ADDED : ஜன 19, 2025 01:55 AM
கரூர்,:கடவூர் பஞ்சாயத்தை இரண்டாக பிரிக்க, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் கடவூர் பஞ்சாயத்து கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,301ஆண்கள், 6,238 பெண்கள் என, 12,539 பேர் வசித்து வருகின்றனர். தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட பஞ்சாயத்துகள், பேரூராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் தொகை, 12 ஆயிரமாக உயர்ந்த நிலையில், கடவூர் இரண்டாகவோ அல்லது பேரூராட்சியாக மாற்றவோ, அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது பஞ்.,தலைவர் பதவி காலம் முடிந்த நிலையில், ஒரு பஞ்., செயலாளர் மட்டுமே இருப்பதால், அவரே அனைத்து பணிகளையும் கவனிக்க வேண்டி உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப, பணியாளர்கள் இல்லாததால், குடிநீர் வினியோகம் உள்பட அடிப்படை வசதிகளை உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை.
இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். கடந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன், இரண்டாக பிரிக்க வேண்டும் என, பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.