உரிமை கோரப்படாத பண்டு முதலீடுகள் கடந்த நிதியாண்டில் 21 % அதிகரிப்பு
உரிமை கோரப்படாத பண்டு முதலீடுகள் கடந்த நிதியாண்டில் 21 % அதிகரிப்பு
ADDED : செப் 28, 2025 02:17 AM

புதுடில்லி:உரிமை கோரப்படாமல் இருக்கும் மியூச்சுவல் பண்டு முதலீடுகள், கடந்த நிதியாண்டில் 21 சதவீதம் அதிகரித்துள்ளதாக, 'செபி' தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, சொத்து மேலாண்மை நிறுவனங்களிடம் உள்ள ஈவுத்தொகை மற்றும் முதிர்ச்சி அடைந்த முதலீடுகளின் மதிப்பு 3,452 கோடி ரூபாயாக அதிகரித்து உ ள்ளது.
முதலீட்டாளர்களின் தொடர்பு விவரங்கள் புதுப்பிக்கப்படாமல் போவது தான் இதற்கு முக்கிய காரணம். முதலீட்டாளர்கள், தங்கள் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி அல்லது குடியிருப்பு முகவரியை மாற்றியிருந்தால், அதை சொத்து மேலாண்மை நிறுவனங்களிடம் புதுப்பிக்கத் தவறிவிடுகின்றனர்.
சில சமயங்களில், முதலீட்டாளரின் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மூடப்பட்டாலோ அல்லது மாற்றப்பட்டாலோ, கிரெடிட் செய்யப்படும் முதிர்ச்சி அடைந்த முதலீடு மற்றும் ஈவுத்தொகை திரும்பி விடுகின்றன.
உரிமைகோராத கணக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, 'மித்ரா' எனும் 'மியூச்சுவல் பண்டு இன்வெஸ்ட்மென்ட் ட்ரேசிங் அண்டு ரிட்ரீவல் அசிஸ்டென்ட்' என்ற தேடுதளத்தை செபி அறிமுகப்படுத்தியுள்ளது.
இது, செயலற்ற மற்றும் உரிமைகோராத மியூச்சுவல் பண்டு கணக்குகளின் விவரங்களைக் கொண்ட, தேடக்கூடிய தரவு தளத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது.