ADDED : செப் 04, 2011 11:01 PM

மூணாறு: மூணாறில் நிலச்சரிவு ஏற்பட்டு, நான்கு பேர் பலியான இடத்தில், மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
மூணாறு அந்தோணியார் காலனியில், 2006, ஜூலை 26ல், நிலச்சரிவு ஏற்பட்டு, நான்கு பேர் பலியாயினர். அங்கு, மண்ணின் தன்மை குறித்து நடந்த ஆய்வில், மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்தது. இதனால், 2007ல், ஐ.எஸ்.ஆர்.ஓ., மற்றும் அமிர்தா அறக்கட்டளை சார்பில், நில அதிர்வுகளை முன் கூட்டியே அறியும், 'வின் சோக்' கருவி பொருத்தப்பட்டது. கொல்லம் அமிர்தா அறக்கட்டளை மையத்தில் உள்ள கன்ட்ரோல் அறை மூலம், இப்பகுதியில் பூமிக்கு அடியில் நிகழும் மாற்றங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது, மூணாறில் ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழையால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மழை தொடர்ந்தால், அந்தோணியார் காலனி உட்பட, சில பகுதிகளில், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக, 'வின்சோக் கருவி' மூலம், கன்ட்ரோல் அறையில் நேற்று முன்தினம் இரவு, 8 மணிக்கு, பதிவானது. இத்தகவல் தெரிவிக்கப்பட்டதால், அந்தோணியார் காலனி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.