ஐந்து சிறிய கிரகங்கள் கண்டுபிடிப்பு: இந்திய மாணவர்கள் சாதனை
ஐந்து சிறிய கிரகங்கள் கண்டுபிடிப்பு: இந்திய மாணவர்கள் சாதனை
ADDED : செப் 04, 2011 10:56 PM

புதுடில்லி: சூரிய மண்டலத்தில் உள்ள ஐந்து சிறிய கிரகங்களை, இந்திய மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து, ஸ்பேஸ் அமைப்பின் இயக்குனர் தேவ்கன் கூறியதாவது: சர்வதேச வானியல் கூட்டு ஆய்வுத் திட்டம் மற்றும் சர்வதேச ஆராய்ச்சி கல்வித் திட்டத்தின் கீழ் நடந்த பயிற்சியில், 60 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர்.
தொலைநோக்கியைப் பயன்படுத்தி, வானில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்யும் பயிற்சி, இவர்களுக்கு அளிக்கப்பட்டது. இதில், 10 மாணவர்கள் சேர்ந்து, ஐந்து கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளனர். டில்லி பாலபாரதி பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் வைபவ் சாப்ரா, ஷரன்ஜித் சிங் ஆகியோர், கிரகங்களுக்கு பெயர் சூட்டும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். டில்லியின் ராஜிந்தர் நகரில் உள்ள பாலபாரதி பள்ளி மாணவியர் பிரக்யா மற்றும் அபராஜிதா ஆகியோர், மிகவும் அபூர்வமாகத் தென்படக் கூடிய, 'ட்ரோஜான்' எனப்படும் கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகங்கள், வியாழன் கிரகத்திற்கு அருகே தென்படக்கூடியவை. குர்கானில் உள்ள ரையான் பள்ளியைச் சேர்ந்த சிந்தன், உமாங் பாட்டியா, கெமிக்கல் இன்ஜினியரிங் மையத்தைச் சேர்ந்த ட்ரூஷித் மக்வானா, நவல் கொர்ல்கர்,நேவி சில்ரன் பள்ளியைச் சேர்ந்த அக்ஷித் மாத்தூர், கார்த்திக் ரஞ்ஜன் ஆகியோர், சிறிய கிரகங்களைக் கண்டுபிடித்த மாணவர்கள் பட்டியலில் உள்ளனர்.