ஹெச்.சி.எல்., டெக்னாலஜிஸ்: அதிக பாதுகாப்பு, குறைவான வளர்ச்சி
ஹெச்.சி.எல்., டெக்னாலஜிஸ்: அதிக பாதுகாப்பு, குறைவான வளர்ச்சி
ADDED : ஏப் 19, 2026 12:32 AM

இந்தியாவின் முன்னணி ஐந்து ஐ.டி., நிறுவனங்களுள் ஒன்று 'ஹெச்.சி.எல்., டெக்னாலஜிஸ்'. 1999ம் ஆண்டு ஐ.பி.ஓ., வெளியீட்டுக்கு வந்த இந்நிறுவனம், அதன்பின், சர்வதேச அளவில் அவுட்சோர்சிங் மற்றும் ஒருங்கிணைந்த ஐ.டி., சேவைகளில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
மென்பொருள் தீர்வுகள், பொறியியல் ஆராய்ச்சி மற்றும் பி.பி.ஓ., உள்ளிட்ட சேவைகளை 46 நாடுகளில் வழங்கி வரும் இந்நிறுவனத்தில், கிட்டத்தட்ட 2.26 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
தற்போது ரோஷினி நாடார் மல்ஹோத்ரா தலைவராகவும், சி.விஜயகுமார் தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்து நிறுவனத்தை வழிநடத்துகின்றனர். இதன் அட்ரிஷன் விகிதம் 12.4 சதவீதமாக உள்ளது.
நிறுவனத்தின் செயல்பாடு கடந்த 2025- - 26ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், ஹெச்.சி.எல்., நிறுவனத்தின் ஐ.டி., மற்றும் பிஸினஸ் சர்வீசஸ் பிரிவு 3.80 சதவீதமும், இன்ஜினியரிங் மற்றும் ஆராய்ச்சி பிரிவு 10.80 சதவீதமும், சாப்ட்வேர் பிரிவு 3.10 சதவீதமும் வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. வாடிக்கையாளர் வருவாயைப் பொறுத்தவரை, முதல் 10 இடங்களிலுள்ள வாடிக்கையாளர்களிடம் வளர்ச்சி காணப்பட்டாலும், 11 முதல் 20 இடங்களில் உள்ளவர்களிடம் 6.80 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் 2,800 புதிய பணியாளர்கள் இணைந்துள்ளனர்.
புதிய ஒப்பந்தங்களை பொறுத்தவரை, கடந்த ஆண்டை விட 21.20 சதவீத வளர்ச்சியுடன், மொத்த மதிப்பு 96,720 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில், மூன்றாவது காலாண்டில் மட்டும் 28,830 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த முன்னேற்றங்களால், நிறுவனத்தின் ஆண்டு வருவாய் வளர்ச்சி மதிப்பீடு 4 சதவீதம் முதல் 4.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏ.ஐ., சார்ந்த தகவல்கள் ஜெனரேட்டிவ் ஏ.ஐ., தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு, டெஸ்ட்டிங், பி.பி.ஓ., போன்ற துறைகளில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏ.ஐ., சார்ந்த புதிய நிறுவனங்கள் மற்றும் ஜி.சி.சி.,க்களின் வருகையால் ஐ.டி., சேவை துறையில் போட்டி அதிகரித்துள்ளதுடன், பல்வேறு பணிகள் தானியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதனால், அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் ஐ.டி., துறையின் வருவாயில், கிட்டத்தட்ட 15 - -20 சதவீத சரிவு ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பி.பி.ஓ., மற்றும் நிதி சேவைகளில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், ஹை-டெக் நிறுவனங்கள், தங்களின் ஏ.ஐ., முதலீடுகளுக்கான வருவாயை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
நிறுவனத்தின் நிலை மற்ற ஐ.டி., நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், ஹெச்.சி.எல்., பாதுகாப்பான நிலையில் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அதன் வருவாயில், 25 சதவீதம் பங்களிப்பு கொண்ட உட்கட்டமைப்பு மேலாண்மை சேவைகளும் (ஐ.எம்.எஸ்.,), 17 சதவீதம் பங்களிப்பு கொண்ட பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு சேவைகளும் (இ.ஆர்.அண்டு.டி.,) அமைகின்றன. இப்பிரிவுகளில் செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் பாதிப்புகள் மிகக்குறைவு என்பதால், வரும் நிதியாண்டில், வருடாந்திர வருவாய் சரிவு 2 - 3 சதவீதம் என்ற குறைந்த அளவிலேயே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மற்ற சேவை பிரிவுகளைவிட குறைவான பாதிப்பாகும்.
