ADDED : ஜூலை 13, 2026 09:08 AM

என் ஓய்வூதிய நிதியை, 'நிப்டி பீஸ் இ.டி.எப்., (லார்ஜ் கேப்), நிப்டி நெக்ஸ்ட் 50 இ.டி.எப்., ஆக்டிவ் மிட் கேப் பண்டு, ஆக்டிவ் மல்டி கேப் பண்டு, ஆக்டிவ் மல்டி அசெட் பண்டு' ஆகிய பண்டுகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். முறையான முதலீட்டின் வாயிலாக, நீண்டகால அளவில் சொத்து சேர்ப்பது தான் திட்டம். இந்த முதலீட்டு உத்தி சரிதானா?
ராமலிங்கம், கரூர்
உங்கள் போர்ட்போலியோவை கூர்ந்து பார்க்கும்போது, யோசித்து தான் திட்டம் தீட்டியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. அதாவது, உங்களுடைய 'அடிப்படை' முதலீடாக, குறைந்த கட்டணம் கொண்ட நிப்டி பீஸ் மற்றும் நிப்டி நெக்ஸ்ட் 50 ஆகிய இ.டி.எப்-.,களை தேர்வு செய்திருப்பது நல்ல உத்தி. இது, பங்கு சந்தையின் சராசரி வளர்ச்சியை பெற்று தரும்.
அதேநேரம், சந்தை ஈட்டும் வருவாயை தாண்டி கூடுதல் லாபம் பெறுவதற்காக, ஆக்டிவ் மிட் கேப் பண்டை சேர்த்திருப்பது, முதலீட்டுக்கு வேகம் கொடுக்கும். பங்கு சந்தை வீழ்ச்சி ஏற்பட்டால் சமாளிப்பதற்கு, 'மல்டி அசெட் பண்டு'
என்ன ஒன்று, கொஞ்சம் ஓவர்லாப் இருப்பது போல் தெரிகிறது. ஏனெனில், முதல் 100 நிறுவனங்களை கொண்ட லார்ஜ் கேப் மற்றும் அடுத்த 150 நிறுவனங்களை கொண்ட மிட் கேப் ஆகியவற்றை தனித்தனி பண்டுகள் வாயிலாக வாங்கி விட்டீர்கள். இதற்கு நடுவே, ஆக்டிவ் மல்டி கேப் பண்டில் முதலீடு செய்யும்போது, அது மீண்டும் அதே லார்ஜ் மற்றும் மிட் கேப் பங்குகளில் தானே முதலீடு செய்யும்?
இப்படி வேண்டுமானால் செய்யுங்கள், இந்த மல்டி கேப் பண்டை விட்டுவிட்டு, நல்ல ஸ்மால் கேப் பண்டு ஒன்றில் அந்த பணத்தை போடுங்கள். ஆண்டுதோறும் உங்கள் பண்டுகள் என்ன வருவாய் ஈட்டுகின்றன என்பதை பார்த்துவிட்டு, ரீபேலன்சிங் செய்ய வேண்டும் என்று தோன்றினால் செய்யுங்கள்.
5 லட்சம் ரூபாய் வரையான வங்கி வைப்பு நிதிக்கான காப்பீடு உயர்த்தப்படும் என்று பல ஊடகங்களில் செய்தி வருகிறதே, உண்மையா?
சாந்தா காளியப்பன், திருவாரூர்
இது போன்ற பல உறுதி செய்யப்படாத ஊகச்செய்திகள் வலம் வருகின்றன. ஆங்கில வணிக நாளிதழ்கள் இரண்டு விதமான கருத்துகளை சொல்கின்றன. மூத்த குடிமக்கள் வங்கியில் சேமிக்கும் வைப்பு நிதி தொகை முழுமைக்கும் வைப்பு நிதி காப்பீடு வழங்கினால் என்ன என்ற சிந்தனை மத்திய அரசிடம் இருக்கிறதாம். இப்போது, 5 லட்சம் ரூபாய் வரை தான் இந்தக் காப்பீடு உள்ளது.
இன்னொரு செய்தியோ, மூத்த குடிமக்கள் வைப்பு நிதியை மட்டுமே நம்பியிருக்கும் சூழலில், அவற்றுக்கான வட்டி விகிதங்களை 1.50 - 2 சதவீதம் வரை உயர்த்தினால் என்ன என்ற எண்ணமும் இருக்கிறதாம்.
வேறொரு புள்ளிவிபரத்தின்படி, இந்தியாவில் வங்கி வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்திருப்போரில், 47 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள் தானாம். மேலே சொன்ன சிந்தனைகள் செயல்வடிவம் பெறுமா என்று தெரியாது. இப்போதைக்கு இவையெல்லாம் ஆசை கற்பனைகள்; மண் கோட்டைகள் தான்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் வாங்கிய பங்கு ஒன்று இப்போது 323 சதவீத ரிட்டர்னை கொடுத்துள்ளது. இதே பங்குகளை இப்போது வாங்கினாலும், என் லாப விகிதம் சற்றே குறையும். ஆனால், பணத்தை போட்டவுடனே என் முதலீடு லாபகரமாக ஆகிவிடும் அல்லவா? இது போன்று 'அப்வேர்டு ஆவரேஜிங்' செய்யலாமா?
