ADDED : ஆக 01, 2011 11:29 PM

திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்களை, சுப்ரீம் கோர்ட் நியமித்த ஐந்து பேர் கொண்ட குழு, நேற்று காலை முதல் மதிப்பீடு செய்யும் பணியைத் துவக்கியது.
ஆனால், நேற்று நடந்த பணியின் போது, பொக்கிஷங்கள் மற்றும் மதிப்பீடு செய்யும் பணி ஆகியவற்றை வீடியோவில் பதிவு செய்யவில்லை.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், உலக பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தங்கம், வெள்ளி, வைர நகைகள், பொருட்கள் என, ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் பல்வேறு பொக்கிஷங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்காக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் நியமித்த ஏழு பேர் கொண்ட குழு, கோவிலில் உள்ள ஆறு பாதாள அறைகளில் ஐந்து அறைகளைத் திறந்து பார்த்து ஆய்வு செய்தது. ஆனால், ஆறாவது அறை (பி அறை)யை மட்டும் திறக்கவில்லை.
இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், 'மறு உத்தரவு வரும் வரையில் பி அறையை திறக்கக்கூடாது' என கூறியிருந்தது. இந்நிலையில், பொக்கிஷங்களை நேரில் பார்வையிட்டு அதன் மதிப்புகளை கணக்கிட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வசதியாக, ஐந்து பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. இக்குழுவுக்கு தேசிய அருங்காட்சியக துணைவேந்தர் டாக்டர் ஆனந்தபோஸ் தலைவராகவும், தொல்லியல் துறை பாதுகாப்புப் பிரிவு தலைவர் வி.எம்.நாயர், பத்மநாப சுவாமி கோவில் செயல் அலுவலர் வி.கே. அரிக்குமார், இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை பிரதிநிதி பி.வி.ராஜூ, ரிசர்வ் வங்கி பிரதிநிதி விகாஸ் சர்மா ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
இக்குழு நேற்று முன்தினம், திருவனந்தபுரத்தில் உள்ள கிருஷ்ண விலாசம் கோட்டையில் ஆலோசனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி, நேற்று காலை முதல் பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களை பார்வையிட அங்கு சென்றனர். கோவிலில் இதுவரை திறக்கப்பட்டுள்ள ஐந்து அறைகளிலும் இக்குழு நேரில் பார்வையிட்டு, அங்குள்ள பொக்கிஷங்களின் மதிப்பு, அவை எக்காலத்தவை, அவற்றின் தன்மை போன்ற பல்வேறு விளக்கங்களை ஆராயும். தற்போது வந்துள்ள குழுவும், பாதாள அறைகளில் இதுவரை திறக்கப்படாமல் உள்ள ஆறாவது அறை (பி அறை)யை திறக்காது எனக் கூறப்படுகிறது. இப்பணியின் போது, தடை ஏதும் வராமல், தினமும் மதிப்பீடு பணிகளை நடத்த கமிட்டி முடிவு செய்துள்ளது. மதிப்பீடு பணிகளின் ஒரு பகுதியாக, அப்பொக்கிஷங்களை எவ்வாறு நவீன முறையில் பாதுகாப்பது என்பது குறித்தும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ள அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று துவங்கிய பணிகளை வீடியோ மூலம் படமெடுப்பது நடக்கவில்லை.