ஏட்டில் உண்டு; இருப்பில் இல் லை டிஜிட்டல் வெள்ளி பாதுகாப்பானதா?
ஏட்டில் உண்டு; இருப்பில் இல் லை டிஜிட்டல் வெள்ளி பாதுகாப்பானதா?
ADDED : ஜன 16, 2026 01:28 AM

வெள்ளி விலை கிடுகிடுவென உயர்ந்து, வரலாற்று சாதனை அளவை எட்டியுள்ளது. இந்த அதிரடி உயர்வு, முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், 'டிஜிட்டல் சில்வர்' எனப்படும் மின்னணு முறை முதலீடுகள் பாதுகாப்பானதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இதற்கான காரணங்களை, மோதிலால் ஓஸ்வால் மற்றும் ஹெச்.எஸ்.பி.சி., ஆகிய நிறுவனங்கள் தங்களின் ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
அதில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து நிலவி வரும் பற்றாக்குறையின் உச்சகட்டமே அதீத விலை ஏற்றம். சுரங்க உற்பத்தி குறைவு மற்றும் தொழில் துறை தேவை அதிகரிப்பு ஆகியவையே இதற்கு முக்கிய காரணம்.
வெள்ளியை சுத்திகரிப்பதிலும், பயன்படுத்துவதிலும் முன்னணியில் உள்ள சீனாவின் கிடங்குகளில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளியின் இருப்பு குறைந்து உள்ளது. வெள்ளி ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடுகளையும் சீனா விதித்துள்ளது. இது, உலகளவில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது; அமெரிக்காவின் 'காமெக்ஸ்' கிடங்குகளில் வெறும் நான்கு நாட்களில், அதன் இருப்பில் இருந்த 60 சதவீத வெள்ளி, வினியோகத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது. காகித வடிவில் விற்கப்பட்ட வெள்ளியின் அளவை விட, இருப்பில் உள்ள வெள்ளியின் அளவு மிகவும் குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் வெள்ளி பாதுகாப்பானதா? வெள்ளி சார்ந்த இ.டி.எப்.,கள் மற்றும் மியூச்சுவல் பண்டுகளும் கடந்த ஓராண்டில் 188 சதவீதம் வரை லாபம் தந்துள்ளன. ஆனால், இந்தியாவில் வெள்ளியின் விலை தற்போது 1 கிலோ 3 லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது.
கமாடிட்டி வர்த்தகத்தை பொறுத்தவரை, எதிர்கால ஒப்பந்தங்களை சார்ந்தது. இது, வர்த்தகர்களுக்கானது மட்டுமே. டிஜிட்டல் சந்தையில் விற்கப்படும் வெள்ளியின் அளவுடன் ஒப்பிடும்போது, பாதுகாப்பு கிடங்குகளில் உள்ள வெள்ளியின் அளவு மிகக் குறைவாக உள்ளது.
முதலீட்டாளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்கள் டிஜிட்டல் வெள்ளியை, உலோகமாக மாற்றக் கோரினால், அதை வழங்க போதிய கையிருப்பு இருக்காது. இதனால், வெள்ளியைப் பெற கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
வெள்ளிக்கான தட்டுப்பாடு 2026ம் ஆண்டு இறுதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதால், வெள்ளி விலையில் அதிரடியான ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்று ஆய்வு நிறுவனங்கள் எச்சரிக்கின்றன.

