கரடி தாக்குதலில் கேரள இளைஞர் பலி; கனடாவில் அதிர்ச்சி சம்பவம்
கரடி தாக்குதலில் கேரள இளைஞர் பலி; கனடாவில் அதிர்ச்சி சம்பவம்
ADDED : மே 29, 2026 02:38 PM

ஒட்டாவா: கனடாவில் கரடி தாக்குதலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஹிருஷிகேஷ் கொலோத் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் சஸ்காட்செவனில் சுரங்க ஆய்வுப் பணியில் கேரளாவைச் சேர்ந்த ரிஷிகேஷ் கொலோத் என்ற 27 வயது இளைஞர் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கரடித் தாக்குதலுக்கு பலியானார். அந்த கரடி பின்னர் அங்கிருந்த பணியாளர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டது.
இவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பென்டிக்டன் பகுதியில் வசித்து வந்தார்.அத்துடன் தீவிரமாக கலப்பு தற்காப்புக் கலை பயிற்சியும் மேற்கொண்டு வந்தார். அடுத்த மாதம் வான்கூவரில் பாக்ஸிங் பயிற்சியாளராகப் பணியைத் தொடங்கவும் திட்டமிட்டிருந்தார்.
அல்டிமேட் பைட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க கனடாவுக்குச் சென்றிருந்தார். கனடாவுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் சென்ற ரிஷிகேஷ் கொலோத் தனது மூத்த சகோதரர் அர்ஜுன் கொலோத்துடன் வசித்து வந்தார். இந்த சம்பவம் ரிஷிகேஷ் கொலோத் அண்ணன் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தம்பி உயிரிழப்பு குறித்து அண்ணன் அர்ஜுன் கொலோத் கூறியதாவது: தனது சகோதரர் ஒரு தெளிவான லட்சியத்துடன் கனடாவுக்கு வந்தான். அல்டிமேட் பைட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பது தான் அவனது கனவு. அதனால்தான் அவன் இங்கு வந்தான்.
தன் குடும்பத்தின் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர். அவர் எதற்கும் பயப்படுவதில்லை. தன்னை விட எடை அதிகமான எதிராளியா? அது ஒரு பொருட்டல்ல. ஜெயித்தாலும் தோற்றாலும், அவன் சண்டையிட மட்டுமே விரும்பினார். இவ்வாறு அண்ணன் அர்ஜுன் கண்ணீருடன் தெரிவித்தார்.
