ஒய்.எஸ்.ஆர்., யாருக்கு சொந்தம்: ஜெகன் - காங்., இடையே கடும் போட்டி
ஒய்.எஸ்.ஆர்., யாருக்கு சொந்தம்: ஜெகன் - காங்., இடையே கடும் போட்டி
ADDED : செப் 04, 2011 10:53 PM

ஐதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், ஆந்திர அரசியல், இன்னும் அவரைச் சுற்றியே நடக்கிறது.
ராஜசேகர ரெட்டியின் புகழை சொந்தம் கொண்டாடுவதில், அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே, கடும் போட்டி நிலவுகிறது.
ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கியவர், முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி. ஹெலிகாப்டர் விபத்தில், இவர் பலியானார். இவருக்கு பின், இவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் முக்கியத்துவம் பெற விரும்பினார். ஆனால், காங்., மேலிடம் இவரை கண்டுகொள்ளவில்லை. இதனால், காங்கிரசில் இருந்து வெளியேறி, தன் தந்தை பெயரில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் என்ற புதிய அரசியல் கட்சியை துவக்கினார். இதற்கிடையே, ஜெகன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாகக் கூறி, அவருக்கு எதிராக, சி.பி.ஐ., விசாரணை நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் உள்ள ராஜசேகர ரெட்டி விசுவாசிகளை தூண்டிவிட்டு, தன் பங்கிற்கு அரசியல் ஆதாயம் தேடி வருகிறார். ராஜசேகர ரெட்டியின் புகழ் யாருக்கு சொந்தம் என்பதில், ஜெகன்மோகன் ரெட்டிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே, கடும் போட்டி நடக்கிறது. ராஜசேகர ரெட்டி மறைந்து விட்டாலும், இன்னும் அவரைச் சுற்றியே, ஆந்திர அரசியல் நடக்கிறது.
ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது: என் தந்தை பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில், காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு காரணம் இது தான். ராஜசேகர ரெட்டியின் புகைப்படத்தை போஸ்டர்களில் போடாமல், காங்கிரஸ் கட்சியால், தேர்தலை சந்திக்க முடியுமா? இதை ஒரு சவாலாகவே கேட்கிறேன். என் தந்தையால் தான், காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து இரண்டு முறை, ஆந்திராவில் ஆட்சியை பிடித்தது. ஆனால், தற்போது இதையெல்லாம் மறந்து விட்டு, என் மீதும், என் தந்தை மீதும், காங்கிரஸ் கட்சியினர் அவதூறு பிரசாரம் செய்கின்றனர். இவ்வாறு ஜெகன் மோகன் கூறியுள்ளார்.
ஆந்திர முதல்வரும், காங்., மூத்த தலைவருமான கிரண் குமார் ரெட்டி கூறுகையில்,'தேர்தல் வெற்றிக்கு, ராஜசேகர ரெட்டியும் ஒரு காரணம் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, சோனியா தான், முக்கிய காரணம். ராஜசேகர ரெட்டி மீது, எப்போதுமே எங்களுக்கு மரியாதை உண்டு. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக, ஜெகன் மீது தான், புகார் கூறியுள்ளோம். ராஜசேகர ரெட்டி மீது, புகார் எதுவும் கூறவில்லை. இவ்வாறு கிரண் குமார் ரெட்டி கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -