பண்டமென்டல் அனாலிசி்ஸ் : முதலீட்டாளர்கள் புதிய கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும்
பண்டமென்டல் அனாலிசி்ஸ் : முதலீட்டாளர்கள் புதிய கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும்
ADDED : அக் 04, 2025 11:37 PM

டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம், கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன், 1945ல் நிறுவப்பட்ட, இந்தியாவில் வணிக வாகனப் பிரிவில் முன்னணியிலும், பயணியர் வாகனப் பிரிவில் முதல் மூன்று இடங்களிலும் இருக்கும் ஒரு பெரும் நிறுவனம் ஆகும். 2008ல் ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் வாயிலாக, உலகளாவிய பிரீமியம் கார் சந்தையில் கால் பதித்தது.
![]() |
வணிக வாகன நிறுவனம்
இதன் வளர்ச்சி உள்கட்டமைப்பு, சரக்கு போக்குவரத்து மற்றும் தொழில்துறை செயல்பாடுகளைப் பொறுத்தது.
![]() |
பயணியர் வாகன நிறுவனம்:
இதில் பயணியர் வாகனம், எலெக்ட்ரிக் வாகனம் மற்றும் ஜாகுவார் லேண்டு ரோவர் ஆகிய பிரிவுகள் அடங்கும். இது நுகர்வோர் மற்றும் தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்டு வளரும்.
பிரிப்பின் பலன்கள்:
மேம்பட்ட நிர்வாக கவனம், முதலீட்டுத் தேவைகளுக்கு தனி சந்தை அணுகல், முதலீட்டாளர்களுக்குத் தெளிவான மதிப்பீடு, அதிக செயல்திறன் மற்றும் விரைவான முடிவெடுக்கும் திறன்.
வணிக வாகனம்
வணிக வாகனப் பிரிவை வலுப்படுத்த, டாடா மோட்டார்ஸ், இத்தாலியைச் சேர்ந்த இவேகோ நிறுவனத்தை 3.80 பில்லியன் யூரோ மதிப்பில் கையகப்படுத்த உள்ளது. இது ஏப்ரல் 2026-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை நிலவரம்:
இவேகோ ஐரோப்பிய ஒன்றியத்தில் 11 சதவீத கனரக வாகன சந்தையைக் கொண்டுள்ளது.
வளர்ச்சி:
இந்த கையகப்படுத்தலுக்குப் பிறகு, ஒன்றுபட்ட நிறுவனம் கனரக வாகன விற்பனையில், சர்வதேச அளவில் நான்காவது பெரிய நிறுவனமாக மாறும். இதன் வருமானம் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய செயல்பாட்டை விட மூன்று மடங்கு அதிகம்.
நிதி:
கையகப்படுத்தலுக்கான நிதி 3.80 பில்லியன் யூரோ மதிப்புள்ள 'பிரிட்ஜ் டெப்ட்' வாயிலாக மேற்கொள்ளப்பட்டு, 12 மாதங்களுக்குள் 70% நீண்டகாலக் கடன் மற்றும் 30% ஈக்விட்டியாக மறுநிதியீடு செய்யப்படும். ஆண்டுக் கிட்டத் தட்ட 6,000 கோடி ரூபாய் நேர்மறை ரொக்கத் தொகையைக் கொண்டு கடனை அடைக்க முடியும்.
உள்நாட்டு வணிக வாகனம்:
உள்நாட்டில் 37.10 சதவீத சந்தையுடன், டாடா மோட்டார்ஸ் முன்னணியில் உள்ளது. 2025-26 இரண்டாம் அரையாண்டில் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய 'டாடா ஏஸ் புரோ' அறிமுகம், சிறு பயன்பாட்டு வாகனப் பிரிவில் இழந்த சந்தையை மீட்க உதவும் என நம்பப்படுகிறது.
பயணியர் வாகனம்:
கடந்த நிதியாண்டில், மொத்த விற்பனையில் லேண்டு ரோவர் பிரிவு 93 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது. டிபெண்டர், ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
ஜாகுவார் பிராண்டு லாப இழப்பைத் தருவதால், லாபமற்ற செடான் மாடல்களைக் குறைத்து, அனைத்து ஜாகுவார் கார்களையும் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
சைபர் தாக்குதல் பாதிப்பு:
ஆகஸ்ட் 31 முதல் ஜாகுவார் மீது நடந்த சைபர் தாக்குதலால், இங்கிலாந்தில் மூன்று தொழிற்சாலைகளில் செப்டம்பர் மாதம் உற்பத்தி பாதிக்கப்பட்டு, வாரந்தோறும் 50 மில்லியன் யூரோ நஷ்டம் ஏற்பட்டது.
சந்தை சவால்கள்:
அமெரிக்காவில் தேவை அதிகரித்தாலும், ஐரோப்பா மற்றும் சீனாவில் சொகுசு வாகனங்கள் மீதான கூடுதல் வரியால் தேவை குறைந்துள்ளது.
உள்நாட்டு பயணியர் வாகனம்:
டாடா மோட்டார்ஸ் 2025 நிதியாண்டில் 13.20 சதவீத சந்தையைக் கொண்டுள்ளது. ஜி.எஸ்.டி., குறைப்புக்குப் பின், 2025-26 இரண்டாம் அரையாண்டில், உள்நாட்டில் பயணியர் வாகனங்களின் தேவை 8--10 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெக்ஸான் மற்றும் பஞ்ச் போன்ற காம்பாக்ட் எஸ்.யு.வி., மாடல்கள் சந்தையைப் பிடிக்கும் என நம்பப்படுகிறது.
மின்சார வாகனம்:
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், ஒட்டுமொத்த மின்வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸின் பங்கு 45 சதவீதமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டில் 50 சதவீத சந்தையைப் பிடிக்க இலக்கு வைத்துள்ளது. 2030ம் ஆண்டுக்குள் பயணியர் வாகனப் பிரிவில் 25 சதவீதம் சி.என்.ஜி., 20 சதவீதம் மின் வாகனம், 5 சதவீதம் டீசல் மற்றும் 50 சதவீதம் பெட்ரோல் கார்கள் எனத் திட்டமிட்டு உள்ளது.
டாடா சன்ஸ் ஆதரவு:
டாடா மோட்டார்ஸ், டாடா சன்ஸ் குழுமத்தில் ஒரு முக்கியமான நிறுவனமாக உள்ளதுடன், தொடர்ந்து நிதி ஆதரவைப் பெற்று வருகிறது. டாடா சன்ஸ், தனது துணை நிறுவனமான அக்ராட்டஸ் எனர்ஜி சொலுசன்ஸில் முதலீடு செய்து, இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் பேட்டரி செல்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நிறுவத் திட்டமிட்டுள்ளது.
எதிர்பார்ப்புகள்
* வருங்காலத்தில் பயணியர் வாகனத் தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி உயர்வால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* உள்நாட்டு வணிக வாகனத் தேவை நிலைத் தன்மையுடன் இருப்பது சாதகமாக அமையும்.
* வணிகப் பிரிப்பு செயல்முறை நிறைவடையும் நிலையில், நிறுவனத்தின் பங்கு ஒரு நிலைத்தன்மையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* முதலீட்டாளர்கள் பிரிக்கப்பட்ட இரு நிறுவனங்களையும் அவற்றின் தனிப்பட்ட தொழிலாகக் கருதி புதிய கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும்.
ஷ்யாம் சேகர்,
ஐதாட்பிஎம்எஸ் பங்கு ஆய்வு குழு