நியாயமான இழப்பீடு கிடைக்க வகை செய்யும் நிலம் கையகப்படுத்துதல் மசோதா அறிமுகம்
நியாயமான இழப்பீடு கிடைக்க வகை செய்யும் நிலம் கையகப்படுத்துதல் மசோதா அறிமுகம்
ADDED : செப் 08, 2011 12:17 AM

புதுடில்லி: மேம்பாட்டு நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் போது, அதனால், பாதிக்கப்படுவோருக்கு, நியாயமான இழப்பீடு கிடைக்க வகை செய்யும், மத்திய அரசின் புதிய நிலம் கையகப்படுத்துதல் மசோதா, லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் மூலம், நூற்றாண்டு பழமையான சட்டம் முடிவுக்கு வருகிறது.
நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை லோக்சபாவில், மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிமுகப்படுத்தி பேசுகையில், 'நூறாண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்ட திட்டங்கள், இந்த மசோதாவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான நடைமுறைகள், ஒளிவு மறைவற்றதாக இருக்க, இந்த மசோதா வழிவகை செய்கிறது' என்றார். கிராமப்புறங்களில் நிலத்தை கையகப்படுத்தும் போது, அதனால் பாதிக்கப்படும் நில உரிமையாளருக்கு, சந்தை விலையை விட ஆறு மடங்கு கூடுதல் தொகையும், நகர்ப்புறங்களில் நிலம் கையகப்படுத்தும் போது சந்தை விலையை விட இரு மடங்கு கூடுதல் தொகையும் நில உரிமையாளருக்கு அளிக்க, இந்த மசோதா வழிவகை செய்கிறது. சாலை அமைக்கவோ, தொழிற்சாலை அமைக்கவோ நிலம் கையகப்படுத்த திட்டமிட்டால், அந்த பகுதியைச் சேர்ந்த 80 சதவீத மக்களின் ஒப்புதல் பெற்ற பின்பே நிலத்தை கையகப்படுத்த வேண்டும். பலதரப்பட்ட பயிர்கள் விளையும் நிலங்களை முடிந்த வரை கையகப்படுத்தக் கூடாது. வேறு வழியில்லாத பட்சத்தில், பொது நோக்கத்துக்காக கடைசி கட்டமாக இது போன்ற விளைநிலங்களை கையகப்படுத்தலாம் என்றும், மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில், 10 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ள நிலங்களை, சம்பந்தப்பட்ட உரிமையாளரிடமிருந்து அரசு கையகப்படுத்தி வைத்துக் கொள்ளலாம் எனவும், இந்த மசோதா பரிந்துரைக்கிறது. இந்த புதிய மசோதாவால் சுரங்கம், உலோகம் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் பாதிக்கப்படும் என, இந்நிறுவன அதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும், வேகமாக நிலத்தை கையகப்படுத்த இந்த மசோதா வழி செய்யும் என, இவர்கள் திருப்தியடைந்துள்ளனர்.