பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும்: வேட்பு மனு தாக்கல் செய்த பின் அனுராக் தாக்கூர் பேட்டி
பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும்: வேட்பு மனு தாக்கல் செய்த பின் அனுராக் தாக்கூர் பேட்டி
ADDED : மே 13, 2024 02:02 PM

சிம்லா: ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று (மே 13) வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர், 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ., அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும் என நிருபர்கள் சந்திப்பில் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு வரும் ஜூன் 1ம் தேதி (7வது கட்டம்) தேர்தல் நடக்க உள்ளது. ஹமிர்பூர் தொகுதி மக்களை சந்தித்து, அனுராக் தாக்கூர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
வேட்பு மனு
இந்நிலையில், இன்று (மே13) மத்திய அமைச்சரும், ஹமிர்பூர் லோக்சபா தொகுதியின் பா.ஜ., வேட்பாளருமான அனுராக் தாக்கூர் தனது தந்தையும், ஹிமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வருமான பிரேம் குமார் துமாலுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மீண்டும் பா.ஜ., ஆட்சி
பின்னர் நிருபர்கள் சந்திப்பில் அனுராக் தாக்கூர் கூறியதாவது: ஐந்தாவது முறையாக என் மீது நம்பிக்கை வைத்து போட்டியிட வாய்ப்பளித்த பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா மற்றும் கட்சியின் தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஹமிர்பூர் லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளேன்.
400 தொகுதிகள்
நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம். ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 4 லோக்சபா தொகுதிகள் உட்பட மொத்தம் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ., அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.