ADDED : ஆக 14, 2011 10:39 PM
சென்னை:நில மோசடி வழக்கில், சேலம் போலீசாரிடம் சிக்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது, சென்னை புறநகர் போலீசிலும், ஒரு நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் முன் ஜாமின் பெற்று, அவர் தினசரி குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில், கையெழுத்து போட்டும் வந்துள்ளார்.பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை, வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் அங்குராஜ். இவருக்குச் சொந்தமான 2.25 ஏக்கர் நிலத்தை, கடந்த சில மாதங்களுக்கு முன், பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் விலைக்கு கேட்டார். நிலத்தை விற்க அங்குராஜ் மறுத்து விட்டார். இந்நிலையில், போலி ஆவணம் தயாரித்து அந்த இடத்தை மார்ட்டின் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. அங்குராஜ் கொடுத்த புகாரின்படி, நசரத்பேட்டை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன், மார்ட்டின், பெஞ்சமின், முத்துப்பாண்டி, அவரது மனைவி சகாயமேரி, ரஞ்சித்குமார், முகுந்தன் ஆகியோர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு, சென்னை புறநகர் மத்திய குற்றப்பிரிவு (1)க்கு மாற்றப்பட்டது. இது சம்பந்தமாக, போலீசார் தேடி வருவதை அறிந்த மார்ட்டின் மற்றும் பெஞ்சமின், சென்னை ஐகோர்ட்டில், நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் பெற்றனர்.தினசரி காலை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் மார்ட்டின், பெஞ்சமின் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர். கடந்த 13ம் தேதி இவர்கள் ஆஜராகவில்லை. இது குறித்து விசாரித்த போது, சேலம் போலீசார், நில மோசடி வழக்கு சம்பந்தமாக மார்ட்டினை கைது செய்து அழைத்துச் சென்றது தெரியவந்தது.