பண்டமென்டல் அனாலிசிஸ்: மின்சார துறையின் மைய நரம்பு: பவர் கிரிட்
பண்டமென்டல் அனாலிசிஸ்: மின்சார துறையின் மைய நரம்பு: பவர் கிரிட்
UPDATED : டிச 21, 2025 02:00 AM
ADDED : டிச 21, 2025 01:59 AM

இந்திய மின்சார துறையின் மிக முக்கிய மைய நரம்பாக இருக்கும் நிறுவனம், 'பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா'. நாட்டின் வேகமான தொழில்துறை வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒருங்கிணைப்பு மற்றும் இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றும் மத்திய அரசின் திட்டம் அனைத்துக்கும், முக்கிய சக்தியாக இருந்து வருகிறது, மஹாரத்னா அந்தஸ்து பெற்ற இந்த பொதுத்துறை நிறுவனம்.
இந்தியா முழுதும் 2.90 லட்சம் மின் கோபுரங்களையும்; கிட்டத்தட்ட 1.80 லட்சம் சர்கியூட் கிலோ மீட்டர் துாரத்துக்கு மின்சார இணைப்பு கம்பிகளையும் இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது.
![]() |
இதன் வாயிலாக 5.71 லட்சம் மெகா வோல்ட் ஆம்பியர் திறன் கொண்ட மின்சார வினியோகத்தை கையாண்டு வருகிறது. மேலும், மாநிலங்களுக்கு இடையேயான மின் வினியோகத்தில் 85 சதவீத மின்சாரத்தை கையாளுகிறது.
இந்நிறுவனம், மின் உற்பத்தி நிறுவனங்களை போல, மின்சாரத்தை விற்பனை செய்யாது. அதற்குப் பதிலாக ஒரு இணைப்பு நிறுவனமாக செயல்படுகிறது. மின் உற்பத்தியாளர்கள் மின்சார நெட்வொர்க்கை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
அதனால் பவர் கிரிட் நிறுவனத்தின் வருமானம் நிலையாகவும், ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் இருக்கிறது.
மின்வினியோகம்
இந்தியா, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை அதிகரிக்க திட்டமிட்டு வருகிறது. தமிழகம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் உள்ளன.
இருப்பினும் பயனாளிகள் நுாற்றுக்கணக்கான கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளனர். மின்பகிர்மானம் இல்லாமல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 'கிரிட்'டு-க்கு செல்ல முடியாது. இதன் காரணமாக மின்பகிர்மானம் என்பது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாற்றத்துக்கு மிக முக்கியமாக இருந்து வருகிறது.
மேலும் நேபாளம், பூடான், வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 4.7 ஜிகா வாட் மின்சாரம் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
![]() |
தேசிய மின்சார திட்ட அறிக்கை தொகுதி இரண்டின் படி, 2027ம் ஆண்டு முதல் 2032ம் ஆண்டுக்குள் கூடுதலாக மின்பகிர்மான அமைப்பை ஏற்படுத்த 4.90 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஹெச்.வி.டி.சி., மின்பரிமாற்ற கம்பி என்பது, மின்சாரத்துக்கான தேசிய நெடுஞ்சாலை போன்றது. இந்த உயர் நேர் மின்னழுத்த கம்பிகள் அதிக அளவிலான மின்சாரத்தை நீண்ட துாரத்துக்கு எடுத்துச் செல்லக்கூடியவை. 2027 -- 32 நிதியாண்டுக்குள், முந்தைய காலத்தை விட 93 சதவீதம் ஹெச்.வி.டி.சி.,யை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பவர் கிரிட் நிறுவனம் ஏற்கெனவே பல முக்கிய ஹெச்.வி.டி.சி., திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், சுமார் 35,000 கோடி ரூபாய் செலவில் உள்ள சில திட்டங்களும் அடங்கும். அடுத்த சில ஆண்டுகளில் மொத்த ஹெச்.வி.டி.சி., வாய்ப்புகள் 90,000 கோடி ரூபாயை தாண்டக்கூடும்.
