/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஜாமின் கையெழுத்து போட்டதற்கான நோட்டீஸிலிருந்து தப்பிப்பது எப்படி?
/
ஜாமின் கையெழுத்து போட்டதற்கான நோட்டீஸிலிருந்து தப்பிப்பது எப்படி?
ஜாமின் கையெழுத்து போட்டதற்கான நோட்டீஸிலிருந்து தப்பிப்பது எப்படி?
ஜாமின் கையெழுத்து போட்டதற்கான நோட்டீஸிலிருந்து தப்பிப்பது எப்படி?
UPDATED : அக் 06, 2025 02:45 PM
ADDED : அக் 05, 2025 11:00 PM

என் தம்பி மகன் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். முதல் ஆண்டு கட்டணம் கட்டியாகி விட்டது. இப்போது ஒரு பொதுத் துறை வங்கியில் கல்வி கடன் கேட்ட போது, என் தம்பியின் சிபில் ஸ்கோர் தேவையான அளவு இல்லை என்று நிராகரித்து விட்டனர். கல்வி கடன் பெறுவதற்கு தந்தையின் சிபில் ஸ்கோர் அவசியமா?
கே. சேஷாத்ரி, வடபழனி
கல்வி கடன் விஷயத்தில் ஆர்.பி.ஐ., எந்தவிதமான வரையறையையும் வகுக்கவில்லை. ஒவ்வொரு வங்கியும், அதன் நிர்வாக குழு வகுத்துள்ள கடன் வழங்குவதற்கான விதிமுறைகளின் படி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
மாணவர் பெயரில் தான் கடன் வழங்கப்படுகிறது. ஆனால், இணை கடனாளியாக உள்ள பெற்றோரது கடனை கட்டும் திறனை மதிப்பிடுவதற்கு, வங்கிகள் சிபில் ஸ்கோரை பார்க்கின்றன. அதனால், அவரது ஸ்கோர் முக்கியத்துவம் பெறுகிறது.
கல்விக் கடன் கொடுக்கும்போது, மாணவரது எதிர்கால வருவாய் ஈட்டும் திறன் மட் டுமே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும், பெற்றோரது சிபில் ஸ்கோருக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்று கேரள உயர் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகளில் தீர்ப்பாகியுள்ளது. ஒரு சில வங்கிகள் மேல்முறையீடு செய்து, உத்தரவுக்கு தடை ஆணையும் பெற்றுள்ளன.
கடன் கொடுக்க மறுக்கும் வங்கியிடம், அதற்கான காரணத்தையும் வங்கி விதிமுறைகளையும் எழுத்துப்பூர்வமாக கொடுக்க சொல்லி கேளுங்கள் . பின்னர், அந்த வங்கியின் நோடல் அலுவலர், குறைதீர் அலுவலருக்கு புகார் அளியுங்கள். அங்கேயும் தீர்வு கிடைக்கவில்லை எனில், ஆர்.பி.ஐ., குறைதீர் ஆணையரிடம் புகார் அளியுங்கள். நீதிமன்றத்தை நாடவும் தயங்க வேண்டாம். பரிகாரம் கிடைக்கலாம்.
பல பரஸ்பர சகாய நிதி நிறுவனங்கள், பொருளாதார குற்றப்பிரிவினரால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்குமா?
கிருஷ்ணமூர்த்தி, பெரம்பூர்.
தாமதம் ஆகும். வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன. சில நிதி நிறுவனங்களுடைய சொத்துக்கள் ஏலம் விட காத்திருக்கின்றன. கண்ணுக்கெட்டிய தொலைவில் தீர்வு தெரிய மாட்டேன் என்கிறது.
என்னிடம் 10 லட்சம் ரூபாய் உள்ளது. இதனை எதில் முதலீடு செய்தால், மாதம் 20,000 ரூபாய் வருவாய் கிடைக்கும்? இந்த வருமானம் முதலீடு செய்த 3ம் மாதத்தில் இருந்து கிடைக்க வேண்டும்.
செ.செல்வக்கோபெருமாள், காஞ்சிபுரம்
மாதம் 20,000 ரூபாய் என்றால், ஆண்டொன்றுக்கு 2.4 லட்சம் ரூபாய். அதாவது, 10 லட்சம் முதலீட்டுக்கு 24 சதவீத ரிட்டர்ன் கிடைத்தால் மட்டுமே இந்த வருவாய் சாத்தியம். நம் நாட்டில், எந்த ஒழுங்குபடுத்தப்பட்ட முதலீட்டு இனமும் இவ்வளவு வருவாய் ஈட்டித் தருவதில்லை.
பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டுகள் நன்றாக இயங்கினால், அதிகபட்சம் 12 முதல் 14 சதவீத ரிட்டர்ன் தரும். அதாவது ஆண்டொன்றுக்கு 1.2 லட்சம் முதல் 1.4 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். இது வரி பிடித்தத்துக்கு முன்புள்ள தொகை என்பதும் ஞாபகமிருக்கட்டும்.
என் சக ஊழியர், ஒரு கூட்டுறவு சொசைட்டியில், மூன்று ஆண்டுகளுக்கு முன் லோன் எடுத்து, கடன் தொகையை செலுத்தாமல், தலைமறைவாகி விட்டார். நான் அவருக்கு ஜாமின் கையெழுத்து போட்ட காரணத்தால், கடன் நிலுவைத்தொகை செலுத்த வற்புறுத்தி, எனக்கு நோட்டீஸ் வந்தது. இதிலிருந்து விடுபடுவதற்கு என்ன வழி?
