/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (22)
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (22)
ADDED : அக் 22, 2024 08:47 AM

குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.
பதிவெண் ரத்தான வணிகர் செய்த தவறுக்கு சரியாக வரி செலுத்துவோருக்கு தண்டனை?
ஜி.எஸ்.டி., பதிவெண் ரத்தான வர்த்தகரிடம் இருந்து பொருள் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், உரிய வரி செலுத்தியிருந்தாலும், விற்றவரிடம் வசூலிக்காமல், அப்பொருளை வாங்கியவரிடம் வரி, அபராதம், அதற்கான வட்டி என, வசூலிப்பதால் வணிகர்கள் தங்கள் மூலதனத்தை இழக்க வேண்டியுள்ளது.
ஜி.எஸ்.டி., அறிமுகமான காலகட்டத்தில் வணிகர்களிடையே டிஜிட்டல் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு இல்லை. ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொள்முதல் மற்றும் விற்பனை அடங்கிய நமூனாவை மாதந்தோறும் தாக்கல் செய்ய வேண்டும். தொடர்ந்து 3 மாதங்கள் தாக்கல் செய்ய தவறினால் ஜி.எஸ்.டி. பதிவெண் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இதை இ மெயில் மற்றும் அலைபேசி குறுஞ்செய்தியாக அனுப்பி இருந்தாலும், வணிகர்களிடம் போதிய டிஜிட்டல் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு 2017 காலகட்டத்தில் இல்லை. எனவே, நிறைய பேரின் பதிவெண் ரத்து செய்யப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில் தற்காலிகமாகவோ, முழுமையாகவோ பதிவெண் ரத்து செய்யப்பட்டிருந்த வணிகர்களிடம், நிறைய பேர் கொள்முதல் செய்திருந்தனர். அவர்கள் பொருளுக்கான தொகையுடன் ஜி.எஸ்.டி.,யும் சேர்த்தே செலுத்தியுள்ளனர்.
அவ்வாறு, வாங்கிய பொருளை விற்கும்போது, அதற்கான வரியை மட்டும் தாக்கல் செய்தால் வணிகவரித்துறை ஏற்றுக் கொள்ளவில்லை.
பதிவெண் ரத்தான வணிகரிடம் ஏற்கனவே செலுத்திய வரி, அதற்கான அபராதம், 2017 - 2020 வரையான ஆண்டுகளை கணக்கிட்டு அபராதம், வட்டி செலுத்த நிர்ப்பந்திக்கின்றனர்.
பதிவெண் ரத்தானவர்கள் செலுத்தாத வரிக்கு, முறையாக வரி செலுத்தும் வர்த்தகர்களுக்கு ஏன் தண்டனை? வட்டியுடன் விதிக்கப்படும் அபராதம், ஒட்டுமொத்த மூலதனத்தையும் பாதிக்கிறது.
மீண்டும் தொழில் செய்ய முடியாமல் முடங்கி விடுகின்றனர். வங்கிக் கணக்கையும் முடக்குவதால் புதிய முதலீடு செய்ய முடிவதில்லை. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பதிவெண் ரத்தான வணிகர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரி, அபராதம் வசூலிக்க வேண்டும்.
முகமது அஸ்கர், தலைவர், தமிழ்நாடு ஜி.எஸ்.டி. வரி ஆலோசகர்கள் சங்கம், திருச்சி
முகவரி:
ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!
தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ்,
சுந்தராபுரம்,
கோவை - 641 024.
Email: dmrgstviews@dinamalar.in