உறுதியான இருதயம் வேண்டும்: இன்று சர்வதேச இருதய தினம்
உறுதியான இருதயம் வேண்டும்: இன்று சர்வதேச இருதய தினம்
ADDED : செப் 25, 2011 01:30 AM

உலகிலேயே இருதய நோய்களால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் இதன் காரணமாக 1 கோடியே 73 லட்சம் பேர் இறக்கின்றனர் என, உலக சுகாதார நிறுவனம் 2008ம் ஆண்டு, வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதில் 80 சதவீத மாரடைப்புகள், தடுக்கப்படக் கூடியவை.
இருதய நோய்கள் குறித்தும், இருதயத்தை பாதுகாப்பது பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் கடைசி ஞாயிறு, உலக இருதய தினமாக (செப்., 25) கொண்டாடப்படுகிறது. நைட் ஷிப்ட்கள், முறையற்ற உணவு பழக்க வழக்கம், அதிக நேர பணி, இதனால் குடும்பத்தில் ஏற்படும் நிம்மதியின்மை போன்றவை இருதய நோய் சாத்தியக் கூறுகளை அதிகரிக்கிறது. அதே போல் உலகில் மாரடைப்பால் மரணமடைபவர்களில் 20 சதவீதம் பேர் புகை பிடிப்பவர்கள். மற்றவர்களை விட, புகைபிடிப்பவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். புகை பிடிப்பதால் இருதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. புகை பிடிப்பவர்கள், வெளியிடும் புகையினால் அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமனாதலாலும், சர்க்கரை நோய் காரணமாகவும் இருதய நோய்கள் ஏற்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயால் இருதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் சேதமடைவதால் மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளில் 75 சதவீதம் பேருக்கு இக்குறைபாடு இருக்கிறது.
எப்படி தவிர்ப்பது
* புகை பிடிப்பதற்கு 'நோ' சொல்லுங்கள்.
* உப்பு அதிகம் பயன்படுத்துவதால் ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் இதய நோய் வாய்ப்பு அதிகரிக்கிறது.
* ரத்தத்ததில் கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக வைத்திருக்க வேண்டும்.
* யோகா மற்றும் தியானம் செய்வது நல்லது. உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். முறையான உடற்பயிற்சி, சரியான உணவு பழக்கம், உரிய முறையில் மருத்துவம் எடுத்துக்கொள்வது இருதய நோயிலிருந்து பாதுகாக்கும்.
* பெரும்பாலான நேரங்களில் 'எஸ்கலேட்டர்','லிப்ட்' ஆகியவற்றை பயன்படுத்தாமல், மாடிப்படிகளை பயன்படுத்த வேண்டும். ஒரு நாளுக்கு சராசரியாக 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும்.
* காய்கறிகள், அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும். கொழுப்பு இல்லாத இறைச்சி, மீன், பருப்பு வகையில், ஆலிவ் எண்ணெய், மக்காச்சோளம், சூரிய காந்தி எண்ணெய் வகைகள் ஆகியன, ஓய்வின்றி உழைக்கும் இருதயத்துக்கு பாதுகாப்பளிக்கின்றன.
* சிரிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது, இதய நோயிலிருந்து விடுபடுவதற்கு சிறந்த மருந்து.