மியூச்சுவல் பண்டு வர்த்தகத்தில் நுவாமா நுழைய செபி அனுமதி
மியூச்சுவல் பண்டு வர்த்தகத்தில் நுவாமா நுழைய செபி அனுமதி
ADDED : அக் 02, 2025 11:43 PM

மி யூச்சுவல் பண்டு வர்த்தகத்தில் நுழைய, 'நுவாமா சொத்து மேலாண்மை' நிறுவனத்துக்கு சந்தை கட்டுப்பாட்டாளரான, 'செபி' அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து, நுவாமா சொத்து மேலாண்மை நிறுவனம் பங்குச் சந்தைக்கு அளித்த தகவலில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த அக்., 1ம் தேதி வெளியிட்ட உத்தரவில், நுவாமா மியூச்சுவல் பண்டு நிறுவனத்தை துவங்க, நுவாமா சொத்து மேலாண்மை நிறுவனத்துக்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வாயிலாக நுவாமா சொத்து மேலாண்மை நிறுவனம், சிறப்பு முதலீட்டு பண்டு உட்பட மியூச்சுவல் பண்டு திட்டங்களை துவங்கலாம்.
நுவாமா சொத்து மேலாண்மை நிறுவனம் மியூச்சுவல் பண்டு நிறுவனத்தை துவங்குவதற்கான தேவைகளை நிறைவு செய்த பின், அதை பதிவு செய்வதற்கான இறுதி ஒப்புதலை செபி வழங்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில், இந்திய பங்குச் சந்தை முன்பேர வணிகத்தில் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட ஜேன் ஸ்டீரிட் நிறுவனத்தின் இந்திய வர்த்தக கூட்டாளி நுவாமா என்பது குறிப்பிடத்தக்கது.
நம் நாட்டில் தற்போது, செபியிடம் பதிவு பெற்ற 54 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. நுவாமா இறுதி அனுமதி பெற்றால், எண்ணிக்கை 55 ஆக அதிகரிக்கும்.