சொந்த ஊரில் துர்கா பூஜை: பிரணாப் முகர்ஜி பங்கேற்பு
சொந்த ஊரில் துர்கா பூஜை: பிரணாப் முகர்ஜி பங்கேற்பு
ADDED : அக் 02, 2011 09:08 PM
கோல்கட்டா:துர்கா பூஜையில் கலந்துகொள்வதற்காக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தனது குடும்பத்தினருடன் சொந்த கிராமத்திற்கு வந்தார்.
மேற்கு வங்கம், பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரிதி கிராமம், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் சொந்த ஊர். இங்குள்ள பிரணாபின் மூதாதையர் வாழ்ந்த வீட்டில், ஆண்டுதோறும் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு இடையில், பிரணாப் முகர்ஜி நேற்று தனது குடும்பத்தினருடன், துர்கா பூஜையில் கலந்துக்கொள்வதற்காக, தனது சொந்த ஊருக்கு வந்தார். ஆண்டுதோறும் நான்கு நாட்கள் நடக்கும் இந்த பூஜையில், பிரணாப் முகர்ஜி தவறாமல் கலந்துகொள்கிறார். இதுகுறித்து பிரணாப் கூறுகையில், 'எனது சொந்த ஊரில் ஆண்டுதோறும் நடக்கும் இந்த நிகழ்ச்சியை நான் தவறவிடுவதே இல்லை. இந்த பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம், மக்களுடன் கலந்து பழக வாய்ப்பு ஏற்படுகிறது' என்றார்.இந்த பூஜையில் பிரணாப் மகன் அபிஜித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.'2ஜி' விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சகம், பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய கடித சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை. இச்சர்ச்சையில் சிக்கிய சிதம்பரமும், பிரணாப் முகர்ஜியும், சோனியா தலையீட்டால் அதிலிருந்து விடுபட்டனர். இதையடுத்து, சிதம்பரம் தனது குடும்பத்தாருடன் தேக்கடிக்கு சென்றார். பிரணாப் முகர்ஜி, தனது குடும்பத்தாருடன் துர்கா பூஜையில் பங்கேற்க சொந்த ஊருக்கு வந்துள்ளதும் பரபரப்பாகிவிட்டது.

