ADDED : செப் 04, 2011 10:53 PM

புதுடில்லி: 'நாட்டில் 50 சதவீத விவசாயிகள் கடன் சுமையில் மூழ்கியுள்ளனர்' என, மத்திய அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் இது குறித்து கடந்த வாரம் பார்லிமென்டில் கூறியதாவது: நாடு முழுவதும், ஒன்பது கோடி விவசாயிகள் கடன் சுமையில் தத்தளிப்பதாக தேசிய ஆய்வு தெரிவிக்கிறது. ஆந்திராவில் அதிக பட்சமாக 49 லட்சம் பேர் (82 சதவீதம்) கடன் பட்டுள்ளனர். தமிழகத்தில் 74 சதவீதம் பேரும், பஞ்சாபில் 65 சதவீதம் பேரும், மகாராஷ்டிராவில் 54 சதவீதம் பேரும் கடன்காரர்களாக உள்ளனர்.
விவசாயிகளை கடன் சுமையிலிருந்து மீட்க, அவர்களது கடனை தள்ளுபடி செய்யும் திட்டம், 2008ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், மூன்று கோடியே 69 லட்சம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு 65 ஆயிரத்து 318 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. கடன் தந்த நிறுவனங்களுக்காக மத்திய அரசு 51 ஆயிரத்து 340 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.