அரசுக்கு எதிரான தீர்மானம் மீது ஓட்டெடுப்பு? எதிர்க்கட்சிகள் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு
அரசுக்கு எதிரான தீர்மானம் மீது ஓட்டெடுப்பு? எதிர்க்கட்சிகள் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு
ADDED : ஆக 02, 2011 11:44 PM

புதுடில்லி: அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிராக லோக்சபாவில் இன்று விவாதம் நடத்த எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விவாதம் முடிந்ததும் இது தொடர்பாக ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.
பார்லிமென்டின் மழைக்காலக்கூட்டத்தொடர் நேற்று முன்தினம் கூடியது. நிலம் கையகப்படுத்தும் சட்டம் தொடர்பாக லோக்சபாவில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் சபை ஒத்தி வைக்கப்பட்டது. ராஜ்ய சபாவில் விலைவாசி உயர்வு குறித்து நேற்று விவாதிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலைஉயர்வு குறித்து விவாதிக்க சிறப்பு தீர்மானத்தை கொண்டுவரும் படி எதிர்கட்சிகள் கோரியுள்ளன. இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. விலைவாசி உயர்வு குறித்த விவாதம் முடிந்ததும் ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது. அடுத்த வாரம் இந்த விவாதம் ராஜ்யசபாவில் நடைபெற உள்ளது. லோக்சபாவில் விலைவாசி உயர்வு குறித்த விவாதம் இன்று நடைபெறுவதால் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், விலைவாசியை கட்டுப்படுத்த தவறிய அரசுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிய உள்ளார். இந்த தீர்மானம் மீதான விவாதத்தை பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் யஷ்வந்த்சின்கா துவக்கி வைக்கிறார். இந்த விவாதம் 184 வது பிரிவின் படி ஏற்கப்படும்.இடதுசாரி கட்சிகள் அனைத்தும் இந்த விவாதத்தில் பங்கேற்கின்றன. அரசை ஆதரிக்கும் கட்சிகள் எவை, இடதுசாரிகள் நிலை என்ன என்ற பல விஷயங்களுக்கு ஓட்டெடுப்பு பதிலாகக் கூட அமையலாம்.
பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் குறிப்பிடுகையில், 'எதிர்கட்சிகளோடு ஏற்பட்ட இணக்கத்தின் காரணமாக இந்த விவாதத்துக்கு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பதில் அளிக்க உள்ளார். இந்த விவாதத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர்' என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலீட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, அ.தி.மு.க.,உறுப்பினர் தம்பிதுரை மற்றும் பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேச உறுப்பினர்கள் நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது சீதாராம் யெச்சூரி கூறியதாவது: விலைவாசி உயர்வை தடுக்க கடந்த ஆண்டு பார்லிமென்டில் விவாதிக்கப்பட்டது. விலைவாசியை குறைக்க அரசு உறுதியளித்தது. ஆனால், அரசு சொன்னப்படி விலைவாசியை குறைக்கவில்லை. அதற்கு பதிலாக மூன்று முறை பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. விலை உயர்வை எப்படி குறைக்கபோகிறது? வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை எப்படி மீட்க போகிறது என்பதையெல்லாம் பார்லிமென்ட் வாயிலாக மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும். விலை உயர்வு குறித்த விவாதத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகளும் பங்கேற்கும் என எதிர்ப்பார்க்கிறோம். இந்த விஷயத்தில் பாரதிய ஜனதாவுடன் நாங்கள் ஒத்துபோகவில்லை. ஏனென்றால் கர்நாடகாவில் எடியூரப்பா அரசில் நடந்த ஊழல்களை எல்லாம் சமீபத்தில் தெரிந்துள்ளது. அதுமட்டுமல்லாது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் சம்பந்தம் உள்ளது. இவ்வாறு யெச்சூரி கூறினார்.
தெலுங்கு தேச உறுப்பினர் நாகேஸ்வர் ராவ் குறிப்பிடுகையில், 'நூறு நாட்களில் விலை உயர்வை குறைப்பதாக மத்திய அரசு உறுதியளித்தது. விலை குறையும் என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கூறினார். ஆனால், அவர்கள் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை. மாறாக கடந்த ஏழாண்டுகளில் பெட்ரோலிய பொருட்களின் விலை 21 முறை உயர்த்தப்பட்டுள்ளது' என்றார். அ.தி.மு.க.,உறுப்பினர் தம்பி துரை குறிப்பிடுகையில், 'விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தான் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்காக முதல்வர் ஜெயலலிதா இலவச அரிசி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளார்' என்றார்.
பாரதிய ஜனதா கட்சி தலைவர் வெங்கய்யா நாயுடு குறிப்பிடுகையில், 'விலைவாசி உயர்வு குறித்து கடந்த ஏழாண்டு காலத்தில் 10 முறை விவாதித்து விட்டோம். விலை உயர்வால் மக்கள் கதறுகிறார்கள், ஆனால், அரசோ தூங்குகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பார்லிமென்ட்டில் தெரிவிக்க வேண்டும். பணவீக்கத்தை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை, என்பதையும் அரசு விளக்க வேண்டும். வலுவான லோக்பால் மசோதாவை தான் நாங்கள் ஆதரிக்கிறோம். பிரதமரை விசாரிக்கும் அதிகாரம் லோக்பாலுக்கு இருக்க வேண்டும், என்பது தான் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு' என்றார். ராஜ்யசபாவில் 167 வது பிரிவின் படி விலைவாசி உயர்வு குறித்து அடுத்த வாரம் விவாதம் நடக்கும் என்று கூறப்பட்டது.