ADDED : ஆக 01, 2011 10:46 PM
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில், தனியார் வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தை திருடர்கள் தூக்கிச் சென்று விட்டனர்.ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில், ஆதிஷ் மார்க்கெட் பகுதியில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்.,மையம் உள்ளது.
நேற்று அதிகாலை இங்கு வந்த திருடர்கள், ஏ.டி.எம்.,மிஷினை தூக்கிச் சென்று விட்டனர். இந்த இயந்திரத்தில், 10.5 லட்ச ரூபாய் பணம் இருந்தது. இது குறித்து, தடயவியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதே போன்ற சம்பவம், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது.மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே, சிகாலி என்ற பகுதி உள்ளது. இங்கு மாநில அரசின், போக்குவரத்து கழக அலுவலகம் அமைந்துள்ள இடத்துக்கு அருகே, பிரபல வங்கி ஒன்றின், ஏ.டி.எம்., செயல்பட்டு வந்தது.அந்த ஏ.டி.எம்.,மில், கொள்ளையடிக்க சில திருடர்கள் திட்டமிட்டனர். அதிகாலை, 2 மணிக்கு, மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், அந்த ஏ.டி.எம்.,முக்குள் புகுந்தனர். அங்கு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதை, அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தனர்.அங்கிருந்த விளம்பர பலகை ஒன்றின் மூலம், ஏ.டி.எம்., மின் நுழை வாயிலில் பொருத்தப்பட்டுள்ள கேமராவை மறைத்தனர். இருந்தாலும், விளம்பரப் பலகையை வைத்து, கேமராவை மறைத்தது, அதில் பதிவாகி இருக்கலாம் என, சந்தேகப்பட்டனர். இதனால், ஏ.டி.எம். இயந்திரத்தையே அலேக்காக தூக்கிச் சென்றனர். இதில் 7.6 லட்சம் ரூபாய் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.