மும்பை விமான நிலைய ஓடுதளம் தொடர்ந்து 3வது நாளாக மூடல்
மும்பை விமான நிலைய ஓடுதளம் தொடர்ந்து 3வது நாளாக மூடல்
ADDED : செப் 04, 2011 11:00 PM

மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகி சகதியில் சிக்கி விபத்துக்குள்ளான, துருக்கிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தை மீட்கும் பணி நேற்றும் தொடர்ந்தது.
இதனால், விமான நிலையத்தின் பிரதான ஓடுதளம், மூன்றாவது நாளாக நேற்றும் மூடப்பட்டிருந்தது.
துருக்கி நாட்டைச் சேர்ந்த துருக்கிஷ் ஏர்லைன்ஸ் விமானம், கடந்த வெள்ளியன்று மும்பை சர்வதேச விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதையில் தரையிறங்கியது. அப்போது, திடீரென ஓடுபாதையில் இருந்து விலகி, சகதியில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும், சகதியில் சிக்கிய விமானத்தை மீட்கும் பணிகள், கடந்த மூன்று நாட்களாக தொடர்கின்றன. இந்தப் பணிகளால், விமான நிலையத்தின் பிரதான ஓடுதளம் மூன்றாவது நாளாக நேற்றும் மூடப்பட்டிருந்தது. விமான நிலைய செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், ''34 இன்ஜினியர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சகதியில் சிக்கிய துருக்கிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும், விமான நிலையப் பணிகளில், எந்தப் பாதிப்பும் இல்லை. விமானங்கள் அனைத்தும், வழக்கமான நேரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன'' என்றார்.