வீ.அரிகரசுதன், கல்பாக்கம்
சரியான நேரத்தில், முறையான ஆய்வின் மூலம் பல மடங்கு லாபம் தரும் 'மல்டிபேக்கர்' பங்கை கண்டுபிடித்து, முதலீடு செய்து லாபம் ஈட்டியதற்கு வாழ்த்துகள். ஆனால், 'பணத்தை போட்டவுடனே என் முதலீடு லாபகரமாக ஆகிவிடும்' என்று நீங்கள் நினைப்பது, கண்ணை கட்டும் கணக்கு மாயை.
பழைய பங்குகளின் வளர்ச்சியால் உங்களின் ஒட்டுமொத்த முதலீடும் லாபத்தில் பச்சையாக காட்டுமே தவிர, நீங்கள் போடும் புதிய பணம் உங்களுக்கு லாபம் ஈட்ட வேண்டும் என்றால், அந்த பங்கின் விலை இன்றைய அதிகபட்ச விலையிலிருந்து மேலும் பல மடங்கு உயர்ந்தாக வேண்டும்.
எனவே, இப்போது முதலீடு செய்யும்போது, அந்த பங்கின் முன்பு வாங்கிய விலையை மறந்து விடுங்கள். இன்றைக்கு தான் அந்த பங்கில், முதன்முறையாக பணத்தை முதலீடு செய்வதாக கருதி கொள்ளுங்கள்.
இன்றைக்கு அந்த நிறுவனத்தின் தொழில் வளர்ச்சி எப்படி இருக்கிறது? அதன் நிதிநிலை மற்றும் அலகுகள் சொல்வதென்ன? அந்த அடிப்படை அலகுகளை ஒட்டி அதன் தற்போதைய விலை இருக்கிறதா என்றெல்லாம் யோசியுங்கள். ஒருவேளை இப்போதும் அந்த பங்கு கவர்ச்சிகரமாகவும், மதிப்புமிக்கதாகவும் இருக்கிறது என்று தோன்றினால் முதலீடு செய்யுங்கள்.
இதை ஏன் செய்யச் சொல் கிறேன் என்றால், ஒரு பங்குக்கு வளர்ச்சி காலம் ஒன்று இருந்தால், சரிவு காலம் என்று ஒன்று இருந்தே தீரும். நீங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன் வாங்கிய போது, அதன் அடிப்படை அலகுகள் சாதகமாக இருந்திருக்கும், அதனால், அந்த பங்கின் விலை உயர்ந்திருக்கும். இப்போது அதன் முழு ஓட்டத்தை நிறைவு செய்து, சரிவுக்கு காத்திருக்கலாம் அல்லவா? அதனால், 'அப்வேர்டு ஆவரேஜிங்' செய்வது தவறல்ல, அந்த பங்கு இப்போதும் அடிப்படை மதிப்புடன் இருந்தால், இதை செய்யலாம்.
பல்வேறு வங்கிகளில் வைப்பு நிதியாக 10 லட்சம் ரூபாய் வைத்துள்ளேன். வீட்டுக்கடனும் இருக்கிறது. நீங்கள் உங்கள் பத்தியில் குறிப்பிட்டது போல் வீட்டுக்கடன் ஓவர் டிராப்டுக்கு மாற்றித் தரச்சொல்லி, என் வங்கியில் கேட்கலாமா, அவர்கள் செய்வார்களா? என்ன கட்டணம் கேட்பர்?
ராஜமாணிக்கம், மின்னஞ்சல்.
தாராளமாக செய்வர். வங்கியை பொறுத்து, கன்வர்ஷன் கட்டணம் வேறுபடும். இந்த வீட்டுக்கடன் ஓ.டி.,யை பற்றி இந்த பகுதியில் எழுதிய போது, மியூச்சுவல் பண்டு துறையைச் சேர்ந்த மூத்த நிபுணரான பத்மநாபன் பேசினார்.
அதே 10 லட்சம் ரூபாயை 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து, அது தோராயமாக ஆண்டுதோறும் 13 சதவீதம் வருவாய் ஈட்டி தருமானால், 20 ஆண்டுகள் கழித்து, அந்த முதலீடானது, 1.15 கோடி ரூபாய் ஆகுமே? வீட்டுக்கடனுடைய இ.எம்.ஐ.யை குறைத்துக்கொள்வது புத்திசாலித்தனமா, கூடுதல் வருவாய் பெறுவது புத்திசாலித்தனமா என்று அவர் கேள்வி எழுப்பினார். நல்ல சிந்தனை, நீங்களும் யோசிக்கலாமே?
