UPDATED : டிச 21, 2025 01:55 AM
ADDED : டிச 21, 2025 01:51 AM

இந்திய பங்குச் சந்தைகள், எப்போதும் இல்லாத உயரங்களை தொடர்ந்து தொட்டு வருகின்றன. சந்தை உயர்ந்தாலும், பல முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்கு அல்லது மியூச்சுவல் பண்டு போர்ட்போலியோவின் மதிப்பு உயரவே இல்லை என்று கவலைப்படுகின்றனர்.
இது குறித்து, 'ஐகுளோபல் ஆல்டர்நேட்' நிறுவனர் சி.கே.சிவராம் தெரிவித்ததாவது:
இது எப்போதும் ஏற்படும் ஒரு நிலை தான். பங்குச் சந்தை இண்டெக்ஸ் மட்டத்தில் இருந்து இதை புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, 'நிப்டி 50' குறியீடு உயர வேண்டும் என்றால், அதிலுள்ள 50 பங்குகளும் உயர வேண்டும் என்ற அவசியமில்லை. அதில் உள்ள ஆறு முதல் எட்டு லார்ஜ் கேப் பங்குகள், 15 சதவீதம் அளவுக்கு உயர்ந்தாலே போதும்; இண்டெக்ஸ் உயர்ந்துவிடும்.
![]() |
மியூச்சுவல் பண்டுகளோ, சாதாரண முதலீட்டாளர்களோ, 50 பங்குகளிலுமே முதலீடு செய்திருக்க வாய்ப்பில்லை. அதனால், அவர்கள் வைத்திருக்கும் பங்குகளுக்கு ஏற்ப, 7 முதல் 9 சதவீத வளர்ச்சி தான் கிடைக்கும்.
மியூச்சுவல் பண்டு மேலாளர்கள் பல்வேறு துறைகளில், ஆய்வுபூர்வமாக, முறையாக முதலீடு செய்து வருவர். அவர்கள் கோணமே முற்றிலும் வேறாக இருக்கும்.
அதே நேரம் ஒரு முதலீட்டாளர், தன் மொத்த முதலீட்டில் 60 சதவீதத்தை பங்குச் சந்தையிலும், 40 சதவீதத்தை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். பங்குச் சந்தையில் 15 சதவீத அளவுக்கு வளர்ச்சி ஏற்படுமானால், இவர்களுடைய தனிப்பட்ட போர்ட்போலியோவில் 8 முதல் 9 சதவீத வளர்ச்சி தான் ஏற்பட்டிருக்கும்.
இன்னொரு முக்கியமான விஷயம், சந்தை உச்சத்தில் இருக்கும் போது ஒருவர் முதலீடு செய்திருந்தால், அடுத்து வரும் வளர்ச்சி அதே அளவுக்கு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. சரிந்தும் போகலாம் அல்லது வளர்ச்சி வருவதற்கு மேலும் பல மாதங்கள் ஆகலாம். அதனாலும் போர்ட்போலியோ பச்சை நிறத்தில் ஒளிராது.
இதேபோல் பங்குகள் மற்றும் பண்டுகளின் தன்மையும். உதாரணமாக, லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப், ப்ளக்ஸி கேப், மல்டி அசெட் பண்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக வளர்ச்சியை காண்பிக்கும். அதை நேரடியாக, இண்டெக்ஸோடு ஒப்பிடுவது, ஆப்பிளையும் - ஆரஞ்சையும் ஒப்பிடுவது போன்றது.
'சந்தை உயர்ந்திருக்கிறது, ஆனால், நம் முதலீடு மட்டும் உயரவில்லை' என்று, சிலர் எஸ்.ஐ.பி.,யை நிறுத்திவிடுவர், வேறு பண்டுத் திட்டத்துக்கு மாறுவர் அல்லது யார் யாரோ தரும் டிப்ஸ்களை நம்பி தவறான முதலீடுகளை செய்வர். இதையெல்லாம் செய்யக்கூடாது.
ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பங்குச் சந்தை இண்டெக்ஸும், ஒவ்வொருவருடைய தனிப்பட்ட போர்ட்போலியோவின் வளர்ச்சியும், வித்தியாசமாகத்தான் இருக்கும். பொறுமையாக, இலக்குகளை மட்டும் மனதில் நிறுத்தி, முதலீடு செய்து வர வேண்டும். ஒப்பீடு செய்வது உடம்புக்கு ஆகாது.
இவ்வாறு தெரிவித்தார்.


