sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

ஆயிரம் சந்தேகங்கள்

/

ஆயிரம் சந்தேகங்கள்: ஷேர் சர்டிபிகேட்களை பணமாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?

/

ஆயிரம் சந்தேகங்கள்: ஷேர் சர்டிபிகேட்களை பணமாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?

ஆயிரம் சந்தேகங்கள்: ஷேர் சர்டிபிகேட்களை பணமாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?

ஆயிரம் சந்தேகங்கள்: ஷேர் சர்டிபிகேட்களை பணமாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?


ADDED : மார் 02, 2026 02:22 AM

Google News

ADDED : மார் 02, 2026 02:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என்னிடம் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் ஷேர் சர்டிபிகேட்கள் உள்ளன. அந்த சர்டிபிகேட்களைக் கொடுத்து பணம் பெற வழி கூறவும்; அல்லது, வேறொரு நபர் பெயரில் மாற்ற வழி கூறவும். என் வயது 76. உடல்நிலை சரியில்லை.

பி.அப்பண்டியராஜன், மின்னஞ்சல்

நீங்கள் குறிப்பிடும் நிதி நிறுவனம், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனம். அதனால், அவர்களிடமே திருப்பிக் கொடுத்தால், அதன் முகமதிப்பு என்னவோ, அந்தத் தொகையைத் தருவர். இதற்கு ஷேர் சரண்டர் படிவத்தைப் பூர்த்தி செய்து, மூல சர்டிபிகேட்டுகளை உடன் இணைத்து, நிதி நிறுவனக் கிளையில் வழங்க வேண்டும். உங்களால் நேரில் போக முடியாது எனில், யார் இந்த ஆவணங்களை கையில் எடுத்துச் செல்கிறாரோ, அவருக்கு 'ஆத்தரைசேஷன்' கடிதம் கொடுத்து அனுப்புங்கள்.

பங்குகளில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், 'படிவம் எஸ்.எச்.- 4' எனப்படும் 'ஷேர் டிரான்ஸ்பர் டீட்' பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதற்கு ஒரு சிறிய கட்டணத்தை அந்த நிதி நிறுவனம் வசூலிக்கக் கூடும்.

புதிய வரித் திட்டத்தில், 4 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு உள்ளது. ஆனால், தற்சமயம், சாதாரணவர்களுக்கும், மூத்த குடிமகன்களுக்கும் முறையே 2.5 லட்சம் மற்றும் 3 லட்சத்துக்கு மேல் வரி வருவாய் இருந்தால், படிவம் 15ஜி / 15 எச் ஆகியவற்றை தாக்கல் செய்ய முடியவில்லை. புதிய வரி விலக்கு மாற்றம் பற்றி வங்கிகளுக்குத் தெரியுமா, தெரியாதா? அதற்கேற்ப தங்கள் விதிகளை மாற்ற வேண்டாமா ?

எஸ். சந்திரசேகரன், மின்னஞ்சல் .

வங்கிகளுக்கு எப்படித் தெரியாமல் இருக்க முடியும்? ஆனால், அவர்களுடைய வலைதளங்கள் இன்னும் பழைய வரித் திட்டம் மற்றும் வரி விலக்கு வரம்புகளை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கின்றனவோ, என்னவோ? அவை இன்னும் புதுப்பிக்கப்படாமல் இருக்கலாம். நீங்கள் வங்கிக் கிளைக்கே சென்று, படிவம் 15ஜி / 15 எச். வழங்குவது பொருத்தமாக இருக்கும்.

மேலும், இந்த வயது வித்தியாசம், யார் எந்தப் படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற குழப்பத்தை எல்லாம் நீக்கும் விதமாக, வரும் ஏப்ரல் 1, 2026 முதல் புதிய படிவம் நடைமுறைக்கு வருகிறது. இதற்கு படிவம் 121 என்று பெயர். இது எல்லாவற்றையும் இன்னும் எளிமைப்படுத்தித் தருகிறது.

ஒரு மைனர் சிறுவன், மேஜர் ஆகும்போது, அவர் தனது ஆதார், பான் அட்டை ஆகியவற்றை தாக்கல் செய்துவிட்டு, வங்கிக் கணக்கு உள்ளிட்ட நிதி முதலீடுகளைக் கையாள முடியுமா? அல்லது தாசில்தார், நீதிமன்றத்தை அணுகி, தனது கணக்குகளை நிர்வகிப்பதற்கான ஒப்புதல் பெற வேண்டுமா? இந்த மைனர் சிறுவனுக்கு, அவனது தாய் தான் கார்டியன் மற்றும் நாமினி.

