், என் நண்பர் நாமினியாக பெற்றுக் கொள்ளும் தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டுமா? நாமினேஷன் அல்லாமல் உயில் எழுத வேண்டுமா?
கோ.ராம்பிரசாத், சென்னை.
சகோதரனுக்கு சகோதரி தரும் தொகை 'பரிசு' என்றே கருதப்படும். அதற்கு அவர் வரி ஏதும் செலுத்த வேண்டாம். சகோதரியின் மறைவுக்குப் பின்னர், கிடைக்கும் தொகையை அவர் பல்வேறு இனங்களில் முதலீடு செய்து ஈட்டும் வருவாய்க்கு வரி செலுத்த வேண்டும். வங்கியில் தெளிவான நாமினேஷன் இருந்தால் போதும்.
இருப்பினும், இளைய சகோதரர் தான் வாரிசு என்பதை குறிப்பிட்டு, உயில் எழுதிக் கொள்வது சாலச் சிறந்தது.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881