ADDED : செப் 16, 2011 11:21 PM

புதுடில்லி: 'ஊழலுக்கு எதிரான எங்களின் போராட்டத்துக்கு, காங்., பொதுச் செயலர் ராகுல் ஆதரவு தருவார் என, நினைத்தோம்.
ஆனால், போராட்டத்தை அவர் விமர்சித்தது, எங்களுக்கு ஆச்சர்யம் அளித்தது' என, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிரண் பேடி கூறினார்.
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியும், ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய அன்னா ஹசாரேயின் ஆதரவாளருமான கிரண் பேடி கூறியதாவது: காங்., பொதுச் செயலர் ராகுல் இளைஞர் என்பதால், ஊழலுக்கு எதிரான எங்களின் போராட்டத்தை புரிந்து கொண்டு, அதற்கு ஆதரவு தருவார் என, நினைத்தோம். ஆனால், ஆதரவு தருவதற்கு பதிலாக, எங்களின் போராட்டத்தை விமர்சித்தார். இதை அவரிடமிருந்து, நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவரின் நடவடிக்கை எங்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்தது. நீதித் துறை நம்பகத்தன்மை தொடர்பான மசோதாவை, பார்லிமென்டில் அரசு கொண்டு வந்தால், நீதித் துறையை லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற, எங்களின் கோரிக்கையை கைவிடலாம் என, நினைத்தோம். ஆனால், அதுபோல் எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு கிரண் பேடி கூறினார்.