கார் விபத்து சென்னை பெண் உட்பட 4 இந்தியர் அமெரிக்காவில் பலி
கார் விபத்து சென்னை பெண் உட்பட 4 இந்தியர் அமெரிக்காவில் பலி
ADDED : செப் 05, 2024 12:43 AM

டெக்சாஸ்: அமெரிக்காவில் ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய கோர விபத்தில், காரில் சென்ற சென்னையைச் சேர்ந்த இளம்பெண் உட்பட நான்கு இந்தியர்கள் தீயில் கருகி பலியாகினர்.
சென்னையைச் சேர்ந்த தர்ஷினி வாசுதேவன், தெலுங்கானாவைச் சேர்ந்த ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி, பரூக் ஷேக், லோகேஷ் பலசார்லா ஆகியோர் கடந்த 30ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து, அர்கான்சாசில் உள்ள பெண்டான்வில்லி நோக்கி சொகுசு கார் ஒன்றில் பயணித்தனர்.
டெக்சாஸ் மாகாணம் காலின்ஸ் கவுன்டி பகுதியில், அன்னா நகரில் உள்ள சாலையில் சென்றபோது, பின்னால் வந்த லாரி, கார் மீது வேகமாக மோதியது.
இதில் தாறுமாறாக ஓடிய கார் மீது, பின்னால் வந்த நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதின. இந்த கோர விபத்தில் சாலையில் கவிழ்ந்த கார் தீப்பிடித்து எரிந்தது.
அதில் இருந்த நால்வரும் தீயில் கருகி உயிரிழந்தனர். 'கார்பூலிங்' எனப்படும், காரை பகிர்ந்து பயணிக்கும் முறையில் இவர்கள் சென்றதால், நால்வரும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த தர்ஷினி வாசுதேவன், பிரிஸ்கோ பகுதியில் தங்கியிருந்தபடி டெக்சாஸ் பல்கலையில் படித்து வந்தார்.
அவருக்கு வேலை கிடைத்ததை அடுத்து, உறவினரை பார்க்க காரில் சென்றுள்ளார்.
ஹைதராபாதைச் சேர்ந்த லோகேஷ் பலசார்லா, மனைவியை சந்திக்க பென்டன்வில் சென்றார். ஆர்யன் ரகுநாத், டெல்லாசில் உள்ள தன் உறவினரை பார்த்துவிட்டு நண்பர் ஷேக் என்பவருடன் திரும்பியுள்ளார். இவர்கள் இருவரும் ஹைதராபாதைச் சேர்ந்தவர்கள்.
இந்த விபரங்கள் அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தீயில் கருகியதால் நான்கு பேரின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பற்கள், எலும்புகள் ஆகியவற்றை வைத்து, மரபணு சோதனை வாயிலாக உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக தெரிவித்த போலீசார், அதன்பின் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என கூறினர்.