புதிய வாய்ப்பு
1 தமிழகம், குஜராத்தின் கடல் பகுதியில், 30 ஜிகா வாட் அளவுக்கு காற்றாலை அமைக்க மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. முதற்கட்டமாக குஜராத்திலும், தமிழகத்திலும் 5 ஜிகாவாட் அளவுக்கு காற்றாலைகள் அமைக்க முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
2 தற்போது அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் மின்சார தேவைகள் பெரும்பாலும் டீசல் ஜெனரேட்டர்கள் வாயிலாக பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. கடலுக்கு அடியில் ஹெச்.வி.டி.சி., கேபிள்கள் வாயிலாக இந்த தீவுகளை இணைக்க,15,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
3 புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை பயன்படுத்தி கிரீன் ஹைட்ரஜன் மற்றும் கிரீன் அமோனியா உருவாக்கும் தொழில் நிறுவனங்களுக்கு, தேசிய மின்கட்டமைப்பில் இருந்து 125 ஜிகா வாட் அளவுக்கு மின்சார தேவை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய திட்டங்களால் பயனடையும் நிறுவனமாக பவர் கிரிட் உள்ளது.
முக்கிய ரிஸ்க்
நிலம் பயன்பாட்டு உரிமை தொடர்பான சிக்கல்கள், சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் பல மாநிலங்களை உள்ளடக்கிய தளவாட சவால்கள் ஆகியவை திட்டங்களை தாமதப்படுத்தக்கூடும்.
மின்பகிர்மானம் மற்றும் வினியோக திட்டங்களை தனியார்மயமாக்கும் செயல்முறை, மெல்ல நடைமுறைக்கு வரும் வாய்ப்பு உள்ளது.
கட்டண அடிப்படையிலான போட்டி ஏலத் திட்டங்களில், தனியார் துறை தீவிரமாக ஏலத்தில் பங்கெடுப்பதால், வருங்கால திட்டங்களில் வருவாய் குறைவு ஏற்படும்.
இன்றைக்கு பவர் கிரிட் நிறுவனத்தின் ஈக்விட்டி பெரும் பகுதி ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பில் உள்ளது. இதில் வரி கழித்த பிறகு, 15.50 சதவீதம் என்ற நிலையான ஆர்.ஓ.இ., வழங்கப்படுகிறது. ஆனால், கட்டண அடிப்படையிலான ஏல திட்டங்கள் அதிகரிக்கும்போது, இந்த ஒழுங்குபடுத்தப்பட்ட பங்கின் விகிதம் குறையும் வாய்ப்பு உள்ளது.
பவர் கிரிட் நிறுவனத்தின் தற்போதைய 'பிரைஸ் டு புக் வேல்யூ' 2.50 என்ற அளவில் இருக்கிறது. இது அதன் வரலாற்றுச் சராசரியைவிட அதிகமானது. இ.பி.ஐ.டி.டி.ஏ., மார்ஜின்கள் தொடர்ந்து 85 சதவீதத்துக்கு மேல் காணப்படுகின்றன.
இந்தியாவின் மிகத் துணிச்சலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளையும், மின்பரிமாற்றத் துறையின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டால், பவர் கிரிட் குறைந்த அளவிலான ஏற்ற இறக்கத்தையும், நிச்சயத்தன்மை கொண்ட நீண்டகால வளர்ச்சி நிறுவனமாகவும் இருக்கும்.
இந்நிறுவனத்தின் நிலைத்தன்மை, முன்கூட்டியே கணிக்கக்கூடிய வருமானம் மற்றும் இந்தியாவின் ஆற்றல் மாற்றப் பயணம் ஆகியவற்றால், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு, இன்றைய நிலையில் பவர் கிரிட், மிக வலுவான உட்கட்டமைப்பு முதலீட்டு வாய்ப்புகளில் ஒன்றாக விளங்குகிறது.
பொறுப்பு அறிக்கை
இந்த அறிக்கை, முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்