கே. ஹரிநாதன், மின்னஞ்சல்

தாய் இயற்கை கார்டியன் எனும்போது ஒரு பிரச்னையும் இல்லை. மகனுக்கு 18 வயது ஆகும் போது, இயல்பாகவே தாயின் அதிகாரம் நீங்கிவிடும். மகன் மேஜர் ஆனவுடன், தனது ஆதார், பான் அட்டை உள்ளிட்டவற்றை வங்கியில் கொடுத்து, புதிய கே.ஒய்.சி., செய்துகொள்ள வேண்டும். புதிய புகைப்படத்தைப் பதிவதோடு, கையெழுத்தையும் சேர்க்க வேண்டும். இதற்காக தாசில்தார், நீதிமன்றம் செல்ல வேண்டாம். தாய் ஏற்கனவே நாமினி என்பதால், அவரது அந்த நிலை அப்படியே தொடரும்.

வங்கிக்கு மட்டுமல்ல, மியூச்சுவல் பண்டு, பி.பி.எப்., டீமாட் கணக்கு உள்ளிட்டவற்றுக்கும் இதேபோன்று புதிய படிவங்களைக் கொடுத்து, அவற்றை இயக்கத் துவங்கலாம்.

நான் 23 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனை 10 ஆண்டுகளுக்குப் பெற்றேன். தற்போது 19 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது. தங்கத்தை அடமானம் வைத்து, வீட்டுக்கடனை அடைத்துவிடலாமா என்று யோசிக்கிறேன். இது சரியா?

கே. எத்திராஜ், வாட்ஸாப்

ஒரு கடனை அடைக்க இன்னொரு கடனை வாங்குவதற்கு திட்டமிடுகிறீர்கள். இரண்டின் சாதக பாதகங்களைப் பாருங்கள். வீட்டுக் கடன், 7.50 முதல் 8.50 சதவீத வட்டியில் கிடைக்கிறது. தங்க நகைக் கடனோ, 9 முதல் 11 சதவீத வட்டி வரை இருக்கும். தனியாரிடம் போனால், இன்னும் வட்டி அதிகம்.

கால ரீதியாக பார்த்தாலும், வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த இன்னும் உங்களுக்கு 8 ஆண்டுகளேனும் அவகாசம் கிடைக்கும். தங்க நகைக் கடனோ குறுகிய கால கடன். அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளுக்குள் அடைக்க வேண்டும். மேலும், இப்போதெல்லாம் முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்தித் தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்ற நிலை இருக்கிறது.

உங்களையே கேள்வி கேளுங்கள். எதற்காக வீட்டுக் கடனை உடனடியாக அடைக்க வேண்டும்? வேறு ஏதேனும் கடன் வாங்க திட்டமிடுகிறீர்களா? அல்லது இந்தக் கடன் ஒரு தொந்தரவாக மனமெங்கும் சுற்றி வருகிறதா? அல்லது வயது ஆகிவிட்டது, இனிமேல் இந்தச் சுமை வேண்டாம் என்று கருதுகிறீர்களா? இவற்றுக்கெல்லாம் 'ஆம்' என்ற பதில் கிடைக்குமானால், தாராளமாக, நகைக் கடன் வாங்கி, வீட்டுக் கடனை அடைத்துவிடுங்கள்.

ஆனால், தங்கம் விலை உயர்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முயற்சியில் இறங்கினீர்கள் என்றால், கொஞ்சம் ஜாக்கிரதை. தங்கம் இப்படியே இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

கூடவே, ஓர் அபாயத்தையும் எதிர்பாருங்கள். நாளை தங்கத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தால், நகைக் கடன் கொடுத்தவர்கள், தாங்கள் கொடுத்த தொகைக்கு இணையாக கூடுதல் நகையைக் கொண்டுவந்து வைக்கச் சொல்வர்.

உங்களிடம் உபரியாக நகை இருந்து, வீட்டுக் கடனை விடக் குறைவான வட்டி விகிதத்தில் எந்த வங்கியேனும் நகைக் கடன் கொடுத்தால், அப்போது இந்த முயற்சியில் இறங்குவது பொருத்தமாக இருக்கும்.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல்வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்






      Dinamalar
      Follow us