வலுவான வளர்ச்சி பாதையில் பாதுகாப்பு துறை நிறுவனங்கள்
வலுவான வளர்ச்சி பாதையில் பாதுகாப்பு துறை நிறுவனங்கள்
ADDED : டிச 16, 2025 05:55 AM

இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது, பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த எச்.ஏ.எல்., - பி.டி.எல்., மற்றும் கப்பல் கட்டும் நிறுவனங்களுக்கு நிலையான பணிவாய்ப்பை உறுதி செய்வதாக இருக்கும் என, மோதிலால் ஓஸ்வால் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
அதில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
அடுத்த சில ஆண்டுகளுக்கு ஏவுகணைகள், விமானங்கள், கப்பல்கள், மின்னணுவியல் உபகரணங்களுக்கான ஆர்டர் உறுதியாக கிடைக்கும்.
வரவிருக்கும் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இத்துறை சார்ந்த உள்நாட்டு நிறுவனங்களுக்கு 92 சதவீதம் அளவிற்கு ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன.
இந்தியாவின் 'பிரம்மோஸ், ஆகாஷ், பினாகா' போன்ற ஏவுகணைகளுக்கு ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் தேவை அதிகரித்துள்ளது. 'மசகான் டாக்' போன்ற கப்பல் கட்டும் நிறுவனங்களும் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள வாடிக்கையாளர்களிடம் பேச்சு நடத்தி வருகின்றன. 40,000 கோடி ரூபாய் அவசரகால கொள்முதல் நிதியால், விரைவான ஒப்புதல் கிடைக்கும்.
97 தேஜஸ் எம்.கே.1.ஏ., விமானங்களுக்கு தொடர்ந்து ஆர்டர் உள்ளதால், எச்.ஏ.எல்., நிறுவனத்திற்கு பல ஆண்டுகளுக்கு நிலையான உற்பத்தி வாய்ப்பை அளிக்கும்.
இவை போன்ற காரணங்களால், பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் லாப வளர்ச்சி வரும் 2028ம் நிதியாண்டிற்குள் 37 சதவீதம் அளவுக்கு உயரும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

