சேதமடைந்த தண்டவாளத்தில்பராமரிப்பு பணி: டி.எஸ்.பி.,ஆய்வு
சேதமடைந்த தண்டவாளத்தில்பராமரிப்பு பணி: டி.எஸ்.பி.,ஆய்வு
ADDED : ஜன 19, 2025 01:54 AM
சேதமடைந்த தண்டவாளத்தில்பராமரிப்பு பணி: டி.எஸ்.பி.,ஆய்வு
கரூர்,:கரூர் அருகே, சேதமடைந்த ரயில்வே தண்டவாளத்தில், பராமரிப்பு பணிகள் நேற்று நடந்தது.
கோவையில் இருந்து, கரூர் வழியாக நேற்று முன்தினம் காலை, 11:45 மணிக்கு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், திண்டுக்கல் ரயில்வே பாதையில், தான்தோன்றிமலை- வெள்ளியணை இடையே சென்று கொண்டிருந்தது.
அப்போது, தான்தோன்றிமலை ரயில்வே கேட் அருகே, தண்டவாளத்தில் மர்ம நபர்களால் வைக்கப்பட்ட இரும்பு துண்டால், தண்டவாளம் சேதமடைந்தது. இதுகுறித்து, ரயில் டிரைவர் கொடுத்த தகவல்படி, தண்டவாளம் உடனடியாக சரி செய்யப்பட்டு, வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், சேதமடைந்த ரயில்வே தண்டவாளத்தின் பகுதி நேற்று காலை நீக்கப்பட்டு, 15 மீட்டர் அளவில் புதிய தண்டவாளம் பொருத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடந்தன. பராமரிப்பு பணிகளை, திருச்சி ரயில்வே கோட்ட டி.எஸ்.பி., சக்கரவர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கரூர் ரயில்வே இன்ஸ்பெக்டர் ஜாக்குலின், எஸ்.ஐ., மகேஸ்வரன் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.