கவர்னரை திரும்பப் பெற பா.ஜ., வலியுறுத்தல்:ஜனாதிபதியிடம் புகார்
கவர்னரை திரும்பப் பெற பா.ஜ., வலியுறுத்தல்:ஜனாதிபதியிடம் புகார்
ADDED : செப் 03, 2011 12:37 AM

புதுடில்லி:'குஜராத்தில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் அமைத்தது முற்றிலும் சட்டத்தை மதிக்காத செயல்.
லோக் ஆயுக்தா நீதிபதியை நியமித்த குஜராத் மாநில கவர்னரை திரும்பப் பெற வேண்டுமென, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை நேரில் சந்தித்து, பா.ஜ., தலைவர் அத்வானி வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில் பா.ஜ., எம்.பி.,க்கள் ரகளையில் இறங்கினர். ராஜ்யசபாவில் இப்பிரச்னை பெரிய அளவில் வெடித்ததால், திரும்பத் திரும்ப சபை ஒத்தி வைக்கப்பட்டது. அலுவல்கள் எதுவும் நடைபெறாமலேயே நாள் பூராவும் ஒத்தி வைக்கப்பட்டது.
குஜராத் லோக் ஆயுக்தா நீதிமன்றத்துக்கு நீதிபதியை அம்மாநில கவர்னர் கமலா தேவி நியமித்துள்ள விவகாரம், கடந்த செவ்வாய் கிழமை பார்லிமென்டில் வெடித்தது. பார்லிமென்டின் இரு சபைகளையுமே பா.ஜ., எம்.பி.,க்கள் கிடுகிடுக்க வைத்துவிட்டனர். இதனால், அன்றைய தினம் முழுவதும் இரு சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.பார்லிமென்டின் முன் இருக்கும் காந்தி சிலையின் முன்பாகக் கூடி, அத்வானி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தலைமையில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி தலைமையிலான குழுவினர் நேற்று பிற்பகல் 1.00 மணிக்கு ராஷ்டிரபதி பவனுக்கு வந்தனர்.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்தித்து, மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், 'அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ள குஜராத் கவர்னரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.பின்னர் நிருபர்களிடம் பேசிய அத்வானி கூறுகையில், 'அரசியல் சட்டம் 163வது விதியின்படி, கவர்னர், மாநில முதல்வரின் ஆலோசனையின்றி முடிவு எடுக்க முடியாது என்று உள்ளது. மேலும், குஜராத் மாநில லோக் ஆயுக்தா சட்டப்படி விதி 3(1)ன் கீழ், ஐகோர்ட் தலைமை நீதிபதி, மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரை கலந்தாலோசித்து, லோக் ஆயுக்தா கோர்ட்டை அமைக்க வேண்டும் என்று உள்ளது.
மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான், லோக் ஆயுக்தாவை நியமிக்க வேண்டும் என அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனால், அந்த சட்டம் மீறப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு எவ்வித வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அடிப்படை கொள்கையை குஜராத் கவர்னர் மீறியுள்ளார். எனவே, அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்' என்றார்.
இந்த பிரச்னை கோர்ட்டில் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். இருப்பினும், அருண் ஜெட்லி, ஜனாதிபதியிடம் இது குறித்து விளக்கம் அளிக்கையில், 'இந்த விவகாரம் கோர்ட்டில் இருந்தாலும், கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கை வலுவாக உள்ளதால், இதில் மத்திய அரசு தலையிட வேண்டும்' என்றார்.
பார்லியில் அமளி: ரம்ஜான் மற்றும் விநாயகர் சதுர்த்தி என, இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் நேற்று பார்லிமென்ட் கூடியது. காலையில் ராஜ்யசபா கூடியதுமே ரகளை ஆரம்பமாகிவிட்டது. கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்வதற்கு, சபைத் தலைவர் அன்சாரி முயன்றார். ஆனால், எதிர்க்கட்சியினரான பா.ஜ., எம்.பி.,க்கள் விடவில்லை.
குஜராத்தில் ஜனநாயகத்தின் மீது சர்வாதிகாரம் தாக்குதல் நடத்தியுள்ளது என்று கோஷங்கள் எழுப்பினர். அவர்களை அமைதி காக்கும்படி பல முறை கேட்டுக் கொண்டும் கூட நிலைமை கட்டுப்படவில்லை. இதனால், சபையை 15 நிமிடங்களுக்கு அன்சாரி ஒத்தி வைத்தார். இந்த இடைவேளைக்கு பிறகு சபை கூடியபோதும், அதே பிரச்னையை பா.ஜ., விடாமல் எழுப்பியது.கவர்னர் கமலா தேவியை திரும்பப் பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். கூட்டாட்சி தத்துவத்திற்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதாகவும், ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமென்றும் கடும் ரகளையில் இறங்கினர்.
இதனால், கூச்சல் குழப்பமாக இருந்தது. இதனால், கேள்வி நேரம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு, சபை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.பிறகு சபை கூடியபோது, ஜீரோ நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், அதுவும் நிறைவேறாதபடி நிலைமைகள் இருந்தன. இதனால், சபை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கூடியபோதும் இதே பிரச்னை வெடிக்கவே, வேறு வழியின்றி நாள் முழுவதும் ராஜ்யசபா ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதே பிரச்னை லோக்சபாவிலும் வெடித்தது. கேள்வி - பதில் நேரம் சுமுகமாக நடந்து முடிந்தாலும், அதற்கு பிறகு நடந்த ஜீரோ நேரத்தில், குஜராத் பிரச்னை கிளப்பப்பட்டு அங்கும் கூச்சல், குழப்பம் நிலவியதைத் தொடர்ந்து, சபை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.-நமது டில்லி நிருபர்-