வெங்கடேஷ், ஓசூர்.
முதலில் கூட்டுறவு சங்க சட்டங்களைப் பற்றி விபரம் தெரிந்த வழக்கறிஞரை அணுகுங்கள். சொசைட்டிக்கு தெளிவாக எழுத்துப்பூர்வமான பதில் கொடுங்கள். அதில், உங்கள் சக ஊழியரை, அதாவது கடன் வாங்கியவரைக் கண்டுபிடித்து அவரிடம் இருந்து பணத்தை வசூல் செய்வது மட்டுமே சரியாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவரது தற்போதைய முகவரி, தொலைபேசி எண் என்று ஏதேனும் தெரிந்தால், அதை பகிர்ந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால், போலீஸில் 'சீட்டிங்' வழக்கு கொடுக்கலாம்.
ஆனால் ஒன்று, நீங்கள் ஜாமீன் கையெழுத்து போட்டிருப்பதால், முழுக்க முழுக்க விடுபடும் வாய்ப்பு குறைவு. நீங்கள் முதன்மை கடனாளியிடம் இருந்து வசூல் செய்ய வற்புறுத்தலாம், உங்களிடம் கடைசி விருப்பமாக மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தலாம்.
மியூச்சுவல் பண்டில் செலுத்திய பணம் 'லாக்-கின்' காலம் மூன்று ஆண்டுகள். ஆனால், என் அவசர தேவைக்கு என் பணத்தை உடனடியாக எடுக்க வேண்டும். என்ன வழி?
எஸ்.ராதாகிருஷ்ணன் , அய்யர் பங்களா, மதுரை
நீங்கள் முதலீடு செய்துள்ள பண்டின் விதிகளைப் படித்து பாருங்கள். ஒரு சில பண்டுகளில், லாக்- - இன் காலம் இருந்தாலும், பகுதியளவு யூனிட்டுகளை ரிடீம் செய்து பணம் எடுத்துக்கொள்ள வாய்ப்பளிக்க கூடும். அப்படி இல்லையெனில், ஒரு சில வங்கிகள், நிதி நிறுவனங்களில், மியூச்சுவல் பண்டு யூனிட்களை அடமானம் வைத்து கடன் பெறலாம்.
மிக மிக அவசர நிலை இருக்குமானால், அதை உங்கள் மியூச்சுவல் பண்டு நிறுவனம், வினியோகஸ்தர்களிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துப் பாருங்கள்.
ஒருவேளை அவர்கள் விதிகளில் ஏதேனும் தளர்வு கொடுக்க வாய்ப்பிருந்தால், செய்து கொடுப்பர்.
எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்து வந்தீர்கள் என்றால், முதலில் வந்தது, முதலில் வெளியேறும். அதாவது, முதல் மாதம் செலுத்திய எஸ்.ஐ.பி., தொகை, மூன்று ஆண்டுகள் காலகட்டத்தை முன்னதாகவே எட்டிவிடும். அந்த யூனிட்டுகளை நீங்கள் ரிடீம் செய்துகொள்ள முடியும்.
பல யு டியூபர்களும், பண்டு நிறுவனங்களும், மொமன்டம், வேல்யூ அல்லது குவாலிட்டி பண்டுகளில் முதலீடு செய்வதே நீண்ட கால வளர்ச்சிக்கு பொருத்தமானது என்று சொல்கின்றனர். அவை, வழக்கமான நிப்டி 50, நிப்டி நெக்ஸ்ட் 50, நிப்டி 150, நிப்டி ஸ்மால்கேப் 250 ஆகிய இண்டக்ஸ் பண்டுகளை விட சிறப்பானவையா?
விஜயகுமார், கரூர்
மொமன்டம், வேல்யூ, குவாலிட்டி பண்டுகள் அனைத்தும், பங்குச் சந்தை ஊக்கத்தோடு இருக்கும்போது, நல்ல வருவாயை ஈட்டித் தரும். ஆனால், சந்தை சரிவு நிலையில் இருக்கும்போது, இவற்றால் அதிக வருவாய் ஈட்ட முடியாது.
நிப்டி 50, நிப்டி நெக்ஸ்ட் 50, நிப்டி 150 ஆகிய இண்டக்ஸ் பண்டுகள் ஆகியவை நிலையானவை. நீண்ட கால அளவில் வருவாய் ஈட்டித் தரக்கூடியவை. மேலே சொன்ன பண்டுகளை விட, அடுத்து சொன்ன பண்டுகளில் நிர்வாகச் செலவு சற்றே அதிகம்.
நிப்டி ஸ்மால்கேப் 250 பண்டுகளில் ஏற்ற இறக்கம் மிக அதிகம், ஆனால், நீண்டகால அளவில் நல்ல வருவாய் ஈட்டித் தரும்.
ஒன்றை விட இன்னொன்று சிறப்பு என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. இவை வெவ்வேறு அணுகுமுறையை ஒட்டி பிறந்த பண்டுகள். இரண்டு வகையான பண்டுகளில் முதலீடு செய்து ரிஸ்க்கையும் குறைத்து, லாபத்தையும் பெருக்கிக் கொள்வதே நல்லது.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
ph: 98410 53881