UPDATED : ஜன 23, 2026 10:37 AM
ADDED : ஜன 23, 2026 04:05 AM

சர்வதேச அளவில் நிகழும் பொருளாதார, அரசியல் பதற்றங்கள் காரணமாக, தங்கம், வெள்ளி விலை புதிய உச்சத்தை தொட்டு வந்தன. குறிப்பாக, ராக்கெட் வேகத்தில் வெள்ளி விலை உயர்ந்து வந்த நிலையில், நேற்று இந்திய இ.டி.எப்., சந்தையில் கடும் சரிவை சந்தித்தது.
வெள்ளி சார்ந்த இ.டி.எப்., பண்டுகள் 20 சதவீதம் வரை சரிந்து, முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு, சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு வலுவடைந்தது, கிரீன்லாந்து விவகாரங்கள் தொடர்பான பதற்றங்கள் சற்று தணிந்தது போன்றவற்றால், முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ததே வெள்ளி விலை சரிய காரணமாக கூறப்படுகிறது.
கமாடிட்டி நிபுணர் ஷ்யாம் சுந்தர் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளாக உற்பத்தி குறைந்து வரும் நிலையில், லண்டன் சந்தையில் வெள்ளி இருப்பு குறைந்து வருகிறது. இதனால் வெள்ளிக்கான தேவை அதிகரித்து, கடந்த 4 நாட்களில் அதன் விலை வேகமாக உயர்ந்தது. இந்த திடீர் உயர்வை பார்த்து சில முதலீட்டாளர்கள் பயந்து, உடனடியாக லாபம் எடுத்துள்ளனர்.
அதனால்தான் வெள்ளி விலை சற்றே குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி தற்காலிகமானது. பதற்றப்பட தேவையில்லை. இந்த சரிவை முதலீட்டுக்கான நல்ல வாய்ப்பாக பயன்படுத்தலாம். நீண்ட காலத்தில் வெள்ளி விலை உயர்வது உறுதி என அவர் தெரிவித்தார்.