தற்போது ஹெச்.சி.எல்., நிறுவனத்தின் மொத்த வருவாயில் 15 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சேவைகள் பிரிவு, ஜென் ஏ.ஐ., தாக்கத்திற்கு எதிரான அரணாக கருதப்படுகிறது.
இத்துறைக்கு தேவையான தனித்துவமான நிபுணத்துவம், சிக்கலான வன்பொருள் - மென்பொருள் ஒருங்கிணைப்பு மற்றும் காப்புரிமை உருவாக்கம் போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும். குறிப்பாக விண்வெளி, உற்பத்தி மற்றும் வாகன துறைகளில் உள்ள பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை விதிகள் காரணமாக மனிதர்களின் நேரடி சரிபார்ப்பு இன்றும் அவசியமாக உள்ளது. இது இத்துறையில் முழுமையான ஏ.ஐ., ஆதிக்கத்தை தடுக்கிறது.
ஹெச்.சி.எல்., நிறுவனத்தின் ஐ.எம்.எஸ்., பிரிவு, குறைவான மனித உழைப்பு தேவைப்படும் பாதுகாப்பான துறையாக கருதப்படுகிறது. 2018-ல் ஐ.பி.எம்., நிறுவனத்திடமிருந்து 1.8 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் மென்பொருள் தயாரிப்புகளை வாங்கியது, ஒரு இந்திய ஐ.டி., நிறுவனம் மேற்கொண்ட மிகப்பெரிய அறிவுசார் சொத்து ஒப்பந்தமாகும்.
தற்போது நிறுவன வருவாயில், 10 சதவீதம் மென்பொருள் பிரிவில் இருந்து கிடைக்கிறது. இது நீண்டகால சந்தா வருவாயை வழங்குவதோடு, நிறுவனத்தின் சராசரி லாப வரம்பான 18 - 19 சதவீதத்தை விட அதிகமாக, 27 சதவீத லாபத்தை அளிக்கிறது.
நிறுவனம் தனது லாபத்தில் 90 - 95 சதவீதத்தை டிவிடெண்டாக வழங்கும் ஆரோக்கியமான நடைமுறையை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. தற்போது இதன் டிவிடெண்டு ஈவுத்தொகை 3.75 சதவீதமாக உள்ளது.
டி.சி.எஸ்., நிறுவனம் அதிக சொத்துக்களை கொண்ட வணிக மாதிரியை நோக்கி நகரும் நிலையில், ஹெச்.சி.எல்., நிறுவனம், குறைந்த சொத்துக்களை கொண்ட சேவை நிறுவனமாகவே தொடர விரும்புகிறது. இதனால் தற்போதைய டிவிடெண்டு வழங்கும் முறையில் எந்த மாற்றமும் இருக்காது என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஹெச்.சி.எல்., நிறுவனம் வலுவான ஒப்பந்தங்கள், ஐ.எம்.எஸ்., பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு போன்ற பாதுகாப்பான வருவாய் துறைகள் மூலம் நடுத்தர காலத்தில் நிலைத்தன்மையை காட்டுகிறது.
ஜென் ஏ.ஐ., காரணமான வருவாய் அழுத்தங்கள் இருந்தாலும், அதன் பாதிப்பு மற்ற ஐ.டி., நிறுவனங்களை விட குறைவாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. மிதமான வளர்ச்சி, அதிக டிவிடெண்டு மற்றும் சீரான 'புக்-டு-பில்' காரணமாக, இது பாதுகாப்பான ஆனால், அதிக வளர்ச்சி இல்லாத முதலீடாக பார்க்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு இந்த அறிக்கை முதலீட்டுப் பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டும் இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டும் இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

