பி.எப்., காப்பீடு தொடர்பான புகார்கள்: விளக்கம் அளித்தது இ.பி.எப்.ஓ.,
பி.எப்., காப்பீடு தொடர்பான புகார்கள்: விளக்கம் அளித்தது இ.பி.எப்.ஓ.,
ADDED : டிச 19, 2025 01:43 AM

தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பயன் தரும் வகையில், 'தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியுடன் இணைக்கப்பட்ட காப்பீடு' திட்ட விதிகளில் மிக முக்கியமான விளக்கத்தை, இ.பி.எப்.ஓ., எனப்படும் பி.எப்., அமைப்பு வெளியிட்டுள்ளது.
வேலை மாறிய தொழிலாளர்களில், முந்தைய வேலையில் இருந்து விலகிய நாள் மற்றும் தற்போதைய வேலையில் சேர்ந்த நாளுக்கு இடையே வரும் விடுமுறை நாளில் இறப்பு நேரிட்டால், பணியில் இடைவெளி ஏற்பட்டதாக கூறி, அவரது குடும்பத்துக்கு காப்பீடு தொகை மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, விரிவான விளக்கங்களுடன் கூடிய சுற்றறிக்கையை இ.பி.எப்.ஓ., வெளியிட்டுள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள்:
* ஒரு தொழிலாளர் தனது வேலையை விட்டு மற்றொரு வேலையில் சேரும்போது, இடையில் வரும் சனி, ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்கள் இனி பணி இடைவேளையாக கருதப்படாது.
உதாரணத்திற்கு, ஒரு தொழிலாளர், வெள்ளிக்கிழமை வேலையிலிருந்து விலகி, திங்கட்கிழமை புதிய வேலையில் சேர்ந்தால், இடையில் உள்ள சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியான பணிக்காலமாக கணக்கிடப்படும். இதன் வாயிலாக, இந்த இடைவெளியில் தொழிலாளரின் இறப்பு நேரிட்டால், இ.டி.எல்.ஐ., எனப்படும் பி.எப்., உடன் இணைந்த காப்பீடு பலன்கள் தடையின்றி வழங்கப்படும்.
* பி.எப்., வசதியுள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, இரண்டு வேலைகளுக்கு இடையே அறுபது நாட்கள் வரை இடைவெளி இருந்தாலும், காப்பீடு சேவையை பொறுத்தவரை, அது தொடர்ச்சியான பணிக்காலமாகவே அங்கீகரிக்கப்படும்.

