ADDED : ஆக 22, 2011 11:22 PM

குருவாயூர்:கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். காலை 9 மணி முதல் மாலை 4 வரை பக்தர்களுக்கு விருந்து உபசார நிகழ்ச்சி நடந்தது. ஏழு லட்ச ரூபாய்க்கும் மேல் நெய் அப்பம், பால் பாயச பிரசாதம் விற்பனையானது.
கேரளா திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில், ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இவ்வாண்டுக்கான உற்சவம் நேற்று முன்தினம் கோவிலில் நடந்தது.விஸ்வரூப தரிசனத்திற்காக, அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தபோதே, திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில், சுவாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். கோவிலில், காலையில் பட்டு வஸ்திரம் தரித்து, கிங்கிணி அணிந்து, தங்கத்தினாலான புல்லாங்குழல், மயில் சிறகுகளால் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணன் மூலவர் சிறிது நேரத்திற்கு பின், பாலகிருஷ்ணனாக சந்தன காப்பு அணிவிக்கப்பட்டு காட்சி அளித்தார்.
உச்சிக்கால பூஜையின் போது அக்காட்சி மாற்றப்பட்டு, வாசுதேவர் யமுனை நதியில் தலையில் வைத்திருந்த கூடையில் குழந்தை கண்ணனை சுமந்து செல்வது போல், அலங்கரிக்கப்பட்டிருந்த மூலவர் பக்தர்களை கவர்ந்தார். காலை முதலே கண்ணனை போலவும், கோபியரைப் போலவும் உடையணிந்து வந்த திரளான குழந்தைகளை கண்டு குருவாயூர் துவாரகையாக மாறி விட்டதோ என வியக்க வைத்தது.
கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி, கோவிலில் முக்கிய நெய்வேத்தியமாக வழங்கப்பட்ட நெய் அப்பம் மற்றும் பால் பாயசம் போன்றவற்றை பக்தர்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர். இவ்வாறு நெய் அப்பம் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 808 ரூபாய்க்கும், பால் பாயசம் நான்கு லட்சத்து 11 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் என, மொத்தம் ஆறு லட்சத்து 74 ஆயிரத்து 968 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த உற்சவத்தின்போது, இந்தளவுக்கு பிரசாதங்கள் விற்பனையானது சாதனை அளவாக கருதப்படுகிறது. உற்சவத்தை ஒட்டி, கோவிலில் காலை 9 மணிக்கு துவங்கிய பிறந்தநாள் விருந்து மாலை 4 மணி வரை நீண்டது. இதில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு உணவருந்தினர்.தங்கத்தினாலான உற்சவ மூர்த்தியும் யானை மீது கோவிலை வலம் வந்தார். கலை நிகழ்ச்சிகளும், உறியடி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

