ADDED : செப் 27, 2011 01:07 AM

புதுடில்லி : மத்திய நிதியமைச்சகம், ப.சிதம்பரம் குறித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம், கவலைப்படும் அளவுக்கு பெரிய விஷயமல்ல என, சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
'அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கடிதம் மூலம், '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் அமைச்சர் சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. எனவே, அவர் பதவி விலக வேண்டும்' என, பா.ஜ., உட்பட எதிர்க்கட்சிகள் பல கோரி வருகின்றன.
இது குறித்து, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் குறிப்பிடுகையில்,'நிதியமைச்சகம், பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கவலைப்படும் அளவுக்கு எந்த விஷயமும் இடம் பெறவில்லை. நானும் இந்த கடிதத்தைப் பார்த்தேன். கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் தங்கள் தரப்பு அறிக்கையை பிரதமர் அலுவலகத்தின் பார்வைக்கு அனுப்புவது வழக்கமான நடைமுறை தான். ஊடகங்கள் தான் இதை பெரிதுபடுத்துகின்றன. வெளிநாட்டு சட்ட நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிப்பது குறித்து, நம் நாட்டு வழக்கறிஞர்கள் சங்கத்துடன் கலந்து ஆலோசித்து தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்' என்றார்.