-திஹாரில் அமைச்சருக்கு அனுமதி ரத்து ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
-திஹாரில் அமைச்சருக்கு அனுமதி ரத்து ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
ADDED : ஏப் 25, 2024 02:16 AM
புதுடில்லி:“டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அமைச்சர் அதிஷிக்கு வழங்கி இருந்த அனுமதியை திஹார் சிறை நிர்வாகம், கடைசி நேரத்தில் ரத்து செய்தது,” என, ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, சஞ்சய் சிங் கூறியதாவது:
டில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் மற்றும் கல்வித் துறை அமைச்சர் அதிஷி ஆகியோர் திஹார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், அதிஷிக்கு வழங்கி இருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டதாக நேற்று காலை 9:30 மணிக்கு தெரிவிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் கெஜ்ரிவால் தன் மனைவியைக் கூட சந்திக்க அனுமதி மறுக்கப்படும். பிரிட்டிஷ் ஆட்சியில் கூட இதுபோன்று அட்டூழியம் நடந்தது இல்லை. இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா ஆகியோருக்கு கடிதம் எழுதுவேன்.
பயங்கரவாதிகள் அல்லது கடுமையான குற்றவாளிகளை நடத்துவதை விட மோசமாக கெஜ்ரிவால் நடத்தப்படுகிறார். வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினரைக் கூட ஜன்னலுக்கு வெளியே நின்றுதான் சந்திக்க முடிகிறது.
அமைச்சர் அதிஷிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ததற்கு எந்தக் காரணமும் கூறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

