UPDATED : டிச 15, 2025 02:18 AM
ADDED : டிச 15, 2025 02:17 AM

நம் நாடு, எப்போதும் சேமிப்பாளர்களின் தொட்டிலாக கருதப்படுகிறது. வழக்கமான வைப்பு நிதி திட்டங்கள் இன்னும் மக்கள் மனத்தில் கொலுவீற்றிருக்கின்றன என்றாலும், மியூச்சுவல் பண்டு 'எஸ்.ஐ.பி.,' எனப்படும் 'முறையான முதலீட்டுத் திட்டம்' படிப்படியாக கவனம் பெற்று வருகிறது.
ஒரு புள்ளிவிபரத்தின் படி, இந்திய குடிமக்களில் கிட்டத்தட்ட 89 சதவீதம் பேருக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது. ஆனால், அது ஈட்டித்தரும் வட்டியோ மிக மிகக் குறைவு. இந்நிலையில் தான், கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தம் கவனத்தை மியூச்சுவல் பண்டு பக்கம் திருப்பி வருகின்றனர்.
ஆர்.டி., போடுவது போல, அவர்கள் பல்வேறு பண்டு திட்டங்களில், எஸ்.ஐ.பி., போட்டு வருகின்றனர். பங்குச் சந்தை பற்றியும், மியூச்சுவல் பண்டு பற்றியும் மக்களிடம் பெருகி வரும் அறிமுகம் காரணமாக, பண்டு திட்டங்களில் பணம் போடுவோரது எண்ணிக்கை மாதாமாதம் உயர்ந்து வருகிறது.
இப்போது, எஸ்.ஐ.பி. வழிமுறையைப் பின்பற்றி, ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 20,000 - 22,000 கோடி ரூபாய் வரை மியூச்சுவல் பண்டு திட்டங்களுக்கு வந்து சேர்கிறது. கடந்த நவம்பர் மாதம் மட்டும், 29,445 கோடி ரூபாய் வந்திருக்கிறது.
எஸ்.ஐ.பி.,க்கு ஏன் இவ்வளவு மவுசு? காரணம் இருக்கிறது. வழக்கமான வைப்பு நிதித் திட்டங்களை விட, எஸ்.ஐ.பி., வாயிலாகச் செய்யப்படும் முதலீடு, நான்கு முதல் ஐந்து சதவீதம் கூடுதல் வருவாய் ஈட்டித் தருகிறது. அதே நேரம் இதில் அபாயம் இல்லாமல் இல்லை. வைப்பு நிதித் திட்டங்களில் வட்டி உறுதி, முதலீடும் உறுதி.
ஆனால், எஸ்.ஐ.பி., யிலோ, வருவாய், சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது. இவ்வளவு ரிட்டர்ன் கிடைக்கும் என்பதையும் உறுதியாகச் சொல்ல இயலாது.
எஸ்.ஐ.பி.,யின் வாயிலாக, உண்மையிலேயே செல்வம் சேர்க்க வேண்டும் என்று கருதினால், நீங்கள் குறைந்தபட்சம் 60 மாதங்கள், அதாவது ஐந்து ஆண்டுகளேனும் முதலீடு செய்து வர வேண்டும்.
சந்தையில் எத்தகைய ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டாலும், நீண்டகாலம் முதலீடு செய்யும் போது, அவையெல்லாம் சமமாகி, நல்ல வருவாய் ஈட்டித் தரும். எதற்கு இப்படி முட்டி மோதிக்கொண்டு சேமிக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். பல மிடில் கிளாஸ் குடும்பங்களில் சேமிப்பது மிக மிக கஷ்டமாக இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் செலவுகள் அதிகரிக்கின்றன. பணவீக்கத்தினால், பொருட்களின் விலைகள் எகிறுகின்றன. ஆனால், வருமானம் மட்டும் அதிகரிப்பதில்லை. சேற்றில் சிக்கிக்கொண்ட கன்றுக்குட்டி போல் அப்படியே இருக்கிறது. அதனால் எதையாவது செய்து, எதிர்காலத் தேவைகளுக்காக, சிறிதளவாவது சேமிக்க முடியுமா என்று பார்க்கின்றனர்.
நம் நாட்டில், தலைமுறை தலைமுறையாக, தங்கத்தில் சேமிப்புகளை போட்டுவைப்பது ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், தற்காலத்தில் சேமிப்பும், முதலீடும், பரவலாக, இன்னும் கூடுதல் லாபம் ஈட்டுவ தாக இருப்பது அவசியம்.
எப்படி சேமிக்கலாம்?
ஒவ்வொரு குடும்பமும் தமது மொத்த வருவாயில் 10 சதவீதத்தையாவது சேமிக்க வேண்டும். அதை கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் முதலீடும் செய்ய வேண்டும்.
உதாரணமாக, வங்கிகளின் வைப்பு நிதித் திட்டங்கள், தொடர் வைப்புநிதித் திட்டங்களில் ஒரு பகுதியை முதலீடு செய்யுங்கள். இந்த முதலீடு பாதுகாப்பாக இருக்கும். குறிப்பிட்ட உறுதியான வருவாயை ஈட்டித் தரும். நீண்டகால சொத்துகளை உருவாக்குவதற்கு மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி.,க்களில் முதலீடு செய்து வாருங்கள்.
அதாவது, இந்தப் பணம் உடனடியாக வேறு எதற்கும் தேவைப்படாது, குறைந்தபட்சம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொட மாட்டேன் என்று கருதும் தொகையை இத்தகைய எஸ்.ஐ.பி.,க்களில் முதலீடு செய்யுங்கள்.
வைப்பு நிதித் திட்டங்களில் இருந்து கிடைக்கும் வட்டி, பணவீக்கத்தைச் சமாளிக்கும் அளவுக்கே இருக்கும். ஆனால், உண்மையான சொத்துகளை உருவாக்க வேண்டும் என்றால், உங்கள் முதலீடு பணவீக்கத்தையும் தாண்டி வருவாய் ஈட்டு வதா க இருக்க வேண்டும்.
நம் நாட்டில் பணவீக்கம் தோராயமாக 6 சதவீத அளவுக்கு இருக்கும் நிலையில், நீங்கள், வரிக்கு பிந்தைய வருவாய் 7.5 சதவீதம் அளவுக்கு கிடைக்கும் வகையில் முதலீடுகளை செய்வதற்குத் திட்டமிட வேண்டும்.
வைப்பு நிதியிலும், எஸ்.ஐ.பி.,யிலும் எவ்வளவு முதலீடு செய்தால் சரியாக இருக்கும் என்ற கேள்வி எழலாம். அது உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை இலக்குகளைப் பொறுத்தும், உங்களுடைய 'ரிஸ்க்' எடுக்கும் தகுதியையும் பொறுத்தும் மாறுபடும். ஆனால் ஒரு பொதுவான விதி இருக்கிறது.
குறுகிய காலத் தேவைகளுக்கு வைப்பு நிதித் திட்டங்களையும், நீண்ட கால இலக்குகளை அடைய மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி.,க் களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சேமிப்பு என்பது அடிப்படையில் ஓர் ஒழுங்கு; கட்டுப்பாடு. அதை விடாமல் தொடர்ந்து செய்து வந்தால், பழக்கமாகிவிடும். வரவுக்குள் செலவு செய்து, சேமிக்கப்படும் மிச்சத்தை புத்திசாலித்தனமாக முதலீடும் செய்ய வேண்டும். அப்போது தான் உங்கள் எதிர்கால இலக்குகளை அடைய முடி யும். நிம்மதியுடன் வாழவும் முடியும்.

